தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 februari 2012

சிங்கள தேசத்துக்கு பேராசிரியர் றோகான் குணரட்னவின் அறிவுரை!!



இந்தியாவுக்கு விரோதமூட்டாதவாறு வெளியுறவுக் கொள்கையை அமைத்துக் கொள்ளவதோடு, விடுதலைப்புலிகள் மீள ஒருங்கிணைந்து தங்களது செயற்பாடுகளுக்கு தமிழகத்தை ஒரு தளமாகப் பாவிப்பதை தடுக்க, தமிழ்நாட்டுடன், இலங்கை நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என பேராசிரியர் றோகான் குணரட்ன இலங்கை ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 
இலங்கை  மேற்குலக நாடுகளுடனான அதன் உறவுகளையும் மீட்டெடுப்பதோடு, விடுதலைப் புலிகள் மீள்குழுக்களாக ஒருங்கிணைவதற்கு ஏற்ற சொர்க்கபுரியாக மேற்குலகம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்கத்தைய அரசியல்வாதிகளுக்கு நிதி வழங்குவதாலும், மற்றும் மனித உரிமைத் தொண்டு நிறுவனங்களிடம் பிரச்சாரம் செய்வதனாலும், கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வழி தேடி வருகின்றன என தெரிவித்துள்ளார்.
சிங்கள தேசத்தின் நலன்களை முன்னிறித்தி கருத்துக்களை முன்வைத்து வரும் பேராசிரியர் றோகான் குணரட்ன அவர்கள் அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கான சவால்கள் என்ற கருப்பொருளில் சிங்கள தேசத்துக்கு சில அறிவுரைகளை முன்வைத்துள்ளார்.
அதில் இருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றோம்:
- நாங்கள் இலங்கையின் அடுத்துள்ள அயல்நாடான இந்தியாவுக்கு விரோதமூட்டாதவாறு ஒரு வெளியுறுவுக் கொள்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இலங்கை அதன் கூட்டுச்சேரா ஒழுக்கிலிருந்து விலகி தன்னை மேற்குடன் பொருத்திக் கொண்டதன் பின்னர், சோவியத்தின் செல்வாக்குப் பெற்ற இந்தியா 1983 – 1987 வரை, ஒரு டசின் வரையான  இலங்கை பயங்கரவாதக் குழுக்களுக்கு அனுசரணை வழங்கியது.
இலங்கை, அதன் சிறுபான்மைத் தமிழ் சமூகத்துடனான உறவை நிர்வகிப்பதற்கு எவ்வளவுக்கு எவ்வளவு தோல்வியடைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது பூகோள அரசியலில் பாதிப்பை எதிர்கொள்ள நேரும். வரலாறு மிகவும் கொடூரமானது, இலங்கை புத்தி சாதுரியமாக அதன் வெளியுறவுக் கொள்கையை முன்னேற்றாவிட்டால், அது அதன் கடந்தகால வரலாற்றையே மீண்டும் முன்னெடுக்க நேரிடும்.
- சீனாவின் பொருளாதார உதவிகள் இலங்கைக்கு மிக அதிகமாகக் கிடைத்து வருகின்றன, இலங்கை, சீனாவின் நெருங்கிய போட்டியாளரான இந்தியாவுடனான அதன் பலமான அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை இந்தியாவுடன் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைந்து தங்களது செயற்பாடுகளுக்கு தமிழ்நாட்டை ஒரு தளமாகப் பாவிப்பதை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டு அரசாங்கத்துடன், நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
ஏழ்மையின் பாதிப்பும் மற்றும் நிறைந்து வழியும் ஊழலும் உள்ள ஒரு நாடான இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு ஒரு மாதிரி வடிவமாக அமையாது. எனினும் புதுடில்லி மற்றும் சென்னையுடன் வலுவான மற்றும் ஆரோக்கியமான நல்லுறவுகளைப் பேணவேண்டியது இலங்கையின் எதிர்கால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்பனவற்றுக்கு அத்தியாவசியமானது.
- மேலும் இலங்கை மேற்குடனான அதன் உறவுகளையும் மீட்டெடுக்க வேண்டும், இன்று எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்கள் மீள்குழுக்களாக ஒருங்கிணைவதற்கு ஏற்ற சொர்க்கபுரியாக மேற்கு உள்ளது.
இதன் நேரடி விளைவாக புலம் பெயர்ந்தவர்களின் வாக்குகளை மோசடி செய்வதன் மூலமும், மேற்கத்தைய அரசியல்வாதிகளுக்கு நிதி வழங்குவதாலும், மற்றும் மனித உரிமைத் தொண்டு நிறுவனங்களிடம் பிரச்சாரம் செய்வதனாலும், கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்கள் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வழி தேடி வருகின்றன.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் மில்லியன் கணக்கான பொதுமக்கள் மடிந்துள்ளதுடன் ஒப்பிடும்போது, இலங்கை மீது பிரயோகிக்கப்படும் மேற்குலகின் அழுத்தம் அரசியல் காரணமாகவே தவிர, மனித உரிமைகளுக்காக அல்ல.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சரகம் புலம்பெயர் விவகாரப் பிரிவு, அரசு சாரா நிறுவனங்கள் ஆலோசனைப் பிரிவு, மற்றும் பொது இராஜதந்திரப் பிரிவு போன்றவற்றை உருவாக்கி தவறான தகவல்களை எதிர்ப்பதோடு மற்றும் இலங்கையின் யாதார்த்த நிலைமைகளை முன்னேற்றவும் வேண்டும்.
இவ்வாறு சிங்கள தேசத்துக்கு பேராசிரியர் றோகான் குணரட்ன அறிவுரை வழங்கியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten