தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சமமானவராக நடத்தப்பட வேண்டும் என்கிற ஆசையால்தான் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணா இயக்கத்தில் இருந்து உடைந்தார் என்று அமெரிக்காவுக்கு சொல்லி இருக்கின்றார் மட்டக்களப்பு மறை மாவட்ட ரோமன் கத்தோலிக்க ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை. புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா உடைந்தமை குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருக்கு சொந்த அபிப்பிராயத்தை சொன்னபோது ஆயர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்.
சுய நல ஆசையினாலேயே கருணா இயக்கத்தில் இருந்து உடைந்து உள்ளார், மாறாக கிழக்கு மாகாண தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இயக்கத்தில் இருந்து உடையவில்லை. பிரபாகரனுக்கு வழங்கப்படுகின்ற சம அந்தஸ்து அவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிற ஆசையில் இயக்கத்தை விட்டு உடைந்து உள்ளார் என ஆயர் கூறி இருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைத்து உள்ளன. பிரபாகரனின் மரணத்தை விரும்பிய அமெரிக்கா!! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்படுகின்றமை அல்லது சரண் அடைகின்றமை அமெரிக்காவுக்கும் மகிழ்ச்சி கொடுக்கின்ற விடயம் ஆகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தபோது ரொபேட் ஓ பிளேக் இந்திய வெளியுறவு அமைச்சின் கூட்டுச் செயலாளராக இருந்த ரி. எஸ். திருமூர்த்திக்கு தெரிவித்து இருக்கின்றார்.
இந்தியாவுக்கு விஜயம் ஒன்று மேற்கொண்டு சென்று இருந்த பிளேக் டில்லியில் 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி திருமூர்த்தியுடன் பேச்சு நடத்தி இருக்கின்றார்.
பிரபாகரனை முடித்துக் கட்ட வேண்டும் என்று ராஜபக்ஸ விரும்புகின்றார், ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலிகள் இயக்கத்துக்கு தொடர்ச்சியாக நிதி கிடைத்த வண்ணம் உள்ளது, இந்நிதியை கிடைக்காமல் செய்ய வேண்டும், அப்போதுதான் புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உந்தப்படுவார்கள் என்று ஒரு கட்டத்தில் திருமூர்த்தி கூறி இருக்கின்றார்.
பிரபாகரன் கொல்லப்படுகின்றமையை அல்லது சரண் அடைகின்றமையை காண்பதில் அமெரிக்காவும் மகிழ்ச்சியாகதான் உள்ளது என்று பதிலுக்கு முக்கியமாக சொல்லி இருக்கின்றார் பிளேக்.
டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன. புலிகளிடம் இருந்து மஹிந்தரை பாதுகாக்க ஆலோசனை வழங்கிய அமெரிக்கா!! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தாக்குதல்களில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தப்புகின்றமைக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா சொல்லிக் கொடுத்து உள்ளது.
2006 ஆம் ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்துக்கு சென்று இருந்தார்.
இவருக்கு அங்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்து அசந்து போனார்.
இந்நிலையில் நாட்டில் சொந்த பாதுகாப்பை வலுப்படுத்த எண்ணினார்.
இதற்காக வெளிநாட்டு இராஜதந்திர மட்டத்தில் இருந்து ஆலோசனைகள் பெற முடிவெடுத்தார்.
இச்சூழலில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தொலைபேசி மூலம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்குடன் தொடர்பு கொண்டு ஜனாதிபதி மஹிந்தரின் சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம்? என்று வினவி இருக்கின்றார்.
தூதுவரும் பொருத்தமான ஆலோசனைகளை கூறி இருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைத்து உள்ளன. |
Geen opmerkingen:
Een reactie posten