தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 maart 2013

இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் ஏப்ரல் 2ல் நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்!


இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை பல்வேறு நாடுகளும் கண்டித்து உள்ளன. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட பெருவாரியான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என்று அறிவிக்கக்கோரியும், அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்து இருப்பதால் பிரச்சினை தீவிரம் அடைந்து உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற அட்டூழியங்களுக்கு எதிராக தமிழ் திரையுலகமும் கொதித்து எழுந்து இருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை கண்டித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ('பெப்சி'), சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதைத்தொடர்ந்து, இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராயநகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், 2-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.
உண்ணாவிரதத்தையொட்டி, அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. வெளியூர்களில் நடைபெறும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு, சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளும்படி நடிகர்-நடிகைகளை நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten