[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 02:28.04 PM GMT ]
சென்னையில் இடம்பெறும் ஐ. பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடினால் பிரச்சினை மேலும் அதிகமாகும் சூழ்நிலை உருவானது.
எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.
இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ஐ.பி.எல் தலைவரும் மத்திய இணை மந்திரியுமான சுக்லா கூறுகையில், “உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுரையை புறக்கணிக்க முடியாது. ஆனால், திட்டமிட்டபடி சென்னை மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடக்கும். வேறு இடத்திற்கு மாற்ற முடியாது” என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு உள்ள எதிர்ப்பு தொடர்பாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை தொடர்பாகவும் இன்று ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்போது, பாதுகாப்பு பிரச்சினை உள்ளதால், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில், சென்னை மைதானத்தில் 10 போட்டிகள் நடைபெறுகின்றன. ஐ.பி.எல். அணிகளில் 13 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அகில தனஞ்செயா, நுவான் குலசேகரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இவர்கள் இருவரின் பெயரையும் நீக்க அணியின் உரிமையாளர் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.net/show-RUmryDRaNZku2.html
இலங்கை பிரச்சினை எதிரொலி! மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்! மாணவர்கள் முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 03:35.01 PM GMT ]
இதுகுறித்து தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்திய, இலங்கை அரசுகளை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரதம், சாலை மற்றும் ரெயில் மறியல், முற்றுகை, உருவபொம்மை எரிப்பு, வகுப்பு புறக்கணிப்பு போன்ற பல்வேறு போராட்டங்களில் சட்டக்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மூடப்பட்ட கல்லூரிகளை தமிழக அரசு திறக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். கல்லூரி நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் எங்கள் படிப்பிற்கும் எந்தவித இடையூறு இல்லாமல் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இலங்கை பிரச்சினை மட்டுமல்லாது, மீனவர்கள் பிரச்சினை மற்றும் முல்லை பெரியாறு பிரச்சினைகளிலும் இந்திய அரசு பாராமுகமாகத்தான் உள்ளது.
நாளை (இன்று) தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை பூட்டு போடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
அந்தவகையில் சென்னையில் அகில இந்திய வானொலி நிலையத்தை இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
தமிழ்நாட்டில் மீனவர்கள் மீதான கொலை வெறி தாக்குதலையும், இனவெறியையும் இலங்கை அரசு தொடர்ந்து கொண்டிருக்கும் போதும், இந்திய அரசு இலங்கையை நட்பு நாடு என்கின்றது.
இதை இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. இந்திய அரசு தன்னுடைய சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்தால் கவர்னர் மாளிகை தொடங்கி தபால் அலுவலகம் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் முற்றுகையிடும் போராட்டத்தில் இறங்குவோம்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகையில் உள்ள ‘‘இந்தியா’’, ‘‘மத்திய அரசு’’ என்ற வாசகங்களை தார்பூசி அழிக்கவும் முடிவு செய்துள்ளோம்.
இந்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்.
சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளிலும் சிங்கள வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவதையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
மீறி நடந்தால் விளையாட்டு அரங்கத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
வரும் 31–ந்தேதி சென்னையில் மாணவர் கருத்தரங்கம் ஒன்று நடத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு அரசியல் முக்கியமாக தேவை. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதா போன்ற தேசிய கட்சிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவோம்.
நாங்கள் யாருக்கு ஆதரவு என்பதை பின்னர் முறைப்படி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
http://www.tamilwin.net/show-RUmryDRaNZku3.html
Geen opmerkingen:
Een reactie posten