இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தாலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. அழுத்தம் கொடுக்கவில்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய போதிலும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றும் வரை மாணவர்கள் போராட்டம் தொடரும் என்று ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நீர்த்து போய்விட்டது. அதில் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்திய அரசு தீர்மானம் கொண்டு வரும் வரை மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்கள் எழுச்சியை தடுக்க முடியாது. போராட்டம் அறிவித்த உடனேயே கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது. காலவரையற்ற விடுமுறை என்பதை வாபஸ் பெற வேண்டும்.
மாணவர்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுவரையில் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. மாணவர்களுடைய போராட்டத்தில் அரசியல் கட்சிகள் இல்லை. அவர்கள் ஆதரவு தர முன் வந்தார்கள். வெளியில் இருந்து ஆதரவு தந்தால் போதும், போராட்ட களத்திற்குள் வரவேண்டாம் என்று வலியுறுத்தினோம்.
அதனால் அரசியல் கட்சிகள் மாணவர்களை கையில் எடுக்க முடியாது. அரசியல்வாதிகளை அனு மதிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
போராட்ட களத்தில் உள்ள சில மாணவர்கள் பல்வேறு அரசியல் அடையாளங்களை சேர்ந்தவர்கள்தான். ஆனால் அந்த அடையாளத்தை போராட்டத்தில் வெளிகாட்ட வில்லை. மாணவர்கள் என்ற ஒரே அடையாளத்தில்தான் போராடி வருகிறார்கள். மாணவர்கள் கட்சி அடையாளத்தை புறக்கணித்து விட்டனர்.
கல்லூரி மாணவர்களை காவல்துறை விரட்டி பணிய வைக்க முயற்சி செய்தது. மாணவர்கள் ஒன்று கூடினாலே அழைத்து சென்று கல்லூரி அடையாள அட்டை போன்றவற்றை பிடுங்கினார்கள். நீண்ட வாக்கு வாதத்திற்கு பிறகு விடுவித்தனர். தனியார் கல்லூரி மாணவர்களுக்கு நிர்வாகம் டி.சி. கொடுப்பதாக மிரட்டல் விடுக்கிறது. அது போன்ற முடிவை நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும்.
எந்த பிரச்சினைக்காக போராட்டம் என்பதை உணர்ந்து அவர்களும் எங்களுக்கு உதவ வேண்டும். போராட்டம் ஓய்ந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். தொடர்ந்து நடைபெறும். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது, நசுக்கி விட முடியாது.
இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் அணி திரள்வதை யாராலும் தடுக்க முடியாது. மாணவர்கள் பல்வேறு அமைப்புகளாக பிரிந்திருக்கலாம் அவரவர் வலியுறுத்தும் கோரிக்கை வேறாக இருக்கலாம். ஆனால் போராடக் கூடியவர்கள் மாணவ சமுதாயம். ஒவ்வொருவருடைய இலக்கு வேறாக இருக்கலாம்.
போராட்ட களம் ஒன்றுதான். தமிழ் ஈழ விடுதலைக்கான போராட்ட குழு அடுத்த கட்டமாக மத்திய அரசை முடக்கும் வகையில் தொடர் போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளது.
கல்லூரிகள் திறந்தாலும் மாணவர்கள் போராட்டம் தொடரும். வாரம் இரு முறை சென்னை உள்ளிட்ட மத்திய பகுதியிலும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும். போராட்டம் பெரும்பாலான மாணவர்களுக்கு போய் சேரவில்லை. மக்களுக்கும் போய் சேர வில்லை. அதனால் இதனை மக்கள் போராட்டமாக கொண்டு செல்கிறோம்.
நாளை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் துண்டு பிரசுரம், ரெயில், பேருந்து மூலம் கொண்டு செல்கிறோம்.
மக்கள் போராட்டத்தை முன் எடுத்து செல்லும் போது வெற்றி பெறும், மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாணவர்களின் போராட்டம் படிப்படியாக குறைந்தாலும் தொடர்ந்து நடக்கும்.
இவ்வாறு திவ்யா கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten