தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

அமைச்சரவையைக் உடனடியாக கூட்டுமாறு ஹக்கீம் கோரிக்கை? கோட்டாபாய மீது விமர்சனம்


அமைச்சரவையைக் உடனடியாக கூட்டுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.
நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் சிவில் சமூகத்திடையே நிலவி வரும் பதற்ற நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் காரணமாகவே உடனடியாக அமைச்சரவையைக் கூட்டுமாறு கோருகின்றேன்.
அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசீ, ரிசாத் பதியூதீன் மற்றும் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோருடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அண்மையில் பெப்பிலியான பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது.
சிறுபான்மையினருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அண்மைக்காலமாக அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமை வருத்தமளிப்பதாக ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம்க காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கோட்டாபாய மீது விமர்சனம்
அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் கட்டடம் ஒன்றை இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் ஹக்கீம் அவர்கள், அந்தக் கூட்டத்தில் அவரை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று தான் முன்னதாகவே ஜனாதிபதியை கேட்டிருந்ததாகவும் கூறினார்.
அப்படி பாதுகாப்பு செயலர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதே, பொதுபல சேனா அமைப்பு இன்று அசுர தாண்டவம் ஆடுவதற்கு தூண்டுகோலாக அமைந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் முஸ்லிம்கள் கௌரவமாக வாழ்வதற்கு தமது அமைச்சுப் பதவிகள்தான் தடையாக இருக்குமானால், அதனை துறக்க தாம் தயாராக இருப்பதாக இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான ரிசாத் பதியுதீன் கூறியுள்ளார். ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten