முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்குற்ற ஆதாரங்கள் என்பவற்றை வைத்து இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான் விரைவில் ஈழத் தமிழர் தொடர்பான திரைப்படமொன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.
சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் மற்றும் பிற ஊடகவியலாளர்களும் இணைந்து இயக்குனர், உணர்வாளர் பாரதிராஜாவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
நேற்று இரவு நடைபெற்ற இச் சந்திப்பில், ஈழத்தில் தமிழர்களின் இன்றைய நிலை குறித்து பாரதிராஜாவுக்கு விளக்கப்பட்டது.
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) அழைப்பை ஏற்று லண்டன் வந்துள்ள பாரதிராஜா அவர்கள், இன்றைய தினம் நடக்கவுள்ள கலாச்சார நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார்.
ஈழத்தில் நடந்த கொடுமைகள் பற்றியும், அங்கே நடத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பாகவும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று புலம்பெயர் ஊடகவியலாளர்கள் கூட்டாக அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட பாரதிராஜா அவர்கள் தான் விரைவில் ஈழத் தமிழர் தொடர்பான படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சாதிவெறி, இனவெறி, தொடர்பான பல படங்களை இயக்கி முன்னுதாராணமாகத் திகழ்கிறார்.
குறிப்பாக பாரதிராஜா அவர்கள் எடுத்த பல திரைப்படங்கள் விருதுகளையும் தேசிய விருதுகளையும் தட்டிச்சென்றுள்ளதும் , குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
புலம்பெயர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் தமிழகத்தின் நிலைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்குற்ற ஆதாரங்கள் சிலவும் பாரதிராஜாவிடம் ஊடகவியலாளர்களால் கையளிக்கப்பட்டது.
அவை தான் எடுக்கவிருக்கும் திரைப்படத்திற்கு ஊன்றுகோலாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமே (IATAJ) இச் சந்திப்பினை மேற்கொள்ள அனைத்து வசதிகளையும், ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Geen opmerkingen:
Een reactie posten