இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்புப் படைகள் பொதுமக்களைக் கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவித்து, அவர்களைத் தப்பிக்க வைக்கும் வகையில் உள்ளக இராணுவ விசாரணையின் அறிக்கை அமைந்துள்ளதானது, சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பாக சுயாதீனமான, நம்பகமான விசாரணையை மேற்கொள்ளுமா சந்தேகத்தை அனைத்துலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
‘சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் இந்த அறிக்கை இன்னமும் முழுமையாக வெளியிடப்படாத போதிலும், இவ்வாறான அறிக்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் இணைந்து தயாரிக்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல அனைத்துலக நாடுகள் தமது சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
பொதுமக்கள் இழப்புக்களுக்கு சிறிலங்கா இராணுவம் பொறுப்பளிக்க வேண்டிய நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுக்களிலிருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவிக்கின்ற ஒன்றாக உள்ளக இராணுவ விசாரணை காணப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்துள்ளது’ என ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் பிளேக், பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் இவ்வாறான முடிவு தொடர்பில் அமெரிக்கா உண்மையில் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சிறிலங்கா இராணுவத்தின் உள்ளக விசாரணை தொடர்பான அறிக்கையின் முழுமையான வடிவத்தை சிறிலங்கா வெளியிட வேண்டும் என அமெரிக்கா கோரியிருந்ததாகவும், ஆனால் இதனை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் வெளியிடவில்லை எனவும் றொபேட் பிளேக் தனது நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த அறிவிப்பானது, சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணையை மேற்கொள்ளுமா என்ற சந்தேகத்தை அனைத்துலக சமூகத்தின் மத்தியில் வலுப்படுத்தியுள்ளதாக நான் நம்புகிறேன்’ என பிளேக் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்ச் 22 அன்று சான் பிரான்சிஸ்கோவில் பி.பி.சி சிங்கள சேவையுடன் மேற்கொண்ட நேர்காணலின் எழுத்து வடிவத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.
‘சிறிலங்கா அரசாங்கம் தன் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன, நம்பகமான விசாரணை ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்’ என உதவி இராஜாங்கச் செயலர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் பொதுமக்களை இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டரீதியற்ற நடவடிக்கைகள் காரணமாகவே பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கடந்த மாதம் சிறிலங்கா இராணுவ நீதிமன்றின் விசாரணையின் இறுதியில் அறிவிக்கப்பட்டது.
‘நாங்கள் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக பல வெளிப்படையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம்’ என பிளேக் தெரிவித்துள்ளார்.
போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தமிழ்ப் புலிகளும் காரணம் என சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் சுட்டிக்காட்டியிருந்தார்.
‘தமிழ்ப் புலிகள், பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளில் கனரக ஆயுதங்களை நிறுத்தி அவற்றைப் போரின் போது பயன்படுத்தினர்.
போர் வலயங்களுக்குள் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு விடுதலைப் புலிகள் தடைவிதித்திருந்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பொதுமக்கள் விரும்பிய போதும் இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறான பல்வேறு மோசமான மீறல்களை மேற்கொண்டுள்ளனர்’ என பிளேக் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப்பகிர்வு தொடர்பில் உடன்பாடொன்றை எட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும், மிக மோசமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும் எனவும் அமெரிக்க மூத்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்ச் 21 அன்று ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தின் போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்று சிறிலங்கா தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால் அமெரிக்கா எதிர்காலத்தில் என்ன நடவடிக்கையை எடுக்கும் என பிளேக்கிடம் வினவியபோது அது தொடர்பில் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
சிறிலங்கா தனது நாட்டில் மிகப் பயனுள்ள மீளிணக்கப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் நாட்டில் அமைதி மற்றும் செழுமையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை வலியுறுத்தியே தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக பிளேக் மேலும் குறிப்பிட்டார்.
சிறிலங்கா இது தொடர்பில் சில முக்கிய நகர்வுகளை மேற்கொண்டாலும் கூட, இன்னமும் செய்ய வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் காணப்படுவதாக பிளேக் வலியுறுத்தியுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் எனவும், நாட்டில் மிக மோசமாகியுள்ள மனிதஉரிமைச் சட்டத்தை சீர்திருத்தி அதனை மதித்து நடக்க வேண்டும் எனவும் சிறிலங்காவிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயத்தில் அமெரிக்கா உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் பிளேக் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘நாங்கள் மிக நீண்ட, சாதகமான உறவை சிறிலங்கா அரசாங்கத்துடனும் மக்களுடனும் பேணிவந்துள்ளோம்.
இந்த உறவுநிலையை மேலும் தொடரவும், சிறிலங்கா மக்களுடன் நட்புணர்வை மேலும் பலப்படுத்துவதற்கும் நாம் விரும்புகிறோம்’ என அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக், பி.பி.சி சிங்கள சேவைக்கான தனது நேர்காணலில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
http://asrilanka.com/2013/03/29/16301
Geen opmerkingen:
Een reactie posten