தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 maart 2013

இனி நாம் செய்யவேண்டியது என்ன?


 [ நக்கீரன் ]
கைவிடப்பட்ட, ஏமாற்றப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட உணர்வு என்பது தமிழர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. நீண்டகாலமாக அதை அவர்கள் வெவ்வேறு பிரச்சினைகளில் அனுபவித்தே வந்திருக்கிறார்கள். ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்க தீர்மானம் நிறைவேறிய நாளிலும் அதை நாம் முழுமையாக அனுபவித்தோம்.
அமெரிக்காவின் மீது யாருக்கும் எந்த நம்பிக்கையும் இல்லை. தமிழகம் இந்தத் தீர்மானத்தை ஏற்கனவே நிராகரித்துவிட்டு மாபெரும் போராட்டத்தில் இறங்கியது. ஆனால் எட்டு கோடிப் பேர் கொண்ட தமிழ்ச்சமூகத்தின் கூக்குரலுக்கு இந்திய அரசு சற்றேனும் செவிசாய்க்கும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
நூற்றாண்டின் மிகப்பெரிய இன அழித்தொழிப்பு தொடர்பாக  தனது நாட்டின் ஒரு பகுதி மக்கள் அடைந்திருக்கும் கடும் துயரத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கும் என்றுதான் இலங்கையின் மீதான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவாருங்கள் என்று தமிழகம் ஒன்று திரண்டு போராடியது. ராஜபக்‌ஷவின் போர்க்குற்றங்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணையின்றி தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என்பதால்தான் இந்தியா அந்தத் திருத்தத்தை முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கை உரத்து ஒலித்தது. மாணவர்கள் போராடினாலும் சரி, தமிழகக் கட்சி மந்திரிசபையிலிருந்தே விலகினாலும் சரி எங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல என்று மத்திய அரசு தெளிவாக சுட்டிக் காட்டியது. கடைசி நிமிடம் வரை தனது நிலைப்பாட்டை மூடி மறைத்தது. இறுதியில் வாய்மொழி திருத்தங்களைக் கொண்டுவரும் என்று வேறு ஒரு கதையைப் பரப்பினார்கள்.
ஐ.நா. மன்ற தீர்மானத்தில் அப்படியெல்லாம் ஒரு திருத்தத்தை போகிறபோக்கில் கொண்டுவர முடியாது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்திய அரசாங்கம் தொடர்ந்து அந்தப் பொய்யைச் சொன்னது. இந்திய அரசு எந்த திருத்தத்தையும் கொண்டு வரவில்லை. “சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான - நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணையை இலங்கை அரசாங்கம் நடத்துவதற்கு அதை ஊக்கப்படுத்த வேண்டும்“ என்கிற ஒரு கேவலமான தீர்மானம் நிறைவேறியது.
அமெரிக்க அரசாங்கம், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கம் மூன்றும் சேர்ந்து கூட்டாகத் தயாரித்த இந்த தீர்மானத்தை “தமிழர்கள் நலன்களுக்காக நாங்கள் ஆதரித்தோம்“ என்று காங்கிரஸ் கூசாமல் கூறி வருகிறது. இலங்கையை வற்புறுத்த வேண்டும் என்பதைக்கூட ‘ஊக்கப்படுத்த வேண்டும்‘ என்று மாற்றி இலங்கை அரசாங்கத்தை செல்லம் கொஞ்சும் இந்தத் தீர்மானம் இலங்கையை வைத்து அமெரிக்காவும் இந்தியாவும் ஆடும் பூகோள அரசியல் சூதாட்டத்தின் ஒரு பகுதி என்பது பச்சையாக வெளிப்பட்டிருக்கிறது.
ஒரு சுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை நடப்பதற்கு இலங்கையில் எந்தச் சூழலும் இல்லை என்று தெரிந்தும் இந்தத் தீர்மானத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் பிரச்சினை நெஞ்சில் ஈரமற்ற வகையில் கை கழுவப் பட்டிருக்கிறது. ராஜபக்‌ஷவின் குடும்பம், ராணுவம், ஆட்சியதிகாரம், நீதி அமைப்பு என அனைத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது. இலங்கையில் தலைமை நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நீக்கப்பட்டிருக்கிறார்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் முற்றாக தடை செய்யப்பட்டிருக்கின்றன.  தமிழர் பிரதேசங்கள் முழுமையாக ராணுவ மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. ராணுவத்தின் உதவியுடன் வெகுவேகமான சிங்கள குடியேற்றங்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டு இலங்கையின் மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி எந்த போர்க்குற்றமும் விசாரிக்கப்படவில்லை. மறுவாழ்வு நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. எல்.எல். ஆர்.சி. என்ற போலி விசாரணை அமைப்பு ஒரு துரும்பைகூட அசைக்கவில்லை.
மாறாக இன்றும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆள் கடத்தலும், காணாமல் போவதும், பாலியல் வன்முறைகளும் தமிழர் பகுதிகளில் நீடித்து வருகின்றன. சிங்களப் பேரினவாதி களின் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு இனவாத, ராணுவமயப்படுத்தப்பட்ட, சட்டவிரோத ஆட்சி நிலவும் ஒரு இடத்தில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்வதும் அங்கு தேர்தல் களும் மறுவாழ்வு நடவடிக்கைகளும் நியாயமாக நடக்கும் என்று நம்புவதும் யாரை ஏமாற்றுவதற்காக?
2009-ஆம் ஆண்டில் இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த  சரத் டி சில்வா அவர்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட முள்வேலி முகாமைப் பார்வையிட்ட போது கூறிய வார்த்தைகளை நாம் இங்கே நினைவூட்டிக்கொள்வது நல்லது. “""இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம்; இந்த நாட்டின் நீதி அமைப்பில் அவர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை''’என்றார் அவர்.
இந்த அமெரிக்க தீர்மானத்தின் மூலமாக கிடைத்த ஒரு சிறிய அனுகூலம் என்னவென்றால் இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை சர்வதேச சமூகம் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை ஈழத் தமிழர்கள் தங்கள் நியாயத்திற்கு கிடைத்த சிறிய முன் னேற்றமாகக் கருதுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத்தமிழர் அமைப்புகள் தத்தமது நாடுகளின் அரசாங்கங்களுடன் நடத்திய நீண்ட போராட்டத்தின் வழியாகவே இந்தப் பிரச்சினை இந்த அளவிற்கு சர்வதேச கவனம் பெற்றிருக்கிறது. அதேபோல இந்தத் தீர்மானத்தை முன்வைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய எழுச்சி தமிழர் நலன் சார்ந்த அரசியலை இன்று முன்னிலைப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு இந்தத் தீர்மானத்திற்கு உள்ளே நடந்ததைவிட அதற்கு வெளியே நடந்ததுதான் அதிகம். ராஜபக்‌ஷ அவ்வளவு எளிதில் தப்பிச் செல்ல முடியாது, அவர்மீதான இந்த சர்வதேச அழுத்தத்தை படிப்படியாக விரிவுபடுத்த முடியும் என்றும் அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த முடியும் என்றும் ஈழத்தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள். போஸ்னியா, ருவாண்டா போன்ற நாடு களில் நடந்த படுகொலைகளின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டது போல ராஜபக்‌ஷ சகோதரர்களும் இலங்கையின் ராணுவத் தளபதிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்பதுதான் உலகளாவிய தமிழ் சமூகத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. நீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தில் தமிழகம் அதில் எந்த அளவிற்கு பக்கபலமாக இருந்து இந்திய அரசை நிர்பந்திக்கப்போகிறது என்பதுதான் இப்போது  இருக்கும் கேள்வி.
காங்கிரஸ் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகள் அனைத்துமே ஈழத் தமிழர்கள் பிரச்சினையை நியாயமற்ற வகையிலும் மேம்போக்காகவுமே அணுகி வருகின்றன. சமீபத்தில் இலங்கைக்கு எதிராக இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தங்களுடைய சுயரூபத்தை அவை பச்சையாகக் காட்டிக்கொண்டன. இந்தியா ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதை ஏற்க முடியாது என்று ஒன்றாக குரல் கொடுத்தன.
போர்க்குற்றத்தையும் இனப்படுகொலையையும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாக கருதுகிற இந்தக் கட்சிகளின் பார்வையாகட்டும் இதை வெட்கமில்லாமல் தனது வெளிநாட்டுக் கொள்கையாக சொல்லிக்கொள்கிற மத்திய அரசின் நிலைப்பாடாகட்டும் அவர்கள் தமிழர்கள்பால் காட்டுகிற அன்னிய மனப்பான்மையை யே வெளிப்படுத்துகிறது. கடந்த பத்தாண்டுகளில் 500-க்கும்  மேற்பட்ட இந்திய தமிழ் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதன் அடிப்படையில்கூட அவர்கள் இலங்கைக்கு எதிராக எந்தத் தீவிரமான நிலைப்பாடும் எடுக்கத் தயாராக இல்லை.
இந்தியா தனது நலன்களுக்காக இலங்கை உட்பட பல அண்டை நாடுகளில் ராணுவ தலை யீடுகளைச் செய்திருக்கிறது. ஆனால் இப்போது இலங்கைப் பிரச்சினையில் அது தமிழர்களின் நலன்கள் சார்ந்து தலையிட மறுப்பதற்குக் காரணம் இந்தியாவிற்கு இப்போது தனது அண்டை நாடுகளுடன் வர்த்தக கொள்கைகள் மட்டுமே இருக்கின்றன. அரசியல் கொள்கைகள் எதுவும் இல்லை என்பதுதான்.
இந்தியாவும் அமெரிக்காவும் 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் வழியாக இந்தியா கிட்டத்தட்ட அமெரிக்காவின் அடியாளாக செயல்படத் துவங்கி நீண்ட காலமாகிவிட்டது. சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு எப்படி இலங்கையில் தனது ராணுவ-வர்த்தக செல்வாக்கை வளர்த்துக்கொள்வது என்பது தான் இந்த இரண்டு நாடுகளின் நோக்கமும். அத்தோடு இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளைப் பாதுகாக்கும் கவலையும் இந்தியாவிற்கு இருக்கிறது. இந்த வர்த்தக நலன்களுக்கான கள்ளக் கூட்டாளி தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. இதற்காக ஈழத்தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சினையை மட்டுமல்ல, எந்த சர்வதேச நெறிமுறைகளையும் இந்திய அரசு கவனிக்கத் தயாராக  இல்லை. இது முதலாம் உலகப்போரின்போது நடந்த நாடு பிடிக்கும் போட்டிகளையே நினைவுபடுத்துகிறது.
தமிழர் விரோத மத்திய அரசாங்கம், தேசியக் கட்சிகள், தேசிய ஊடகங்கள் அனைத்திற்கும் எதிராக நாம் கடுமையான தொடர் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். தேசிய ஊடகங்கள் இரண்டு பெளத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தின் சிறுபங்கைக்கூட மாணவர் போராட்டத்திற்கோ மீனவர் பிரச்சினைக்கோ ஈழ இனப்படுகொலைக்கோ தரவில்லை. இது இந்தியாவில் தமிழர்களுக்கு எதிரான பச்சையான இனவாத போக்கினையே காட்டுகிறது.
தமிழ் ஈழத்தை ஆதரிப்பதில்லை என்பதில் காங்கிரஸ், பா.ஜ.க., இடது சாரிகள் உள்ளிட்ட எல்லா தேசிய கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன. இந்திய தேசியம் என்பது தமிழர்களை எல்லா நிலையிலும் முற்றாக கைவிட்டுவிட்ட நிலையில் தமிழர்கள் தமக்கான தேசியத்தை முன்னெடுக்க நிர்ப்பதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என் பது தமிழகத்தின் அடுத்த கட்டப் போராட்டமாக இருக்கும். தமிழர்களின் நலன்களைப் புறக்கணிக்கும் தேசிய கட்சிகள் அனைத்தையும் முற்றாகப் புறக்கணிப்பது தமிழகத்தின் நீண்டகால அரசியல் போராட்டமாக இருக்கும்.
ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பின் மூலம் சமீப காலத்தில் சூடானிலிருந்து தெற்கு சூடானும் எத்தியோப்பியாவிலிருந்து எரித்தியாவும் பிரிந்து சென்றதைப்போல தமிழ் ஈழமும் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதுதான் இந்த கொடூரமான இனப்படுகொலைக்குப்பின் தமிழர்களுக்கு இயற்கையாக கிடைக்க வேண்டிய வரலாற்று நியதி. உலகத் தமிழர்களின் போராட்டம் அந்த நீதியை நிச்சயம் ஒருநாள் வென்றெடுக்கும்.

-மனுஷ்ய புத்திரன் -

Geen opmerkingen:

Een reactie posten