யுத்தத்தின் கோரவடுக்களைத் தாங்கி பல இன்னல்களுக்கு மத்தியில் கடமையாற்றும் அவர்களது நிலுவைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரஸ்ரீயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் ஒப்பமிட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
தாம் கடமைசெய்த காலங்களுக்குரிய சம்பள நிலுவைகள் பல ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படாமை குறித்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திடம் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவை தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்துடனும், மாகாணக்கல்வி அலுவலகத்துடனும் தொடர்புகொண்டு கேட்டபோது அதற்கான நிதி இல்லை என்று கைவிரிக்கப்படும் நிலையில், வடமாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட போது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அதிபர், ஆசிரியர்கள் தாம் கடமைசெய்த காலங்களுக்குரிய கொடுப்பனவுகள் பெருந்தொகையாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும், பல ஆசிரியர்களுக்கு பல லட்சம் ரூபா கொடுப்பனவு நிலுவைகளாகவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படும் அதேவேளை வலயக்கல்விப் பணிமனைகளில் இதுவரை அதற்குச் சாதகமான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆளுநர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக இம்மாத இறுதிக்குள் அவை வழங்கப்படாத நிலையில் ஒருநாள் சுகயீனலீவுப்போராட்டத்தினை நடாத்தி கவனயீர்ப்பினை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. தவிர அதிபர், ஆசிரியர்கள் அவசிய தேவைக்காக இடருதவிக்கடனுக்கு விண்ணப்பித்து இன்று வரை சீராக உரிய காலங்களில் வழங்கப்படாமலிருப்பதும் காலம் கடந்து ஏன் இறந்த பின்னரும் அவை கிடைப்பதும் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது.
இவையெல்லாம் அதிபர், ஆசிரியர்களின் மனங்களில் பெருந்தாக்கங்களை உண்டுபண்ணுவதால் சுகயீன கவனயீர்ப்புப் போராட்டத்தினை வெளிப்படுத்தி வடமாகாண கல்வி அமைச்சுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக எதிர்வரும் 26.03.2013 அன்று நிலுவைகள் உள்ள வடமாகாணம் சார்ந்த அனைத்து அதிபர், ஆசிரியர்களும், அவசிய தேவைகருதி இடருதவிக் கடனுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களும், கோவைகள் சீர்செய்யப்படாத ஆசிரியர்களும் அதற்கான ஆதாரங்களுடன், நல்லூர் செம்மணி வீதியில் உள்ள மாகாணக் கல்வி அமைச்சுக் காரியாலயத்திற்கு முன்பாக காலை 10.00 மணிக்கு ஒன்று கூடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் துணைநிதிச் செயலாளர் க.தேவநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten