வடக்கில் காணாமற் போன தமிழர்கள் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியதையடுத்து, காணாமற் போனோரது ஏனையோரின் உறவினர்கள் பலர் தமது உறவுகள் குறித்த விபரத்தை அறிய செய்வதறியாது திணறி வருகின்றனர்.
இலங்கையில் நடந்து முடிந்த போரின் பின்னரும் முன்னரும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமற் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறிய உறவினர்கள் பல வருடங்களாகப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வாறானவர்களில் 37 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்துள்ளது.
அவர்களின் பெயர் விபரங்களும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, பெயர் குறிப்பிடப்பட்டவர்களின் உறவினர்களும், காணாமற் போன ஏனையோரின் உறவினர்களும் தமது உறவுகள் குறித்து விபரத்தை அறிந்து கொள்ள எங்கு செல்வது என செய்வதறியாது திணறுகின்றனர்.
வன்னியில் காணாமற் போனோர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள விபரங்களின் அடிப்படையில் தமது பிள்ளைகளைக் கண்டுபிடிக்க உதவுமாறு பெற்றோர் தம்மை வந்து தொடர்பு கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வவுனியாவைச் சேர்ந்த ஒருவரின் பெயர் தற்போதைய பட்டியலில் உள்ளதாகவும் அவரைக் கண்டறிந்து தொடர்பு கொள்ள அவரது உறவினர்கள் பெரும் அங்கலாய்ப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
காணாமற்போன தமது உறவுகளைத் தேடி, கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், இதுவரை காலமும் அவர்கள் பற்றிய தகவல்களை மறைத்து வந்த அரசு தற்போது வெளியிட்டிருப்பது குறித்து மக்களிடையே பலத்த கேள்விகள் எழுந்துள்ளது.
http://www.tamilwin.net/show-RUmryDRXNZlp7.html
Geen opmerkingen:
Een reactie posten