அம்பாறையில் இடம்பெற்று வரும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட “தேசத்துக்கு மகுடம்“ கண்காட்சியைப் பார்வையிடுவதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் அக்கறை செலுத்தவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதன் காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகுந்த வேதனையும் ஆத்திரமும் அடைந்துள்ளதுடன் கிழக்கு மாகாண அரச தரப்பு அரசியல்வாதிகளைக் கடுமையாகக் கடிந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், முஸ்லிம் மக்களை அதிகளவில் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வைக்கும் பொருட்டு அரசுக்குச் சொந்தமான பஸ்களில் அவர்களை அழைத்துச் செல்ல முயற்சித்தும் அது கைகூடவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இலவச பஸ் போக்குவரத்து மற்றும் உணவு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் மறுப்புத் தெரிவித்தனர் எனவும் அந்த வட்டாரங்கள் கூறின.
"தேசத்துக்கு மகுடம்“ அபிவிருத்திப் பணிகளில் தமிழ்ப் பிரதேசங்கள் முற்றாகப் பறக்கணிக்கப்பட்டமை, முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாகவே இரு சமூகங்களும் இந்தக் கண்காட்சியைப் புறக்கணித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது தேசத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு அல்ல, அது தமிழர்களை இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும்,
கடந்த 2009ம் ஆண்டு நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் தமிழர்களை இன அழிப்புச் செய்த இராணுவ வெற்றியை வெற்றி விழாவாக அறிவித்த இலங்கை அரசாங்கம் அதனை கொண்டாடும் நிகழ்வாகவே இந்த தேசத்தின் மகுடம் கண்காட்சியை நடாத்துகின்றது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten