சிங்கள பௌத்த இனவெறி அரசு, ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததை ஐ.நா. செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சனல்-4 உள்ளிட்ட அனைத்துலக முன்னணி ஊடகங்கள் இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.
இவை அனைத்தும் உலகம் முழுவதிலும் பேசப்பட்டாலும், 7 கோடித் தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டை ஆளும் இந்திய அரசு, ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழ்ப் பொதுமக்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்ட கொடுமையை இனப்படுகொலை என்று இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழீழப் படுகொலையை “இனப் படுகொலை” என்று தீர்மனம் இயற்ற முடியாது என காங்கிரசு ஆட்சி மட்டுமல்ல, நடுவண் அரசில் இல்லாத பா.ச.க., சமாஜ்வாதி கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, ஐக்கிய சனதா தளம், திரிணமுல் காங்கிரசு, சி.பி. எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன.
இந்தியத் தேசியக் கட்டமைப்பில், தமிழ் இனத்திற்கு எதிராக செயல்புரிவதில் இடது சாரி, வலதுசாரி என்று வேறுபாடில்லை. பார்ப்பன - இந்துத்துவாக் கட்சி, பிற்படுத்தப்பட்டோர் கட்சி, தாழ்த்தப்பட்டோர் கட்சி என்ற மாறுபாடில்லை.
இந்திய தேசிய அரசியல் தலைமை அனைத்தும் தமிழினப் புறக்கணிப்பில் ஒரே சிந்தனை கொண்டுள்ளன. 2008-2009 இல் இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில் இந்திய அரசும் பங்கு கொண்டது போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு வலுவற்ற தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்தது.
மன்மோகன் - சோனியா ஆட்சி அத்தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்யும் திருத்தங்களைச் செய்து ராசபட்ச கும்பல் மீது துரும்பும் படாமல் பாதுகாத்துள்ளது.
அரபிக் கடலில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, இத்தாலியுடன் தூதரக உறவையே முறித்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளது இந்தியா. ஆனால், நாதியற்ற 600 தமிழ் மீனவர்களைச் சிங்களப்படை சுட்டுக் கொன்றதற்கு ஒரு கைது கிடையாது. ஒரு வழக்கு கிடையாது.
இத்தனைக்குப் பிறகும் இந்தியாவுக்கு நாம் ஏன் வரிகொடுக்க வேண்டும்? நம் பணத்தைக் கொண்டு நம் இனத்தை அழிக்க ஆயுதம் வாங்கவா? என்ற கேள்வி தமிழர்கள் மனதில் பூதாகரமாக இந்நிலையில் எழுந்துள்ளது.
இலங்கை அரசு - இராணுவம் ஆகியவற்றின் மீது தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு கோரியும், தனி ஈழம் அமைப்பது குறித்துக் கருத்து வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும் இந்திய அரசின் உற்பத்தி வரி, வருமான வரி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இன்று சென்னை, தஞ்சை, திருச்சி, கடலூர், ஓசூர் ஆகிய நகரங்களில் நடத்தியது.
சென்னை நந்தனம் ஈ.வெ.ரா. பெரியார் மாளிகையில் செயல்பட்டு வரும், இந்திய அரசின் உற்பத்தி வரி வசூல் அலுவலகம் இன்று காலை 10 மணியளவில், இந்திய அரசின் இனத்துரோகத்தைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையில் நடைபெற்றது.
எங்கள் வரிப்பணம் பெற்றுக் கொண்டு,
எங்கள் மக்களைக் கொல்வதற்கு
எங்கள் வரிப்பணம் பெற்றுக் கொண்டு,
சிங்களனுக்கு ஆயுதமா?
தமிழினப் பகைவன் இந்தியாவுக்கு தமிழர்களே வரி கொடுக்காதீர் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிக்கொண்டு, நந்தனம் வரி வசூல் அலுவலகம் நோக்கி சென்றனர்.
வழி மறித்தக் காவல்துறை கைது செய்தது. முற்றுகைப் போராட்டத்தில், தோழர் உதயன் (தலைமைச் செயற்குழு, த.தே.பொ.க.) தோழர் பழ. நல் ஆறுமுகம் (பொதுக்குழு உறுப்பினர், த.தே.பொ.க.) தோழர் தமிழ்ச்சமரன் (த.தே.பொ.க. தி.நகர் கிளைச் செயலாளர்), தோழர் இளங்குமரன் த.தே.பொ.க., தாம்பரம் கிளைச்செயலாளர், (தோழர் வெற்றித்தமிழன் (தாம்பர, கிளைச் செயலாளர் த.இ.மு.) தோழர் அகத்தாய்வன் (பல்லாவரம் கிளைச்செயலாளர் த.இ.மு) தோழர் கோபிநாத் (தி.நகர், செயலாளர் த.இ.மு) உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
ஓசூர் தளி சாலையில் உள்ள இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இம்முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தது.
கடலூர்கடலூர் அரசுப் பொது மருத்துவமனை அருகிலுள்ள இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்திய அரசின் இனத்துரோகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். உற்பத்தி அலுவலகம் சென்ற தோழர்களை காவல்துறைத் தடுத்தனர். அனைவரும் சாலையில் அமர்ந்து இந்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர் காவல் துறையினரோடு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பிறகு அனைவரையும் கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் தோழர் கு. சிவப்பிரகாசம் (பொதுக்குழு உறுப்பினர், த.தே.பொ.க தோழர் ஆ. குபேரன்( துணைப்பொதுச்செயலாளர், த.இ.மு.) தோழர் பிரகாசு( நடுவண் குழு உறுப்பினர், த.இ.மு.) தோழர் சுப்பிரமணிய சிவா( தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர்) தோழர் கனகசபை (பெண்ணாடம், கிளைச் செயலாளர், த.தே.பொ.க.) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தஞ்சை மருத்துவக் கல்லூரிச்சாலை, பாலாஜி நகரிலுள்ள இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன்பு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
Geen opmerkingen:
Een reactie posten