முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தாலும் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடன் இல்லை என்பதை நேற்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்களையும் மற்றும் அலுவலகங்களையும் மூடி ஹர்த்தால் அனுஷ்டித்து உணர்த்தியுள்ளார்கள் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கில் முழுமையாக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட அதேவேளை, மன்னார், வவுனியா போன்ற பகுதிகளிலும் முஸ்லிம்களின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் பொரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
கொழும்பு பகுதியிலும் மற்றும் பல இடங்களிலும் கடந்த இரு தினங்களாக பொலிஸாரும் இராணுவத்தினரும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை கடைகள் மூடப்படக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.
ஒரு சில முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் ஹர்த்தால் அனுஷ்டிக்கக் கூடாதென அறிக்கை விட்டிருந்தார்கள்.
முஸ்லிம் சேவை வானொலியிலும் கடைகள் மூடப்படக்கூடாதென அறிவிக்கப்பட்டது.
பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் முன்னால் வர்த்தக நிலையங்களை மூடிவிடும்படி ஆர்ப்பாட்டம் செய்த போது அதற்கெதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காது முஸ்லிம்கள் தமது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைதியாக ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்ததை தடுக்க முயற்சித்தமை நேர்மையானதல்ல.
ஒரு சில மௌலவிகளும் அரசியல்வாதிகளும் முஸ்லிம்கள் கடைகளை மூடக்கூடாதென்று வர்த்தகர்களைப் பயமுறுத்தியமை எதிர்காலத்திலும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாதீர்கள் என்று பயமுறுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten