லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கையைப் பற்றி விவாதிக்க இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட கொமல்வெல்த் நாடுகளின் அடுத்த மாநாடு இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என கனடா, அவுஸ்திரேலியா முதலான நாடுகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கொமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் பிரிட்டிஷ் அரசியாரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.ெ
இதனிடையில் கொமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் குழுவான 'கொமன்வெல்த் மினிஸ்டிரியல் ஆக்சன் குரூப் (சி.எம்.ஏ.ஜி)' எதிர்வரும் ஏப்ரல் 26ம் திகதி லண்டனில் கூடவுள்ளது. ஒரு நாட்டை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இடை நீக்கம் செய்வதற்கு இந்தக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கனடா முதலான நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இக்குழுவுக்குத் தற்போது தலைமை ஏற்றிருக்கும் பங்களாதேஷ், இலங்கையை ஆதரிப்பதால் இக்கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை விவாதிக்கப்படமாட்டாது எனத் தெரிய வந்துள்ளது.
இது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, செய்ன்ட் கிட்ஸ், கேமரூன், மால்டா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சைப்ரஸ் ஆகிய எட்டு நாடுகள் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை வழிமொழிந்திருந்தன.
சியர்ரா லியோன், இந்தியா ஆகியவை ஆதரித்து வாக்களித்திருந்தன. இந்தப் பத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தால் இலங்கையை கொமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றிவிட முடியும். அதற்கு ஏப்ரல் மாதம் லண்டனில் நடக்கவுள்ள வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலேயே தீர்மானம் கொண்டுவர வேண்டும். இந்த வாய்ப்பை இந்தியா தவறவிடக்கூடாது.
இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானமாகும். அத்தகைய தலைக்குனிவுக்கு இந்தியா ஆளாகக்கூடாது.
எனவே லண்டனில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கையைப் பற்றி விவாதிக்க இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
http://www.lankawin.com/show-RUmryDRdNZipy.html
Geen opmerkingen:
Een reactie posten