[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 02:40.50 AM GMT ] [ விகடன் ]
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்று களம் இறங்கி இருக்கிறார்கள்.
கடந்த 21-ம் தேதி நாகப்பட்டினம் தாலுக்காவில் உள்ள நாகூர், ஆரியநாட்டுத் தெரு, சில்லடி, கல்லார், நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை, சாமந்தான் பேட்டை உள்ளிட்ட எட்டு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
முதல் கட்டமாக 22-ம் தேதி நாகப்பட்டினம் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு எதிரே கூடியவர்கள், மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அடுத்ததாக 25-ம் தேதி ரயில் மறியல், அதற்கு அடுத்து எல்லா தாலுக்காக்களிலும் போராட்டம் என்று தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போகிறார்கள்.
இதுகுறித்து நாகப்பட்டினம் ஒன்றியக் குழுத் துணைத் தலைவரும் அக்கறைப் பேட்டை பஞ்சாயத்தாருமான திருவளர்செல்வனிடம் பேசினோம்.
அண்டை நாடு, நட்பு நாடு என்று இந்தியா நட்பு பாராட்டும் இலங்கை அரசுதான் தொடர்ந்து எங்களைத் தாக்குகிறது. இரும்பு பைப்பால் அடி, உருட்டுக்கட்டையால் அடி, வலைகள் கிழிப்பு, மண்டியிடவைப்பது, துப்பாக்கிச் சூடு... இதெல்லாம் போய் இப்போது அரிவாள் வெட்டு வரை வந்துவிட்டார்கள்.
இதைவிடப் பெரிய கொடுமை வேறு ஏதாவது உண்டா? இப்படி ஒரு சம்பவம் நடந்து நான்கு நாள் ஆகிவிட்ட பின்னும் இந்திய அரசாங்கம் இதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டதா? நாங்கள் என்ன இந்த நாட்டின் அகதிகளா? எங்கள் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? இதுவரை எல்லை தாண்டிவந்ததால் சுட்டோம் என்று சொன்னார்கள்.
இப்போது வெட்டுப்பட்டவர்கள் சாதாரண பைபர் படகில் நமது எல்லைக்குள்தானே தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்? அவர்களை ஏன் வெட்டினார்கள்? இந்தக் கொடுமையை மத்திய அரசு ஏன் கண்டிக்கவில்லை? எங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வரையிலும் இந்தப் போராட்டங்கள் தொடரும்'' என்கிறார்.
தபால்நிலைய ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், ''இனி எங்க பாதுகாப்பை நாங்கதான் பாத்துக்கணும். அவங்க அஞ்சாறு பேர் ஒரு போட்ல வந்து எங்களைத் தாக்கும்போது நூற்றுக்கணக்கான பேர் ஒன்று சேர்ந்து அவங்களைத் திருப்பித் தாக்க முடியாதா? இனியும் சும்மா இருந்தால், நாங்கள் கடலுக்குள் போகவே முடியாது.
அரசாங்கத்துக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதனால் எங்கள் பாதுகாப்பை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இலங்கை ராணுவத்துக்கு எதிராக நாங்களே போர் தொடுத்துக்கொள்கிறோம். எங்களுக்கு ஆயுதம் வழங்குங்கள். குறைந்தபட்சம் துப்பாக்கி வைத்துக்கொள்ளவாவது லைசென்ஸ் வழங்குங்கள்'' என்று முழங்கினார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெற்றது. அதைச் சுட்டிக்காட்டும் மீனவர்கள், 'வரப்போகும் தேர்தலில் காங்கிரஸைக் கருவறுப்போம்� என்று சபதம் செய்திருக்கிறார்கள்.
இரண்டு கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டு வீரர்களை நம் நாட்டுக்குக் கொண்டுவர தூதரைக் கைதுசெய்வது வரை போனதே நம் மத்திய அரசு. அவர்களுக்குக் கேரள மீனவர்கள் மீது உள்ள அவ்வளவு அக்கறை, ஏன் நம் தமிழக மீனவர்கள் மேல் இல்லை? 540 மீனவர்களுக்கும் மேல் கொன்று குவித்த இலங்கையிடம் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும்.
எல்லை தாண்டிவந்து எங்களைத் தாக்கும் இலங்கைக் கடற்படையினரை கைதுசெய்து நம் நாட்டுக்குக்கொண்டுவர வேண்டும். அதைச் செய்ய இவர்களுக்கு என்ன தயக்கம்? தங்கள் நாட்டு குடிமக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத இந்திய நாட்டின் இறையாண்மையை யாரிடம் போய் நாங்கள் சொல்வது?'' என்கிறார் அகில இந்திய மீனவர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் கலைமணி.
இனியும் பாரபட்சம் காட்டினால் நாடாளுமன்றத் தேர்தலில் மீனவர்களிடம் ஒரு ஓட்டும் வாங்க முடியாது.
http://www.tamilwin.net/show-RUmryDRbNZkxz.html
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் அதுதான் அவர்கள் வாழ்க்கை! தினமணி ஆசிரியர் தலையங்கம்
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 06:56.16 AM GMT ]
கச்சதீவு மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே 1974ல் இலங்கைக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய தவறு என்பதே, உலக அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இதை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு வழக்குத் தொடுத்திருந்தாலும், அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை.
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்பதும், கச்சதீவைத் திரும்பவும் இந்தியா பெற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினாலும், இலங்கையை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்துமா என்பதும் சந்தேகம்தான்.
கச்சதீவு இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்டாலும், 1974 ஒப்பந்தத்தின்படி, இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களும் இப்பகுதியில் தங்கள் பாரம்பரிய உரிமையுடன், தீவைச் சுற்றிலும் மீன் பிடிக்கலாம், தீவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வந்து செல்லலாம். இதற்கு யாரும் வீசா, கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டியதில்லை.
ஆனால், 1976ல் கடிதம் மூலமான திருத்தத்தில், இந்தத் தீவில் இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளைக் காயப் போடவும் ஓய்வு எடுக்கவும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மாற்றப்பட்டதாக இலங்கை அரசு சொல்கிறது.
1974 ஒப்பந்தப்படி, கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்த பிறகுதான் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சுடப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம்.
ஆனால், இந்தச் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம் கச்சதீவு மட்டுமே அல்ல. இதை முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றால் 1974-லிருந்து 2013 வரையிலான காலகட்டத்தை இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலம், கரும்புலிகள் இக்கடற்பரப்பை ஆதிக்கம் செய்த காலம், தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாத காலம் என மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
இலங்கை விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் தொடங்கிய போது, அவர்களுக்கான உதவிகள் தமிழ்நாட்டிலிருந்துதான் வருகின்றன என்பதால் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர் படகுகள் ஒவ்வொன்றையும் சந்தேகத்துடன் அணுகினர்.
கடத்தல்காரர்களாகக் கருதினர். தமிழ்நாட்டுக்குச் செல்லும் அல்லது திரும்பும் புலிகளாகக் கருதினர். இதனால் கண்மூடித்தனமாக தாக்குதல் கடலில் நடத்தப்பட்டது. அப்பாவி மீனவர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
விடுதலைப் புலிகளின் கடற்படையான கரும்புலிகள் ஆதிக்கம் பெற்றபோது, இந்திய மீனவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கைக் கடற்படை தாக்கப்படுவதாக இலங்கை இராணுவம் புகார் கூறியது. அப்போதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலை. இப்போதைய சிக்கல் வேறுவிதமாக மாறியிருக்கிறது.
இத்தனை காலமாக மீன்பிடிப்பதற்கான தடையாலும், உள்நாட்டுப் போரினாலும் அச்சமடைந்து ஒதுங்கிநின்ற இலங்கை மீனவர்கள் தற்போது மீண்டும் மீன்பிடித் தொழிலைத் தொடங்கியுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பில்தான் அதிக மீன்வளம் இருக்கிறது என்பதால், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிப் போய், இலங்கை மீனவர்களுக்குப் போட்டியாக மீன் பிடிக்கின்றனர்.
தமிழகத்தில் நாம் எவ்வாறு, இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசைக் கோருகிறோமோ அதுபோன்று, இலங்கை மீனவர்களும் தங்கள் அரசிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல், மீன்கொள்ளை ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு இலங்கைக் கடற்பரப்பில் எதுவரையிலும் இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிக்கலாம், எத்தனை லட்சம் தொன் மீன்களைப் பிடிக்கலாம், எத்தனை விசைப்படகுகளை அனுமதிக்கலாம் என்பது குறித்த ஒப்பந்தம் போடுவதாகத்தான் இருக்க முடியும்.
கச்சதீவு மீதான உரிமை கிடைத்தாலும்கூட, இலங்கைக் கடற்பரப்பில் மட்டுமே மீன்வளம் அதிகம் என்பதால், இந்த ஒப்பந்தம் காணப்படாமல் பிரச்னைக்கு முடிவு வராது.
இதில் இன்னொன்றும் நாம் பார்க்க வேண்டும். 1974-இல் இருந்த படகு எண்ணிக்கையைவிட இப்போதுள்ள படகு எண்ணிக்கை பல ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது. இராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல், நாகை, காரைக்கால் மீனவர்கள்தான் அதிகமான படகுகளில் செல்கிறார்கள்.
அதே கடற்பரப்பு, அதே மீன்வளம், ஆனால் பல்லாயிரம் படகுகள். இந்தப் படகுகள் பலவும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது உறவினர்கள், பினாமிகள், ஆதரவாளர்களுக்கும் சொந்தமானவை. அவர்களும், மீன்பிடித் தொழில், மீன் ஏற்றுமதி என்று பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படகு முதலாளிகள் ஒருநாளும் கடலுக்குள் சென்று வலை வீசியவர்கள் அல்ல. துப்பாக்கித் சூட்டில் சாகிறவன் மட்டும் மீனவன்.
ஒருவேளைக் கஞ்சிக்காக, அலைகடல் மேலே அலையாய்க் கிடந்து உயிரைக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் அதுதான் அவர்கள் வாழ்க்கை.
இத்தனை நாளும் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடல்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்திய அரசு வழங்கும் நிவாரணங்கள் ராஜபக்ச அரசால் தென் இலங்கைவாழ் சிங்களவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத்தான் பயன்படுகிறது என்கிற நிலையில், இலங்கையில் வாழும் தமிழ் மீனவர்களின் பிரச்சினையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கடமை நமக்கு உண்டு.
இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை பெற்றுத் தருவதோடு, எத்தனை படகுகள் அங்கே செல்ல வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதாக, உரிமங்கள் வழங்குவோராக தமிழக அரசு இருக்க வேண்டும். அதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்.
http://www.tamilwin.net/show-RUmryDRbNZkx6.html
பௌத்த புனர்ஜீவன கமிட்டியில் தினேஸ், கோத்தா, சம்பிக்க, விமல் ஆகியோர் சாட்சியம்
[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 01:20.52 AM GMT ]
பௌத்த புனர்ஜீவன கமிட்டியில் அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இன்று சாட்சியமளிக்க உள்ளனர்.
விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள சவ்சிறி பாய பிரதான மண்டபத்தில் இன்று காலை 9.00 மணிக்கு சாட்சியங்களை திரட்டும் பணிகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அனகாரிக்க தர்மபாலவின் சிறார்த்த தினத்தை முன்னிட்டு பௌத்த மத மேம்பாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக புனர்ஜீவன கமிட்டியின் இணைப்பாளர் மல்வானே சந்திரரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அனகாரிக்க தர்மபாலவினால் ஆரம்பிக்கப்பட்ட பௌத்த மறுமலர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கமிட்டியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய, அமைச்சர்களான தினேஷ்குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.
பௌத்த மத மேம்பாட்டுப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்து குறித்த அமைச்சர்களிடமும், பாதுகாப்புச் செயலாளரிடமும் சாட்சியம் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten