தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 maart 2013

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்! தமிழர்களை இந்திய அரசு ஏமாற்றிவிட்டது: தொல்.திருமாவளவன் கண்டனம் !


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடும் வகையிலும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை அறிவிக்கும் வகையிலும் இந்திய அரசு திருத்தங்களை முன்மொழிய வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் வலியுறுத்தி வந்தோம்.
அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசு கூறிவந்தது. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்ட நேரத்திலும்கூட மத்திய அமைச்சர்கள் இதே கருத்தைத்தான் தெரிவித்து வந்தனர்.
தாங்கள் முடிவெடுப்பதற்கு முன்பாகவே திமுக அவசரப்பட்டுவிட்டது என்றும் குற்றம்சாட்டி வந்தார்கள். ஆனால், அவர்கள் கூறிவந்ததற்கு மாறாக, ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது இந்திய அரசு நடந்துகொண்டுள்ளது.
இலங்கையில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மட்டுமே இந்தியா கருத்துத் தெரிவித்தது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றோ, சர்வதேச விசாரணை வேண்டுமென்றோ இந்தியா கோரவில்லை.
அது மட்டுமின்றி, அமெரிக்கத் தீர்மானத்தில் எந்தவொரு திருத்தத்தையும் முன்மொழியவில்லை. இது தமிழக மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் அலட்சியப்படுத்தி அவமதிக்கிற செயலாகும். இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய அரசு தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்படுகின்றன. ஆனால், ஐ.நா. அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் பலவற்றில் இந்தியா கையெழுத்திடவில்லை.
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரோம் ஒப்பந்தத்திலும் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. இவ்வாறு சர்வதேச அளவில் மனித உரிமைகள் தொடர்பாக நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்களை மதிக்காத ஒரு நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. அதனால்தான் இனப்படுகொலை நாடான இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிற மாணவர்களும் பொதுமக்களும் இந்தியாவை சனநாயகப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இந்தியா ஒரு சனநாயக நாடாகவே இருந்தால்தான் இன்னொரு நாட்டில் அது சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்க முடியும்.
எனவே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நம்முடைய போராட்டம் இந்திய அரசின் சனநாயக விரோதப் பண்பினை அம்பலப்படுத்துவதாக நீட்சி பெற வேண்டும். அதற்கு சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவி அழைக்கிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் பங்கேற்கக் கூடாது என அந்நாட்டின் சனநாயகச் சக்திகள் தீவிரமாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
அதேபோல இந்தியாவும் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கிற வகையில் அம்மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் அமைய வேண்டும் என்பதை இச்சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறது என தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmryDRVNZmqy.html


ஐநாவில் இந்தியாவின் துரோகம்! தமிழக காங்கிரசாரே என்ன பதில் சொல்வீர்கள்? தி.வேல்முருகன்
[ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 01:49.49 PM GMT ]
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா எந்த ஒரு திருத்தத்தையும் கொண்டுவராமல் அப்படியே ஏற்று வாக்களித்து ஒட்டுமொத்த தமிழகத்துக்கு பெரும் துரோகத்தை இழைத்திருக்கிறது.
இலங்கையில் நிகழ்ந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை...அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்த இலங்கையை ஒரு போர்க் குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டும்.
தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல். இந்தக் கோரிக்கைக்காக கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரைக் கொடுத்து போராடி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைதான் தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் ஜெனிவா ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பேசிய இந்திய பிரதிநிதி சிங்கள அரசாங்கம் குழிதோண்டி புதைத்துவிட்ட 13வது அரசியல் சாசனத் திருத்தத்தைப் பற்றி பேசுகிறார். இலங்கைக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செல்ல வேண்டும் என்கிறார்.
சர்வதேச போர்க்குற்றவாளியான இலங்கையின் அதிபர் மகிந்த ராஜ்பக்சவோ, தமிழருக்கு அரசியல் தீர்வே இல்லை என கொக்கரிக்கிறான். ஒன்றாக இருந்த தமிழர் தாயகப் பிரதேசமான வடகிழக்கு மாகாணத்தையே இரண்டாகத் துண்டாடி மாகாண சபைகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும் கபளீகரம் செய்திருக்கிறான்.
தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களவர்களை கட்டாயமாக குடியேற்றுவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கிறான். ஆனால் இந்தியாவோ இன்னமும் காலவதியாகிப் போன 13வது அரசியல் சாசன திருத்தம் பற்றி பேசுகிறது.
இலங்கையின் வடகிழக்கு இணைந்த பகுதிதான் தமிழர் தாயகப் பிரதேசம் என்கிறது ராஜிவ்- ஜெயவர்த்தன ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கையின் 13-வது அரசியல் சாசன திருத்தம்.
ஆனால் இதை பிரித்து வடக்கில் தனியே மாகாண சபை தேர்தல் நடத்துவதை இந்தியா வரவேற்கிறதாம். இன்னமும் 13-வது அரசியல் சாசன திருத்தம் பற்றி பேசுகிறதாம் இதைவிட பெரும் அபத்தம் என்ன இருக்கிறது?
ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோரி ஐநா மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த பரிந்துரையை அமெரிக்காவும் தமது தீர்மானத்தில் இணைத்திருந்தது. ஆனால் இந்தியாதான் தலையிட்டு அந்தப் பத்தியையே தூக்கி எறியச் செய்துவிட்டு இப்போது ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு மீண்டும் போக வேண்டும் என்று சொல்கிறார். இது என்ன கூத்து? நாடகம்? தமிழக காங்கிரசாரே பதில் சொல்லுங்கள்!!
இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலையே அல்ல என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் சொல்கின்றனரா? இலங்கையில் நிகழ்ந்தது போர்க்குற்றமே இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் சொல்கின்றனரா?
ஏன் இந்த இரட்டை வேடம்... உங்களால் உங்கள் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தமிழினத்துக்கு சார்பானதாக மாற்ற வக்கில்லாத போது இன்னும் உங்களுக்கு ஏன் அமைச்சர் பதவி,
உங்களுக்கு ஏன் காங்கிரஸ் கட்சி? சுயமரியாதையுள்ள மனிதராக இருந்தால் இன்னமும் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்கள்? இன்னும் ஏன் மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறீர்கள்?
காலம் உங்களுக்கானதாகவே இருந்துவிடாது.... போர்க் குரல்கள் ஓய்ந்துவிடாது...இந்த கலகக் குரல்களின் உச்சவடிவம் மாபெரும் மக்கள் புரட்சிதான்! இலங்கையா? தமிழ்நாடா? என்று தெள்ளத் தெளிவாக கேள்வி எழுப்பும் எங்களது தமிழ் மாணவர் சமூகத்தின் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு எங்கே போகும் என்பதை இனியும் இந்திய மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் உணராமல் இருப்பது அந்த அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமே கேடு என எச்சரிக்கிறேன்.

http://news.lankasri.com/show-RUmryDRVNZmp7.html

Geen opmerkingen:

Een reactie posten