போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இந்தியாவின் வீடமைப்புத் திட்டம், வன்னியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை, இலங்கை இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.
போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்ற போதிலும், இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு சில ஆயிரம் வீடுகள் கூடக் கட்டிக் கொடுக்கப்படாமல் உள்ள நிலையில், இந்த உதவித் திட்டத்தை இலங்கை அரசாங்கம் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கும் பயனபடுத்தி வருகிறது.
தமிழர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் போகவெவ என்ற சிங்களக் குடியேற்றக் கிராமத்தில் சிங்களவர்களுக்கு 50 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.
'சண்டே ஒப்சேவர்' வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே இலங்கை இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வன்னியில் 6000 சிங்களவர்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மீளக் குடியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ள அவர், அங்கு குடியேற்றப்படும் சிங்களவர்களுக்கு மேலும் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten