ஜெனிவாவில் கடந்த வாரம் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தியாவின் பலவீனத்தை வெகுவாகவே உலக அரங்கில் வெளிப்படுத்தியுள்ளது. உண்மையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தினால் இலங்கையை விட அதிகம் தலைவலியை எதிர்கொண்டது இந்தியா தான்.
இது இலங்கைக்கு அல்ல, இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த 'செக்' என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர். இலங்கையைச் சமாளிப்பது ஒன்றும் அமெரிக்காவுக்குப் பெரிய வேலை இல்லை என்றும், இலங்கைப் போரில் இந்தியா வகித்த பங்கை காரணம் காட்டி, இந்தியாவைத் தன்பக்கம் இழுத்துக் கொள்வதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சியே என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கருத்து எந்தளவுக்கு சரியானது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
ஆனால் ஜெனிவா தீர்மான விவகாரம் இந்தியாவின் உறுதியற்ற வெளிவிவகாரக் கொள்கை மற்றும் அதன் இராஜதந்திர பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது என்பதை மட்டும் மறுக்க முடியாது.
புதுடில்லியில் உறுதியான அரசியல் தலைமைத்துவம் ஒன்று இல்லாததன் விளைவே இந்த நிலைக்குக் காரணம் என்பது இந்தியாவின் அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
இந்திரா காந்திக்குப் பின்னர் அத்தகைய உறுதியான அரசியல் தலைமை புதுடில்லியில் அமையவில்லை. ராஜீவ் காந்திக்குப் போதிய அரசியல் அனுபவம் இருக்கவில்லை. அதனால் அவரால் தற்துணிவுடன் செயற்பட முடியவில்லை.
ஆட்சியியல் தந்திரங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய போது அவர் உயிருடன் இல்லை.
அவரையடுத்து ஆட்சியில் அமர்ந்த வி.பி.சிங், சந்திரசேகர், தேவகௌடா போன்றவர்கள் கூட்டணிக் கட்சிகளின் தாளத்துக்கு ஆடும் பொம்மைகளாகவே இருந்தனர்.
பி.வி. நரசிம்மராவ், ஐ.கே. குஜ்ரால், மன்மோகன்சிங் போன்றவர்கள் நேரு குடும்பத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நோகாமல் ஆட்சி செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும், அவர்களின் கடிவாளம் சோனியாவிடம் இருந்ததாலும் எதையும் செய்ய முடியவில்லை.
இந்திரா காந்திக்குப் பின்னர் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கை விடயங்களில் ஓரளவுக்குச் சமரசத்துக்கு இடம்கொடுக்காமல் தற்துணிவுடன் நடந்து கொண்டவரென்றால் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டும் தான்.
அணுகுண்டுச் சோதனை விடயத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் போனதிலும் சரி, கார்கில் போரைக் கையாண்ட விதத்திலும் சரி, இலங்கையில் தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி நின்றதிலும் சரி வாஜ்பாயின் அணுகுமுறை பரவலாகவே வரவேற்கப்படுகிறது.
வாஜ்பாய் இந்தியாவின் சார்பில் உறுதியான முடிவை எடுக்கக்கூடிய அளவுக்கு, பலமான ஒரு தேசியத் தலைவராகவே இருந்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி நியமித்த பிரதமர்கள் எவருமே தற்துணிவுடன் முடிவெடுக்கத் தக்கவர்களாகவோ தேசியத் தலைவர்களாகவோ இருக்கவில்லை.
இதன் காரணமாக வெளிவிவகாரக் கொள்கை விடயத்தில் சவுத் புளொக்கில் உள்ள கொள்கை வகுப்பாளர்களே எல்லா முடிவுகளையும் எடுப்பவர்களாக மாறிவிட்டனர். ஒரு அரசாங்கத்தில் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றனர்.
ஆனால் அதேவேளை, கொள்கை வகுப்பாளர்களின் முடிவுக்கு அமையவே எல்லா நேரங்களிலும் நாட்டை வழிநடத்த வேண்டிய தேவை அரசியல் தலைமைகளுக்கு இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் முக்கியமான முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பதற்குரிய அதிகாரம் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.
மணிக்கூட்டு முள் போன்று எல்லா நேரங்களிலும் கொள்கை சார்ந்து செயற்படுவதுதான் ஒரு அரசியல் தலைமையின் கடமையல்ல.
அவ்வப்போது தேவையின் நிமித்தம் எல்லை மீறுவதற்கு அரசியல் தலைமைகளுக்கு தற்துணிவு இருக்க வேண்டும்.
இந்திரா காந்தி தனது தற்துணிவின் பேரில் தான் கிழக்கு பாகிஸ்தானைப் பிரிக்க போரை நடத்தினார்.
அதன் பின்னர் பங்களாதேஷ் இந்தி(ரா)யாவின் காலடியில் இருந்தது.
அதுபோலவே அமெரிக்க சார்பு அணியின் கைப்பாவையாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரும் உத்தியாகவும் தமிழர் பிரச்சினையை தீர்க்கும் கருவியாகவும் இலங்கையில் தமிழப் போராளிகளின் ஆயுதப் போராட்டத்துக்கு அவர் ஊக்கமளித்திருந்தார்.
இவை இந்திரா காந்தியின் தனிப்பட்ட தற்துணிவின் பேரில் இடம்பெற்றவை.
இந்திரா காந்தியின் காலத்தில் மாலைதீவு, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், இலங்கை என்று அண்டை நாடுகள் அனைத்தும் இந்தியாவின் கட்டுக்குள் இருந்தன. ஆனால் இந்திரா காந்திக்குப் பிந்திய அரசியல் தலைமைகளால் பிராந்தியத்தில் இந்தியாவின் பிடியை உறுதித் தன்மையைப் பேண முடியாது போனது.
இப்போது பங்களாதேஷ், இந்தியாவுடன் நெருக்கமாக இல்லை. நேபாளத்துடனும் சரியான உறவு இல்லை.
மாலைதீவு இந்தியாவின் பேச்சை மறுக்கும் அளவுக்கு போய்விட்டது. பூட்டான் கூட இந்தியாவின் பேச்சை மீறி சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை வைத்துக் கொள்ளத் தயாராகி விட்டது. இலங்கையைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை.
இந்தியாவின் பேச்சை இலங்கை செவிமடுக்கும் நிலையில் இருந்திருந்தால் கடந்த வாரம் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அது எதிர்த்திருக்கக் கூடாது.
ஏனென்றால் தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்று இந்தியா திரும்பத் திரும்ப கொழும்புக்கு ஆலோசனை கூறியது. அதனை வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
அது மட்டுமன்றி தீர்மானத்தை பலவீனப்படுத்த அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டை எட்டுமாறும் கூறியது. எனினும் இந்தியாவின் பேச்சை இலங்கை கணக்கில் எடுக்கவில்லை.
அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானத்தை முன்வைக்க இலங்கை தயாராக இருக்கவில்லை. தீர்மானத்தை எதிர்ப்பதிலேயே அது உறுதியாக இருந்தது.
இதனால் இலங்கை விவகாரத்தில் இந்தியா எதையும் செய்யத்தக்க நிலையில், இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்கக் கூடிய நிலையில் இல்லை என்பது வெளிப்படையானது.
அது மட்டுமன்றி தீர்மானத்தை இலங்கை எதிர்க்கப் போகின்றது என்று தெரிந்ததும் அதனை நீர்த்துப் போக வைத்த இந்தியாவே கடைசியில் வெளிப்படையாக திருத்தங்களை முன்வைத்தது. இது மிகவும் கேலிக்கூத்தான ஒரு விடயமாகவே பார்க்கப்பட்டது.
யாருடைய சொற்படி இந்திய வெளிவிவகாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற கேள்வியை இது எழுப்பியது. மேலும் திமுகவின் அழுத்தங்களை அடுத்து நாடாளுமன்றத்தில் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர முயன்ற போது கூட அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது மன்மோகன்சிங் அரசாங்கம்.
ஜெனிவா தீர்மானத்தில் திருத்தம் செய்யப் போவதாக அறிவித்து விட்டு கடைசியில் ஒன்றும் செய்யாமல் தமிழ்நாட்டின் வெறுப்பை தலையில் வாங்கிக் கொட்டிக் கொண்டது மத்திய அரசு.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது நடுநிலையானதாகவோ நீதியின் பாற்பட்டதாகவோ வகுக்கப்படவில்லை. என்பதையும் தனியே சீனா, பாகிஸ்தான் என்ற சக்திகளை மையப்படுத்தியே அது செயற்படுவதையும் இந்த விவகாரம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இனப்படுகொலை என்ற பதத்தை தீர்மானத்தில் சோ்த்தால் சீனா, பாகிஸ்தானுடன் இலங்கை நெருக்கமாகி விடும் என்ற சவுத் புளொக் கொள்கை வகுப்பாளர்களின் ஆலோசனையை மீறி இந்திய அரசியல் தலைமைகளால் எதையும் செய்ய முடியவில்லை.
அதிகாரத்திலுள்ள யாருமே சுயமாக முடிவெடுக்கத்தக்க நிலையில் இல்லாமல் போனதால் தான் தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திமுகவின் ஆதரவை இழக்க நேரிட்டது.
உள்நாட்டு மக்களின் விருப்பங்களைப் புறக்கணிக்கும் ஒரு வெளிவிவகாரக் கொள்கையை சவுத் புளொக் வகுத்துக் கொடுத்துள்ளதால் புதுடில்லியின் பலவீனமான தலைமைத்துவமும் நலிந்து போன இராஜதந்திரமும் சர்வதேச அரங்கில் வெளிச்சமாகி உள்ளது.
ஒரு காலத்தில் இந்தியா என்பது பிராந்தியத்தில் ஒரு வலுவான சக்தியாகக் கணிக்கப்பட்டது. ஆனால் இன்று புதுடில்லியில் உள்ள பலவீனமான தலைமைத்துவத்தினால் இந்தியா வெறும் படைபலம் கொண்ட நாடாக மட்டும் திகழ்கிறதேயன்றி பிராந்தியத்தில் தனது வல்லாண்மையை, பிடியைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலைதான் உள்ளது.
இந்தப் பலவீன நிலைக்கு இந்தியா முடிவு கட்டும் வரை இலங்கை விவகாரத்தில் இந்தியாவினால் ஒருபோதும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவோ அல்லது தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் தலையீடு செய்வதோ முடியாத காரியமாகவே இருக்கும்.
ஹரிகரன்
http://news.lankasri.com/show-RUmryDRYNZlu2.html
Geen opmerkingen:
Een reactie posten