தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 24 maart 2013

ஜெனீவா பிரேரணை இலங்கை மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை! அரசின் முக்கிய தலைவர்கள்


ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றிய பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு எவ்விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்று அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது வெறுமனே இலங்கை அர சாங்கத்திற்கும் மக்களுக்கும் பூச்சாண்டி காட்டும் செயற்பாடு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை அரசாங்கம் இந்தப் பிரேரணையை ஆரம்பம் முதல் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருப்பதனால் இப் பிரேரணையின் பக்கவிளைவுகள் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதி உயர் பாதுகாப்பு வலயங்களை வாபஸ் பெற்று அங்குள்ள பொது மக்களுக்கு சொந்தமான இடத்தை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் அதிகார பரவலாக்கலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அமெரிக்கப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது பற்றி அந்த அரசாங்கப் பிரமுகர் கருத்து தெரிவிக்கையில், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமன்றி நாடு பூராவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை குறிபார்த்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியல்ல. தேவையேற்படும் போது இத்தகைய அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது ஊர்ஜிதமாகும் போது பாதுகாப்பு வலயங்கள் வாபஸ் பெறப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
அந்த முக்கியஸ்தர் மேலும் தகவல் தருகையில்; வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக கூறினார். அது போன்று அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கலையும் கீழ் மட்டத்தில் இருந்து இப்போது செயற்படுத்தி வருகின்றது என்று சொன்னார்.
அமெரிக்க அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பணிப்பாளர் நாயகம் நவநீதம்பிள்ளை அம்மையாரும் எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் அரசசார்பற்ற அமைப்புகள் தங்களிடம் இலங்கை பற்றி தெரிவித்த ஆதாரமற்ற கருத்துக்களையும் கட்டுக்கதைகளையும் நம்பி ஏமாந்து போய்விட்டார்கள் என்று கொழும்பில் உள்ள அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
26 அரசசார்பற்ற அமைப்புகள் எல்.ரி.ரி.ஈ. பணத்தைக் கொண்டு செயற்படுகின்றன. அவை உலகெங்கிலும் கிளைகளை அமைத்து இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை பல நாடுகளில் இலட்சோப இலட்ச ரூபாய்களை செலவழித்து மேற்கொண்டு வருகின்றன.
அவை தெரிவிக்கும் தவறான தகவல்களை உண்மையென்று நம்பி அமெரிக்க அரசாங்கமும் நவநீதம்பிள்ளை அம்மையாரும் இன்று மூக்குடைபட்டு வெளியில் முகம் காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டில் வழமையான ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கை தொடர்பாக இன்னுமொரு ஆய்வொன்றை நடத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை தான் சரியான முறையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது என்பதை நிரூபிப்பதற்கு 2014 மார்ச் மாதம் வரையில் போதியளவு அவகாசம் இருக்கிறதென்று கூறினார்.
அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை மென்மையாக நுள்ளிவிட்டு அதன் மூலம் இன்பம் காண்பதற்காக இந்தப் பிரேரணையை இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றினாலும் இந்து சமுத்திரத்தின் ஒரு கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்திருப்பதனால் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை எந்த வகையிலும் சீர்குலைக்க விரும்பவில்லை என்று தெரியவருகிறது.
அதனால், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை நடைமுறைப்படுத்தும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Geen opmerkingen:

Een reactie posten