தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

கடும்போக்கு பௌத்தர்களால் இலக்கு வைக்கப்படும் சிறிலங்கா முஸ்லீம்கள்!


கடும்போக்கு பௌத்தர்களால் இலக்கு வைக்கப்படும் சிறிலங்கா முஸ்லீம்கள்

சிறிலங்காவில் தொடர்ச்சியாக பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை,
மிருகங்கள் பலியிடப்படுதல் தொடர்பான வதந்திகள், இஸ்லாமிய சட்டப்படி உண்ணப்பட
வேண்டிய உணவு முறைமை (halal) தொடர்பான விமர்சனங்கள் போன்ற தொடர்ச்சியான
தாக்குதல்களின் பின்னணியில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்கள்
கடும்போக்கு பௌத்தர்களால் எவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை பி.பி.சி செய்தி
சேவையின் சாள்ஸ் ஹவிலண்ட் ஆராய்கிறார்.
ஜனவரி மாதத்தில் ஒருநாள் காலையில், சிறிலங்காவின் சட்டக் கல்லூரி ஒன்றில்
பௌத்த பிக்குகளின் குழுவொன்று கலவரம் ஒன்றை மேற்கொண்டது.
அன்றைய தினம் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் முஸ்லீம் மாணவர்களுக்கு
சாதகமாக இருந்ததைக் கண்டித்தே பௌத்த சிங்களவர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் ஒரு
சிலர் மீது தாக்குதலையும் மேற்கொண்டனர்.
இச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களின் பின்னர், கொழும்பு, தெமட்டகொடவில் உள்ள
மிருகங்களைப் பலியிடும் இடத்தின் மீது பௌத்த பிக்குகள் தாக்குதலை மேற்கொண்டனர்.
இவ்விரு தாக்குதல்களும் பிழையானவை. ஆனால் ட்ரக் வாகனங்களின் சாரதிகள்
பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் என்றும் அவர்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்
பௌத்த பிக்குகள் வதந்தியைப் பரப்பினர்.
சிறிலங்கா பௌத்த பிக்குகள் இவ்வாறான நேரடி நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொண்டு
வருகின்றனர். இது சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்தே
மேற்கொள்ளப்படுகின்றது.
புதிதாக தோன்றியுள்ள பௌத்த கடும்போக்கு குழுக்களே இவ்வாறான தாக்குதல்களை
மேற்கொள்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவில் சிங்கள பௌத்தர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட படையினரால்
தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் முஸ்லீம்
மக்களுக்கு எதிராக இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது தமிழ் பேசும் 9 சதவீதமான முஸ்லீம்
மக்கள் பல்வேறு வன்முறைகளுக்கு முகம்கொடுத்திருந்தனர்.
சிறிலங்காவின் சிறுபான்மை முஸ்லீம் மக்கள், 26 ஆண்டுகால யுத்தத்தின் போது
சிறிலங்கா அரசுக்கு விசுவாசமாக இருந்தனர். இதன் காரணமாக, 1990ல் சிறிலங்காவின்
வடக்கிலிருந்து தமிழ்ப் புலிகளால் இவர்கள் சில மணித்தியால முன்னறிவித்தலுடன்
வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது தாம் பெரும்பான்மை பௌத்த
கடும்போக்காளர்களால் இலக்கு வைக்கப்படுவதாக முஸ்லீம்கள் அச்சம் கொள்கின்றனர்.
முஸ்லீம்கள் மீதான அண்மைய தாக்குதல்களில் பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பு
ஒன்று முன்னின்று செயற்படுகிறது.
‘ஒவ்வொரு பௌத்தனும் முஸ்லீம் தீவிரவாதத்திற்கு எதிராக அதிகாரபூர்வமற்ற
காவற்துறை போன்று செயற்பட வேண்டும். முஸ்லீம் மக்கள், பௌத்த அடையாளத்தை
அழிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்’ என அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில்
இந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
சிங்கள மக்களின் மனங்களை இஸ்லாமியர்கள் மாற்றுவதற்கான முயற்சிகளில்
ஈடுபடுவதாகவும், நாட்டில் பள்ளிவாசல்கள் பலவற்றைக் கட்டுவதாகவும் தெகிவளையிலுள்ள
விகாரை ஒன்றுக்கு நான் சென்ற போது அங்கே இருந்த அக்மீமன தயாரத்ன என்ற பௌத்த தேரர்
தெரிவித்தார்.
கடந்த மூன்று பத்தாண்டுகளில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை
சிறிது அதிகரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
‘சிங்களவர்களின் குடும்பங்கள் மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என முஸ்லீம்கள்
பரப்புரை செய்யும் அதேவேளையில், தமது சனத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என பரப்புரை
செய்கின்றனர்.
இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது’ என அக்மீமன தயாரத்ன என்ற
தேரர் மேலும் விளக்கினார்.
‘மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளைப்
பாருங்கள். இவை அனைத்தும் பௌத்த நாடுகள். ஆனால் இந்த நாடுகளில் முஸ்லீம்கள், பௌத்த
கலாசாரத்தை அழித்து விட்டு தமது கைகளில் நாட்டின் அதிகாரத்தை எடுத்துள்ளனர்.
முஸ்லீம்கள் இந்தத் திட்டத்தை சிறிலங்காவிலும் மேற்கொள்ள முயற்சிப்பது எமக்கு
கவலை தருகிறது’ என தேரர் மேலும் தெரிவித்தார்.
இந்த தேரர் இவ்வாறான கருத்தைத் தெரிவித்து சிறிது நாட்களின் பின்னர் இவரது
குழுவினர் கத்தோலிக்கர்கள் வழிபாட்டை மேற்கொள்ளும் இடம் எனக் கருதி ஒரு வீட்டின்
மீது மேற்கொண்ட தாக்குதலில் அங்கிருந்த பெண்மணி கடுமையான அடிகாயங்களுக்கு
உட்படுத்தப்பட்டதாக உள்ளுர் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், தம்புள்ள நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில்
ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் மீது பௌத்த பிக்குகளின் தலைமையில் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டது.
இதிலிருந்து சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை இனங்கள் பின்பற்றும் மத
வழிபாட்டிடங்களை இலக்கு வைத்து பௌத்த பிக்குகளின் தலைமையில் பல்வேறு தாக்குதல்கள்
மேற்கொள்ளப்படுகின்றன.
மார்ச் 18 அன்று, சிறிலங்காவின் தென்பகுதியில் வாழும் கத்தோலிக்க மதகுரு
ஒருவரின் வீட்டைச் சுற்றி வளைத்த பௌத்த காடையர்கள் ரயர்களில் நெருப்பை
மூட்டியதுடன், வீட்டினுள்ளே இருந்தவர்களை நோக்கி கத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
சிறிலங்கா முழுவதிலும் வாழும் முஸ்லீம்கள் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களால்
கவலையடைந்துள்ளதுடன், எல்லோரும் அச்சத்திலேயே வாழ்கின்றனர் என அகில இலங்கை
ஜமையத்துல் உலமா என்ற இஸ்லாமிய மதகுருக்களின் தலைமை அமைப்பின் தலைவர் மப்ரி மிம் றிஸ்வி தெரிவித்தார்.
பௌத்த புனித இடங்களை முஸ்லீம்கள் களங்கப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை
றிஸ்வி மறுத்ததுடன், பௌத்தர்கள் கூறுவது போன்று முஸ்லீம்கள் கடும்போக்குடன் நடந்து
கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
‘பௌத்த மத வழிபாட்டிடங்களை இலக்கு வைத்து முஸ்லீம்கள் எந்தவொரு
தாக்குதல்களிலும் ஈடுபடவில்லை. முஸ்லீம்கள் இதனை ஒருபோதும் செய்யமாட்டார்கள்.
சமாதானத்துடனும் ஒவ்வொரு மதத்தையும் மதித்து நடக்க வேண்டும் என நாம் முஸ்லீம்
மக்களுக்கு வழிகாட்டி வருகிறோம்’ என றிஸ்வி குறிப்பிட்டார்.
‘எமது நாட்டை, மதத்தை, இனத்தைக் காப்பாற்றுபவர்கள் புத்த பிக்குகளாவர். இந்த
மதகுருமார்கள் தொடர்பாக எவரும் சந்தேகம் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உந்துசக்தியை
வழங்குவதற்கு நாங்கள் இருக்கிறோம்’ என அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலரும்,
அதிபரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச, புதிய பயிற்சிப் பாடசாலை ஒன்றின் திறப்பு
விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக
மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் 1983ல் சிறிலங்கா தமிழர்களுக்கு எதிராக
சிங்களவர்கள் கலவரத்தை ஏற்படுத்திய பின்னர் யுத்தம் ஏற்பட்டது போன்றதொரு எதிரொலியை
ஏற்படுத்துவதாக சிறிலங்கர்கள் பலர் கருதுகின்றனர்.
ஆனால் தற்போதும் பௌத்த சிங்கள கடும்போக்காளர்கள் தமது சமூக மற்றும் அரசியல்
செல்வாக்கை விரிவுபடுத்தி இவ்வாறான வெறுக்கத்தக்க பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதே.



http://asrilanka.com/2013/03/29/16298

Geen opmerkingen:

Een reactie posten