தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 maart 2013

நீண்ட தூக்கத்தின் பின்-பெளத்த பிக்குமார் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கத்தக்கது: மன்னார் மறைமாவட்ட ஆயர் !


தமிழகத்தில் பெளத்த பிக்குமார் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து ஆன்மீகச் சுற்றுலாவுக்காக இந்தியா சென்ற  பௌத்த பிக்குகள் அண்மையில் தாக்கப்பட்டனர்.
ஒருவர் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றிருந்தபோதும், மற்றொரு பௌத்த பிக்கு சென்னை மத்திய புகையிரத நிலையத்திலும் தாக்கப்பட்ட சம்பவங்களை மன்னார் குருக்கள் மற்றும் மக்கள் பெயரால் தான் வன்மையாக கண்டிப்பதாக மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்திற்கு உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்கான அக்கறையும் விழிப்புணர்வும் கொண்டு தமிழ் நாட்டில் பரவலாக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில், அங்குள்ள மாணவர் சமுதாயத்தால் முன்னெடுக்கப்படும் அறநெறிப் போராட்டங்களையும் நன்றியோடு நினைந்து வரவேற்பதோடு அங்கு ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்ட வேண்டத்தகாத வன்முறைச் செயல்கள் எமக்கு வருத்தமளிப்பதாக இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதாவது இலங்கையில் இருந்து ஆன்மீகச் சுற்றுலா மேற்கொண்டு இந்தியா வந்திருந்த பௌத்த மத பிக்கு ஒருவர் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றிருந்தபோதும், மற்றொரு பௌத்த பிக்கு சென்னை மத்திய புகையிரத நிலையத்திலும் தாக்கப்பட்ட
சம்பவங்களை ஊடகம் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றோம்.
ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களையும், அதுவும் மதத்தலைவர்களையும் தாக்கும் செயற்பாடுகளை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தலுக்கு உள்ளாக்க முடியாது. இது மனிதத்திற்கு எதிரான குற்றம்.
ஏதுமறியாத அப்பாவிகள் அதிகளவில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள பின்புலங்களை இந்த மண்ணில் நாம் கொண்டுள்ளோம்.
ஆயினும் இந்த மண்ணின் மக்களின் நீடிய விடுதலைக்கும் நல்லிணக்கத்திற்கும் இப்படிப்பட்ட செயற்பாடுகள் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பது உண்மை.
எனவே இலங்கையில் இருந்து வருகைதரும் அப்பாவி சிங்கள மக்களையும், பௌத்தமத குருக்களையும் தாக்குவதும் தாக்கமுயல்வதும் நீதி நிலைநிறுத்தும் வேட்கை உள்ளவர்களின் செயல்முறைகளுக்கு முற்றிலும் முரணானது.
ஆகவே இத்தகைய மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவங்களை மிக வன்மையாகக் கண்டிப்பதோடு தமிழகத்தில் புத்தபிக்குகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின்முன் நிறுத்தவும் இனிமேல் இப்படியான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தவும் இந்திய, தமிழக அரசுகளை கேட்டுக்கொள்கிறோம் என்று மன்னார் ஆயர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten