சென்னை ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இலங்கை நாட்டைச் சேர்ந்த நடுவர்களுக்கும் தடை விதிக்க பிசிசிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வீரர்களை விலக்க சூப்பர் கிங்ஸ் முடிவு?
ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் போட்டியை நடத்த விட மாட்டோம் என பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை வீரர்களை தொடர் முழுவதும் விலக்க சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 2 இலங்கை வீரர்களான குலசேகரா மற்றும் அகிலா தனஞ்ச்யாவை இந்த தொடர் முழுவதும் நீக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் போட்டியை நடத்த விட மாட்டோம் என பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதனால் சென்னையில் நடக்கும் போட்டிகளை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மற்ற அணி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டன. இதை ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.
மேலும், சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்காத படி பார்த்துக் கொள்ளுமாறு அணி நிர்வாகத்தை ஐ.பி.எல் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவசரமாக கூடி இது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
அப்போது 2 இலங்கை வீரர்களான குலசேகரா மற்றும் அகிலா தனஞ்ச்யாவை இந்த தொடர் முழுவதும் நீக்க அணி நிர்வாகம் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
மேலும் தமிழக அரசின் ஒத்தழைப்பை பெறவும் இந்த நடவடிக்கையை அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten