சிங்கள அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் தமிழினத்தை ஏமாற்றிய இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை, வேளச்சேரியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில பின்வருமாறு:
1. வீரவணக்கம்
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகமே போர்க்கோலம் பூண்டது.
சிங்கள அரசு மீது தற்சார்புள்ள பன்னாட்டுக் குற்றப் புலனாய்வு விசாரணை வேண்டுமென்றும், தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் இந்திய அரசு அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கைகளுக்காக கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரும், சென்னை அருகே நெற்குன்றத்தைச் சேர்ந்த தோழர் விக்ரம் என்பவரும், மதுரையைச் சேர்ந்த ஒருவரும் தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்தனர். அவர்களுக்கு இக்கூட்டம் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அத்துடன் பாலியல் வல்லுறவு மற்றும் அமில வீச்சு ஆகிய ஆணாதிக்க வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு புதுதில்லியிலும் தமிழகத்திலும் உயிரிழந்த இளம்நங்கைகளுக்கு இக்கூட்டம் தமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
2. தமிழினத்தை ஏமாற்றிய இந்திய அரசுக்குக் கண்டனம்
உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களும், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் பல்வேறு தொடர் போராட்டங்களின் மூலம் வலியுறுத்தியும்கூட, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடத்தியது இனப்படுகொலை என்றோ, அதற்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்றோ ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தாமல், சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கும் துரோகம் இழைத்திருக்கிற இந்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
3. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகல் தமிழகத்தில் திமுக தலைமையில் இயங்கி வந்த சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்று விடுதலைச் சிறுத்தைகள் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்றது. திமுக தலைமையிலான அக்கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தமது ஆதரவை நீட்டித்தது.
தற்போது ஈழத் தமிழர்ச் சிக்கலிலும் தமிழகத்திற்கான நதிநீர் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் தொடர்பான சிக்கல்களிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து இழைத்து வருகிற துரோகத்தைக் கண்டித்து மைய அரசுக்கு இதுவரை கொடுத்துவந்த ஆதரவை விடுதலைச் சிறுத்தைகள் தற்போது விலக்கிக் கொண்டுள்ளது. தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் எடுத்த இந்த முடிவை இச்செயற்குழு வரவேற்றுப் பாராட்டுகிறது.
4. இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது
கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இனப்படுகொலைக் குற்றம் இழைத்த இலங்கையில் இம்மாநாட்டை நடத்தக் கூடாது என ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பல எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்காமல் தொடர்ந்து அவர்களை ஒடுக்கி வரும் ராஜபக்ச அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில் கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. ஒருவேளை அம்மாநாடு இலங்கையில் நடைபெறுமெனில் அதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என இக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.
5. சென்னையில் மக்கள் ஒற்றுமைப் பேரணி
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் சென்னையில் மாபெரும் மக்கள் ஒற்றுமைப் பேரணி மற்றும் விருதுகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடத்துவதென்று கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பேரணியில் ஈழத் தமிழர்களுக்கான கோரிக்கைகள் மற்றும் தலித் மக்களுக்கான கோரிக்கைகள் அடங்கிய முழக்க அட்டைகள்இ பதாகைகள், இயக்கக் கொடிகள் ஆகியவற்றுடன் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
6. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - சிங்களர்கள் இடம்பெறக்கூடாது
பல நூறு கோடி ரூபாய் இலாபம் ஈட்டுகிற கிரிக்கெட் போட்டிகளை ஐ.பி.எல். அமைப்பு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அப்போட்டிகள் தொடங்கவுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள 9 குழுக்களில் 8இல் சிங்களக் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இரண்டு அணிகளுக்கு சிங்களர்களே தலைவர்களாகவும் உள்ளனர்.
சென்னையில் 10 போட்டிகள் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெறும் போட்டிகளிலும் சிங்களர்கள் இடம்பெறக் கூடாது. அதற்கான நடவடிக்கைகளை ஐ.பி.எல். அமைப்பைச் சார்ந்தவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
Geen opmerkingen:
Een reactie posten