யாழ்.குடாநாட்டினை சூழுவுள்ள தீவகப் பகுதிகளிலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறி வருவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமையே அதற்கு காரணமென கூறப்படுகின்றது. குறிப்பாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியிருந்த கணிசமான மக்கள் தீவகப் பகுதிகளிலேயே விருப்பத்திற்கு மாறாக குடியேற்றப்பட்டிருந்தனர்.
அவ்வாறு குடியேற்றப்பட்ட பல குடும்பங்கள் கூட மீண்டும் வன்னிக்கோ அல்லது யாழ்.குடாநாட்டினுள்ளோ நகர்ந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் இன்மை மற்றும் குடிநீர் பிரச்சினை போன்றவை முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
இதனால் மக்கள் அங்கு வாழ்வதற்கான சூழல் இல்லையெனக்கருதி வெளியேற முற்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூடிய விகிதாசார ரீதியிலான வாக்குகள் நெடுந்தீவிலேயே மகிந்தவுக்கு வீழ்ந்திருந்தது. நெடுந்தீவை சின்ன சிங்கப்பூராக்கப் போவதாக ஜனாதிபதி அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் நெடுந்தீவிற்கான போதிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் மக்கள் நாட்கணக்கில் காத்திருப்பதை தான் நேரில் கண்டதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிறீதரன் தெரிவித்தார்.
நெடுந்தீவை சொந்த இடமாக கொண்டுள்ள அவர் தற்போது அங்கு தனது மெய்பாதுகாவலர்களுடன் சென்று திரும்பக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
22 வருடங்கள் தீவினை யார் ஆண்டார்கள் என்பது மக்களுக்கு தெரியும். ஒரு தொழிற்சாலை குடிக்க தண்ணீர் ஒன்றுமேயில்லை. கடற்படைக்கு துணி தைத்துக்கொடுக்க ஒரு தொழிற்சாலை அது கூட கடற்படை அமைத்துக் கொடுத்தது என தெரிவித்த சிறீதரன் இவர்கள் செய்த அபிவிருத்தி என்னவென கேள்வி எழுப்புகின்றார். வன்னியை புலிகள் இருண்ட காலத்தினுள் வைத்திருந்ததாக இவர்கள் இப்போது குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் புலிகளது நிர்வாக காலத்தில் தொழிறசாலைகள் பல சுமூகமாக இயங்கியதையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
போதிய அடிப்படை வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படாமையாலேயே தீவகத்திலிருந்து மக்கள் வெளியேறுவதாக ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten