தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 maart 2013

கிளிநொச்சி கூட்டமைப்பு அலுவலகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்! - பத்திரிகையாளர்களிடம் சுரேஸ் பிரேமச்சந்திரன் !!


தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவம் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு சாடியுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தின் மெய் முகத்தை இது காட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகத்திற்குள் இன்று 12மணியளவில் புகுந்துகொண்ட சில நபர்கள் சிங்க கொடிகளுடன் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் மேற்படி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், இன்று காலை பாராளுமன்ற உறுப்பி னர்கள் சுமந்திரன், மாவைசேனாதிராசா, சிறீதரன், சரவணபவன் ஆகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அங்கு சிங்க கொடிகளுடன் வந்த நூற்றிற்க்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள், உள்ளே புகுந்து கற்களாலும், பொல்லுகளாலும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான முகம் எதுவென்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது. மேலும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாகவும் இது அமைந்திருக்கின்றது.
எனவே இந்த தாக்குதல் சம்பவத்தை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும் தாக்குதல் நடத்த வந்த இருவரை பொதுமக்கள் நையப்புடைத்து பிடித்து வைத்திருக்கின்றனர். எனினும் தாக்குதல் இடம்பெற்று அரைமணி நேரத்தின் பின்னர் அங்குவந்த பொலிஸார் மக்கள் பிடித்து வைத்திருந்தவர்களையும் விடுதலை செய்திருக்கின்றனர். எனவே இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.
தெல்லிப்பளையில், அச்சுவேலியில் இன்று கிளிநொச்சியில் என அராஜகம் தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் சர்வதேசம் தன்னுடைய கடப்பாட்டுடன் கூடிய கவனத்தைச் செலுத்த வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாக்குதல் செய்தவர்களை பொலிஸார் விடுதலை செய்து பின்னர் பொலிஸ் அலுவலகத்திற்கு திரும்பி வரும் காட்சிகள் அடங்கிய புகைப்படம்..... 



http://news.lankasri.com/show-RUmryDQUNZis7.html

Geen opmerkingen:

Een reactie posten