கடந்த பல மாதங்களாக இலங்கைக்கு எதிரான ஐநாவின் தீர்மானத்திற்கு இந்தியா மலேசியா போன்ற நாடுகள் ஆதரவாக இருப்பார்களா இல்லையா என்று மலேசியாத் தமிழர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது இந்தியா உட்பட 25 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மலேசியா உட்பட 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. நடுநிலை வகித்ததன் மூலம் மலேசியா இலங்கையில் நடந்த இனப் படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு மலேசிய அரசாங்கம் ஆதரவு வழங்குகிறது என்று தெரிகிறது.
இங்கே தமிழர் அமைப்புகள் பல மறியல், அரசாங்கத்திடம் மகஜர் வழங்கியும் கூட மலேசியா இந்தத் தீர்மானத்திற்கு நடுநிலை வகித்ததன் மூலம் மலேசியத் தமிழர் சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தருவதாக சமூக சிந்தனையாளர் ஈஸ்வரலிங்கம் தெரிவித்தார்.
இதுமட்டுமன்றி அண்மையில் நிர்வகிக்கப்பட்ட இலங்கை விவகாரத்துக்கான மலேசிய நாடாளுமன்ற கண்காணிப்புக்குழு பிரதமரிடம் ஐநாவின் தீர்மானத்துக்கு மலேசியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போதும் அரசாங்கம் நடுநிலை வகித்தது பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இது மலேசியத் தமிழர் சமூகத்தினரிடம் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வருங்காலத்தில் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மலேசியா குரல் எழுப்பி உலக சமுதாயத்தின் நன்மதிப்பை பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
http://www.lankawin.com/show-RUmryDRXNZlo0.html
Geen opmerkingen:
Een reactie posten