அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சென்ற முறை நீர்த்துப் போகச் செய்ததைப் போலவே, இம்முறையும் உள்ளடி வேலைகளைச் செய்து, இறுதியில் ஒப்புக்காக தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததாகக் காட்டிக் கொண்டு சரித்திரப் பழியைச் சுமந்து நிற்கிறது இந்தியா என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகம் வெகு ஆவலாக எதிர்பார்த்த ஜெனிவாவில் கூடி விவாதித்து, இலங்கையின் போர்க்குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும், அங்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்காகவும் ராஜபக்ச அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்ல, இனி எதிர்காலத்திலும் எந்த ஒரு அரசும், இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடாதிருக்க ஒரு பாடம் புகட்டுப்படுவதாகவும் அமைய வேண்டும் என்று விரும்பிய உலகத் தமிழர்கள் மற்றும் உண்மையான மனித உரிமை ஆர்வலர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்!
இந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் சென்ற ஆண்டைப் போலவே, வெடியாக இல்லாமல் நீர்த்துப் போன புஸ்வாணம் ஆகிவிட்டது. ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையை, போராட்டத்தை நசுக்கிட, சுண்டைக்காய் இலங்கைக்கு சகல இராணுவ உதவிகளையும் செய்து, தமிழினம் பூண்டற்றுப் போகும் நிலையை உருவாக்கிட சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் செய்த இராணுவ உதவியைவிட, அதிகமாக இந்தியா அளித்துள்ளது என்பதை பல முறை இலங்கை ராஜபக்ச அரசே பெருமிதத்துடன் அறிவித்துள்ளதே!
ஐ. நா.வின் போர்க் குற்றங்கள் ஆதாரபூர்வமாக சனல் 4 போன்ற அமைப்புகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. இலங்கையின் அத்துமீறிய போர்க்குற்றக் கொடுமைகள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் இவர்களையெல்லாம் கூட "குண்டு போடப் படாத பகுதி'' என்று குறிப்பிடப்பட்ட பகுதிக்கு ஏமாற்றி வரச் செய்து, அங்கும் ஒரே மூச்சில் கொத்துக் குண்டுகளை வீசி, பல்லாயிரக்கணக்கில் தமிழர்களை அழித்தனரே!
12 வயது பாலகன் பாலச்சந்திரனைக் கூட மார்பில் 5 குண்டுகளால் துளைத்து சாகடித்த இதயமில்லா மனித மிருகங்களின் செயல் உட்பட படமாக வந்து உலகத்தாரின் உணர்ச்சியை எரிமலையாக்கிய பின்னரும், இந்திய அரசின் போக்கில் துளிகூட மாற்றம் காணாதது, வேதனைக்கும், வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.
திமுக அதனுடன் சேர்ந்த பாவத்திற்காக பழி சுமப்பதற்கு இனியும் தயாராக இல்லை; இவர்களை இனி திருத்தவே முடியாது என்று உணர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்தே வெளியேறிய நிலையில்கூட, மாணவர்கள் போராட்டம் தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் நிலையில்கூட, இந்திய அரசு தனது இரட்டை வேட அரசியலை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.
ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மேலும் வலுவானதாக்கி, இலங்கை அரசு தன் தவறுகளுக்காக வருந்தி, எஞ்சிய தமிழர் வாழ்வையாவது, இனி ஒரு பாதுகாப்புடன் வாழ வகை செய்வதை விடுத்து, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சென்ற முறை நீர்த்துப் போகச் செய்ததைப் போலவே, இம்முறையும் உள்ளடி வேலைகளைச் செய்து, இறுதியில் ஒப்புக்காக தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததாகக் காட்டிக் கொண்டு சரித்திரப் பழியைச் சுமந்து நிற்கிறது இந்தியா!
இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்?
சென்ற ஆண்டைவிட, இம்முறை கிடைத்த ஆதாரங்கள் ஏராளம்; இலங்கை அரசின் போக்கோ மேலும் கொடுமை என்ற நிலையில், இந்திய அரசு எல்.எல்.ஆர்.சி என்பதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க வேண்டிய இலங்கைக்கு இடித்துரைத்து, அதனை வழிக்குக் கொண்டு வர எதனைச் செய்தது? ‘நரிவலமும் போக வேண்டாம், இடமும் போக வேண்டாம். மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால்போதும்' என்ற பழமொழி போலக் கூட இல்லாது, அதனையும் தாண்டிடும் தன்மையை அல்லவா காட்டி விட்டது!
ஐ. நா. மனித உரிமை ஆணையத் தலைவி இந்தத் தீர்மானத்தில்,
1. சுதந்திரமான சர்வதேச நாடுகள் குழுவின் ஆய்வு நடவடிக்கை தேவை,
2. கால வரையறைப்படுத்தப்பட்ட - குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த விசாரணை நடவடிக்கைகள் முடிய வேண்டும்,
என்பது போன்ற எதுவும், இத்தீர்மானத்தில் இடம்பெறவில்லை. இதை திமுகவும் ‘டெசோ' அமைப்பும், இன்னும் பலரும் உணர்ந்தே, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனைந்தும், அதனை இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லாது ஒரு திருத்தத்தைக் கூட வைக்காதது மட்டுமல்ல, ஏற்கனவே வந்த தீர்மானமும் நீர்த்துப் போகும்படிச் செய்து தனது ‘‘மாபெரும் பழி எனும் பங்களிப்பைச்'' செய்துள்ளது! என்னே கொடுமை!!
25 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.
13 நாடுகள்தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 8 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. தீர்மானம் இலங்கைக்கெதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை விசாரிப்பவர்கள் யார்? யார் குற்றம் புரிந்தார்களோ அதே இலங்கை அரசு தான் விசாரணையை நடத்தும் அமைப்பை உருவாக்குமாம்!
என்னே விசித்திரம்!
தனது நாட்டில் நீதித்துறையில் அரசுக்கு மாறுபட்ட தீர்ப்புக்காக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டார நாயகாவை நீக்கிய ராஜபக்ச அரசு தான் விசாரித்து நீதி வழங்கப் போகிறதா?
தீர்மானம் 25 நாடுகள் ஆதரவோடு நிறைவேறியும் உருப்படியான எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
ஆபரேஷன் வெற்றி; நோயாளி செத்தார் என்பது போன்ற ஒரு வேதனையான நிலைதான்!
பாஜகவும், காங்கிரசும் ஒன்றே!
இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய மற்ற பாஜக போன்ற எதிர்க்கட்சிகளும்கூட, ஆரம்பத்தில் ஒப்புக்காக ஒப்பாரி வைத்ததே தவிர, உண்மையாக ஒத்துழைப்பு நல்கவில்லையே!
போர்க் குற்றவாளி என்று இலங்கை அரசு கூறப்படுவதை பாஜக ஏற்காது என்று எதிர்க்கட்சித் தலைவி திருமதி. சுஷ்மா சுவராஜ் கூறியது - இலங்கை ராஜபக்சே அரசை காங்கிரசும் சரி, பாஜகவும் சரி தூக்கிப் பிடிக்கிறது என்பதற்கான சான்றே! நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொணரக்கூட இக்கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லையே! இந்திய அரசின் வெளி உறவுக் கொள்கையில் பாஜக தலையிடாதாம். அப்படியானால் பாகிஸ்தான் பற்றி மட்டும் - கசாபைத் தூக்கிலிடுவது வரை பேசலாமா?
அகில இந்தியக் கட்சிகள் பலவற்றின் முகத்திரையைக் கிழித்துள்ளது ஈழத் தமிழர் பிரச்சினை. காங்கிரசுக்கு, அண்ணனாக, "உருட்டைக்கு நீளம்; புளிப்பில் அதற்கு அப்பன் என்பது போல அல்லவா உள்ளது!
கூண்டில் கண்டிப்பாய் ஏற்றப்படுவார்கள்!
தமிழ் நாட்டு மக்களும், வரலாறும் இவர்களை ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள்! ‘டெசோ' தன் பயணத்தைத் தொடரும். கடமையைத் தொய்வின்றி மேற்கொள்ளும். குற்றவாளிகள் கூண்டில் கண்டிப்பாய் ஏற்றப்படுவர்; தண்டனைக்கு ஆளாவார்கள் என்பது உறுதி! உறுதி!!
நமக்குரிய இலக்கு ராஜபக்சவே!
இந்த நேரத்தில் பொது எதிரி ராஜபக்ச என்பதை மறந்து விட்டோ, அல்லது மறைத்து விட்டோ, ‘டெசோ'வையும், அதன் தலைவரையும் முதல் அமைச்சர் வசைபாடுவது எதைக் காட்டுகிறது? ஈழப் பிரச்சினை அரசியல் ரீதியாக திசை திருப்பப்பட வேண்டும் என்ற குறுகிய நோக்கைத் தானே காட்டுகிறது!
முந்தைய அவரது நிலைப்பாடு பற்றிக் கூறி, அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்றே நினைக்கிறோம். நமக்குள்ள இலக்கு - இலங்கை ராஜபக்சவே தவிர, இங்குள்ளவர்கள் பற்றியதல்ல என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryDRWNZmu6.html
Geen opmerkingen:
Een reactie posten