[ விகடன் ]
இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி: ஒன்பது ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து அவசரமாக வெளியேற காரணம் என்ன?
பதில்: இது அவசர முடிவல்ல. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை குறித்து கடந்த ஆண்டு, ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க தி.மு.க. வலியுறுத்தியது.
இந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தினோம். டெசோ மாநாட்டுத் தீர்மானத்தை தளபதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி-க்கள் சென்று அனைத்து நாட்டுத் தூதுவர்களிடமும் கொடுத்து ஆதரவு திரட்டினோம்.
பிரச்சினையின் ஆழத்தையும் அவசியத்தையும் உணர்ச்சிப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்தோம். நான் பேசியபோது, 'மனிதத் தன்மையும் நட்பு உணர்வும் சிறிதும் இல்லாத இலங்கையின் நட்பு நமக்குத் தேவையா? அல்லது எங்களின் தென்பகுதி சகோதர்களின் உறவு முக்கியமா?’ என்று கேட்டேன்.
அமெரிக்காவின் தீர்மானத்தை மேலும் வலுவானதாக்க இரண்டு திருத்தங்கள் செய்ய கலைஞர் வலியுறுத்தினார். அதுகுறித்து, டெல்லியில் இருந்து வந்த மூன்று மத்திய அமைச்சர்கள், பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறுநாள் காலை எங்களுக்குக் கிடைத்த அமெரிக்காவின் 4-வது திருத்த வரைவு தீர்மானத்தில் இருந்த வாசகங்கள் அதிர்ச்சி அளித்தன. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் முதலில் இருந்த பல வாசகங்கள் நீக்கப்பட்டிருந்தன. தீர்மானத்தில் வற்புறுத்துகிறோம் (urges) என்பதற்குப் பதிலாக இலங்கையை ஊக்கப்படுத்துகிறோம் (encourages) என்று மாற்றப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டியும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 'பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் இலங்கையில் மீறப்பட்டதை விசாரிக்க வேண்டும்’ என்று ஏற்கெனவே இருந்த வாசகம் முழுக்கவே நீக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஓர் சர்வதேச அமைப்பு விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். இவை ஏற்கப்படவில்லை.
இப்படி, அமெரிக்காவின் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது யார்? நீர்த்துப் போகச் செய்யும் காரியத்தை இந்தியப் பிரதிநிதி தடுக்காதது ஏன்? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை மேலும் வலுவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்காதது ஏன்? இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் பரிகாரம் காண முன்வராத ஓர் அரசாக இந்திய அரசு இருப்பதை உணர்ந்து, அங்கே ஓர் அங்கமாக தொடர்வது சரியல்ல என்று வெளியேறினோம்.'
கேள்வி: தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை மத்திய அரசுக்கு எடுத்துச் சொன்னீர்களா?
பதில்: ஜெனிவாவில் அமெரிக்க அரசின் பிரதிநிதி, தங்கள் தீர்மானத்துக்கு மற்ற நாடுகளின் ஆதரவைக் கேட்கிறார். இலங்கையும் தன் தரப்புக்கு ஆதரவு சேர்க்கிறது. ஆனால், இந்திய அரசின் பிரதிநிதி ஜெனிவாவில் இப்படிப்பட்ட எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்தது அதிர்ச்சியளித்தது.
மத்திய அரசின் பாராமுகத்தைப் பார்த்து தமிழகத்தில் 20 நாட்களாக மாணவர் கிளர்ந்தெழுந்துள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் நிலையையும் தமிழகத்தின் கொந்தளிப்பையும் எடுத்துச்சொல்லி இந்திய அரசைப் பார்த்து ஜெனிவாவில் உங்கள் நிலைப்பாடு என்ன? இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் என்ன என்று கேட்டு மன்றாடினேன். ஆனால், அவர்களிடமிருந்து எந்தவிதமான அனுசரணையான பதிலும் இல்லை.
கேள்வி: இறுதிக்கட்டப் போரின் போது தி.மு.க. எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: 2009 போரின் போது, ஜெயலலிதா, 'போர் நடந்தால் பொதுமக்கள் சாவது சகஜமானதுதான்’ என்று வேதாந்தம் பேசினார். ஆனால், இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு ரட்சகர்போல வேடம் போடுகிறார். இதுதான் வேடிக்கை.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, கொட்டும் மழையில் தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினார் கலைஞர். அவர் உண்ணாவிரதம் இருந்தபோது, போர் நிறுத்தம் செய்துவிட்டதாக இலங்கை அரசு சொன்ன தகவலை இந்திய அரசு கூறியது. அதை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்தார்.
ஆனால் இலங்கை அரசு, இந்திய அரசுக்குத் தவறான தகவலைத் தந்து அதில் கிடைத்த கால அவகாசத்தில் கடுமையாகத் தாக்கியது. மத்திய அரசு சொன்னதை நாங்கள் நம்பினோம். இப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும் கடந்த காலப் போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும். அதற்குக் காரணமான ராஜபக்சவை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும். 90 வயதில், இலங்கைத் தமிழர் நிலைகுறித்துத் துடிக்கின்ற கலைஞரைக் கொச்சைப்படுத்துவது நியாய உணர்வுள்ளவர்கள் செய்கின்ற காரியம் அல்ல.என்றார் சிவா.
http://www.lankawin.com/show-RUmryDRXNZlo7.html
Geen opmerkingen:
Een reactie posten