தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 maart 2013

வெற்றிகரமாக நிறைவேறியதாக கருதப்படும் அமெரிக்கத் தீர்மானம் நடைமுறைக்கு வருமா?


கடந்த இரு மாதங்களாக எத்தனை பரபரப்பு உலக அரங்கில்! அதுவும் ஒரு குட்டி நாட்டின் சண்டித்தன ஆட்சியை பணியவைக்கும் முனைப்போடு, உலக வல்லரசுகளே தமது சொந்தப் பிரச்சனைகளை மறந்து நீதியை முன்னெடுக்கும் தேவ தூதர்களாக மாறியிருந்தார்கள்.
உலகப் போரரசான அமெரிக்காவே முந்திக்கொண்டு களத்தில் இறங்கியதால், இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு உலக அரங்கில் கடந்த முறையிலும் பார்க்க இம்முறை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும், கடந்தமுறை 24 நாடுகள் அதரித்தன (மொத்த நாடுகள்- 47) எதிர்த்த நாடுகள் 15. இம்முறை 25 நாடுகள் ஆதரித்தன (மொத்த நாடுகள் 46) எதிர்த்த நாடுகள் 13. இரண்டு முறையும் 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இரு வருடங்களாக இடம்பெற்ற வாக்கெடுப்புகள் இரண்டிலும் பெரிதளவு வித்தியாசம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த இரண்டு நாடுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஓன்று ஜப்பான், மற்றது மலேசியா.
இறுதிநேர முயற்சியாக இரண்டு யானைக் குட்டிகளை அன்பளிப்புச் செய்து ஜப்பானை வசப்படுத்தும் நோக்கில், மகிந்த பறந்து சென்றபோதும், அமெரிக்கா- சீனா- இலங்கை என்ற முக்கோணச் சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் ஜப்பான் நடுநிலை வகித்ததாக கருத இடமுண்டு. ஆனாலும், சீனவுக்கு இலங்கை அதிகம் இடம்கொடுத்த பாதிப்பு ஜப்பானின் பேச்சுக்களில் வெளிப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
கே.பி என்ற பத்மநாதனை இலங்கை அரசிடம் பிடித்துக் கொடுப்பதற்கு உதவியதாக கருதப்படும் மலேசியா, ஏன் நடுநிலை வகித்ததென்பது புரியாத ஒரு புதிர்தான் என்றாலும், தானாகவே சரணடைய முன்வந்த ஒருவரை காட்டிக் கொடுத்ததாக எவரும் கருத முடியாது என்ற ஒரு உண்மை நிலையை கருத்தில் கொண்டும்.
இலங்கையை பகைத்துக்கொள்ள முடியாத ஒரு சங்கட நிலை இருந்தாலும், தமது நாட்டில் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் எடுக்கவேண்டிய ஒரு நிலையில் மலேசியா இருப்பதாலுமே, நடுநிலை வகிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக கருத இடமுண்டு.
மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றதாக கருதப்பட்டபோதும், எவருடைய நலனுக்காக அது கொண்டு வரப்பட்டதோ, அவர்கள் (தமிழர்கள்) வென்றார்களா என்றால் இல்லை என்ற பதிலே சரியானது. வாக்கெடுப்பில் அமெரிக்கா வென்றதில் ஆச்சரியம் எதுவுமே இல்லை.
வெற்றியை உறுதிசெய்த பின்பே அது பிரேரணையை கொண்டுவந்தது. அதற்கு இந்தியாவின் ஆதரவையும் அது கோரியிருந்தது. மாணவர் எழுச்சியையும், தமிழ்நாட்டு அரசியல் எதிர்ப்பையும் சாட்டாக வைத்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, இலங்கை மேலுள்ள தமது எரிச்சலை தணித்துக் கொண்ட அதே சமயம், பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்த முக்கியமான விடயங்களுக்கு முட்டுக்கட்டை போட்டதன் மூலம் கடந்த முறையைப் போலவே இலங்கையை காப்பாற்றியிருக்கிறது.
கூட்டுச் சதியின் பாதிப்பே அதற்கு காரணம். “ குரைக்கிற நாய் கடியாது” என்ற பழமொழி அமெரிக்காவுக்கும் பொருந்தும் போலவே தெரிகிறது. ‘விட்டேனா பார்!’ என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே இலங்கையின் போர்க்குற்றம் சம்பந்தமாக கடித்துக் குதறுவதுபோல் குரைத்துவந்த அமெரிக்கா, படிப்படியாக தன் சுருதியை குறைத்து, கடைசியில் தானே தீர்மானத்தை வலுவில்லாமல் செய்துவிட்டது. வாலைக் கிளப்பியவர்கள் எதனாலோ அதை சுருட்டிக் கொண்டுவிட்டார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராத இத்தகைய தீர்மானத்துக்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டமும், அனாவசிய செலவுகளும், உயர்மட்டப் பேச்சுக்களும், நாட்டுக்கு நாடு ஓடித் திரிந்த சுற்றுப் பயணங்களும்! எத்தனை நாட்டு இராஜதந்திரிகள் கடந்த ஒரிரு மாதங்களில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும், ஜெனீவாவுக்குமாக ஓடித் திரிந்திருப்பார்கள்.
தாயக உறவுகளை சந்திக்கச் சென்ற சர்வதேச உயர் அதிகாரிகள்தான் எத்தனை பேர்? ஆமிக்காரனின் கண்காணிப்பையும் மீறி அந்த மக்கள் அழுது எழுப்பிய ஒப்பாரிகூட சர்வதேச நாட்டு அதிகாரிகளின் இதயத்தை எட்ட வில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.
உறவுகளை இழந்த மக்களின் மனதில் எதிர்கால நம்பிக்கைகளை வளர்க்கும்படியான பாரிய கவனயீர்ப்பையும், எதிர்பார்ப்பையும் உள்ளூர் தமிழ் மக்களிடம் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் உலாவச் செய்துவிட்டு, இலங்கை அரசை வெறுமனே எச்சரித்துவிட்டு, தங்கள் நடவடிக்கைகளை முடக்கிக் கொண்டது எந்தளவில் நியாயம் என்பது புரியதவே இல்லை. 
அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டது! சரி... அடுத்தது என்ன?’ என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இருப்பதாகத் தெரியவில்லை. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒவ்வொரு சரத்தின் முடிவிலும் காணப்படும் சொற்பதங்களை பார்த்தாலே புரிந்துவிடும் பிரேரணையின் வலு எவ்வளவென்று.
“நினைவுகூர்தல்!, நினைவுறுத்தல்!, வலியுறுத்தல்!, கவனத்தில் கொள்தல்!, கோருதல்!, குறித்துக்கொள்தல்!, ஊக்குவித்தல்!, கவலை தெரிவித்தல்!” இவற்றில் எந்த ஒரு சொல்லாவது இலங்கையை தண்டிக்கும் வகையில் அமைந்திருக்கின்றதா? அல்லது சர்வதேசம் தலையிட்டு நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதா?
வாக்கெடுப்பில் இலங்கை அரசு தோற்றாலும், தமக்கு எதிராக கொண்டு வரப்படவிருந்த பிரேரணையின் வீரியத்தை தணிப்பதில் வெற்றிபெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். மொத்தத்தில் பார்த்தால், மற்ற எல்லாத் தரப்பினரும் வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழர்கள்தான் தோற்றுப்போயுள்ளார்கள்.
கடந்தமுறை மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக என்ன நடந்ததோ அதேமாதிரியான ஒரு தீர்மான நிறைவேற்றம்தான் இந்த முறையும் இடம்பெற்றுள்ளது.
மனிதஉரிமைப் பிரச்சினை என்பது இலங்கை அரசுக்கு தலைவலியாக இருந்தாலும் கூட, அதை ஒரு திருகுவலியாக அது கருதவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்களது உள்ளூர் அரசியல் ஸ்திரத்தன்மையை மேலும் ஆழமாக நிலை நிறுத்துவதற்கு உதவியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. இனவாதிகளின் துணையோடு அதை அவர்கள் கச்சிதமாகவே செய்துள்ளார்கள்.
தமக்கு பாதிப்பு அதிகம் இல்லாத தீர்மானமாக இருந்தபோதும், அமெரிக்காவையே எதிர்க்கும் அளவுக்கு இலங்கை அரசு துணிந்ததற்குக் காரணம், மன்னிப்புச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும், ஐ.நா வின் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள்போல் வலிமையானவை அல்ல என்பது இலங்கை அரசுக்கு தெரியும். அதனால்தான கடந்தமுறை தீர்மானங்களைகூட அது கணக்கில் எடுக்கவில்லை. அதே நிலைதான் இம்முறை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கும் நடக்கப்போகிறது.
எந்த ஒரு நாடும் தமது உள்நாட்டு விடயத்தில் தலையிடக்கூடாது என்ற திட்டவட்டமான முடிவோடு இருக்கும் இலங்கை அரசுக்கு மேலும் ஒருவருடகால அவகாசம் கிடைத்துள்ளது. மீண்டும் அடுத்த வருடம் இதேமாதிரியான பரபரப்பு உலக அரங்குக்கு வரும்.
அந்த நேரம் மன்னிப்பு சபையில் நவநீதம்பிள்ளை இல்லாமல்போகலாம், இந்திய அரசு கலையும் நிலை, அல்லது மாறும் நிலை ஏற்படலாம். இந்திய அரசியலில் சக்தியுள்ள மனிதராகும் வாய்ப்பு கருணாநிதிக்கு இனிமேல் இல்லாமலே போகலாம்.
ஜெயலலிதா மத்தியில் வலிமை பெறலாம். உலக அரங்கில் மாற்றங்கள் எத்தனையோ நிகழலாம். இலங்கையின் தமிழ் தலைமைகள்கூட தடம் புரளலாம்! எது நடக்கின்றபோதும், தாயகத்தில் உள்ள தமிழரின் நிலை மேலும் மோசமாகும்படியான ஒரு இனவாதப்போக்கு நாடெங்கும் உருவாவதற்கான வாய்ப்பே அதிகம் என்று சொல்லலாம்.
க.ரவீந்திரநாதன். (செந்தாமரை)

http://www.lankawin.com/show-RUmryDRXNZloz.html

Geen opmerkingen:

Een reactie posten