தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 april 2014

நிரூபித்தால் 10 இலட்சம் - பொதுபலசேனாவுக்கு சவால்


புனித குர்ஆனில் தக்கியா என்ற பெயரில் அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள், அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனமேனும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொதுபல சேனா நிரூபித்தால் அவர்களுக்கு பத்து இலட்சம் ரூபா சன்மானம் வழங்கத் தயார் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

அண்மையில் கொம்பணித்தெரு பொலிஸ் நிலையம் முன்பாக பேசிய ஞானசேர தேரர் என்பவர் அல்குர்ஆன் பற்றி அடிப்படையற்ற விதத்தில் பேசியுள்ளார்.

இப்படியானதொரு வசனம் உள்ளதாக தெரிவிப்பது உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான பொய் என்பதை முஸ்லிம்களும் அறிவார்கள். ஆனால் சிங்கள மக்களை திசை திருப்புவதற்காகவே இவ்வாறு வேண்டுமென்றெ பொய் சொல்லப்பட்டுள்ளது.

இத்தகைய பொய் வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தி உலகளாவிய சமாதான சமயத்தை கொச்சைப்படுத்துவதை உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அதேபோல் இப்படியொரு நேரடி வசனம் குர்ஆனில் உள்ளதா என்பதை அல்குர்ஆனின் அந்த வசனத்தை பொதுபலசேனாவோ அல்லது வேறு எவருமோ காட்டினால் அவருக்கு பத்து இலட்சம் சன்மானம் வழங்க உலமா கட்சி தயாராக உள்ளது.

ஒரு மாத காலத்துள் இதனை நேரடியாக காட்ட முடியாத போது தமது பொய்யான வார்த்தைக்காக பொது பல சேனா பகிரங்க மன்னிப்புக்கேட்க வேண்டும். அதேவேளை இத் தேரரின் குர்ஆன் பற்றிய பொய் பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம் கொடுக்க ஆளுந்தரப்பு முஸ்லிம் உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

பொதுவாக இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாதவர்களையே முஸ்லிம் சமூகம் தமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளதால் இத்தகைய விடயங்களுக்கு இவர்களால் பதில் தர முடியாத கேவலத்தை சமூகம் அனுபவிக்க வேண்டியுள்ளது.

ஆனாலும் இது பற்றி தெளிவாக அவர்களால் பேச முடியாது என்றிருப்பின் உலமாக்களிடமாவது எழுதிப்பெற்று வாசிக்க முன்வரவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே இது விடயத்தை சகல இன மக்களுக்கும் தெளிவுபடுத்தியதாக முடியும்.

இதனை விடுத்து பொதுபல சேனாவை கண்டிப்பதாக பத்திரிகை அறிக்கைளை விடுவது என்பது அமைச்சரவையில் உள்ள கட்சிகளின் கோழைத்தனமானதும் ஏமாற்றுத்தன்மையுள்ளதுமான நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
20 Apr 2014http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398018756&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten