தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

வாருங்கள்… வந்து கரம் சேருங்கள்… தகர்த்தெறிவோம், சிங்களத்தின் தடுப்புச் சுவரை!

இன்னமும் ஒரு மாதம் மட்டுமே மீந்து இருக்கின்றது… எங்கள் தேசம் இரத்தக் குளியலில் அடையாளமற்றுப் போன நாளை வேதனையோடும், வெட்கத்தோடும், கோபத்தோடும், மீள் சபதத்தோடும் நினைவு கூர்வதற்கு…
ஐந்து வருடங்கள் நிறைவுக்கு வருகின்றது தமிழின அழிப்பின் நினைவு தினம்.
மாண்டவர்கள் மாண்டே போனவர்களாகவும், காணாமல் போனவர்கள் காணாமலே போனவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகவும் நிலைபெற்றிருக்க, வலி நிறைந்த அந்த நாள் புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு சடங்காகவே நிலைபெற்றுவிட்டது.
அதற்கு மேல், எதுவுமே நடக்கவில்லை. நடப்பதற்கான சாத்தியங்களும் தென்படவில்லை.
இரந்துண்டு வாழ்வது உயிர் துறப்பதற்குச் சமமானது என்று வாழ்ந்த எமது மக்கள் நடு வீதிகளில் விடப்பட்ட அவலமான நாட்களில், முகம் தெரியாத பல புலம்பெயர் தமிழர்கள் அவர்களுக்கு உறவாக மாறி உதவிகள் வழங்கினார்கள்.
அந்தப் பசி ஆறிய நாட்களும் கலைந்துவிடும் அளவிற்கு சிங்களக் கொடூரங்கள் கொலைவெறித் தாண்டவம் ஆடுகின்றது.
புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவிகள் பெறுவதும் அச்சுறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
முகம் தெரியாத உறவுகளிடம் இருந்து கிடைக்கும் உதவிகளும் பயங்கரவாதமாகப் பார்க்கப்படும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள தேசத்தின் புலம்பெயர் தமிழர்கள் மீதான அச்சுறுத்தல் அவர்கள் மீது பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போவதில்லை.
ஆனால், இது இலங்கைத் தீவில் வாழும் உறவுகளுடனான எமது உறவினை மிக மோசமான பாதிப்பிற்குள்ளாக்கப் போகின்றது.
புலம்பெயர் தமிழர்களால் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மட்டுமல்ல, தாயக மண்ணில் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தி, முதலீடுகளுக்கும் அச்சுறுத்தலை உருவாக்கப் போகின்றது.
ஒரு இராணுவச் சிப்பாய்க்கோ, ஒரு புலனாய்வாளனுக்கோ, ஒரு ஒட்டுக்குழுவினனுக்கோ பணம் தேவைப்பட்டால், அல்லது ஒருவரைப் பழி வாங்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டால், ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் கேள்விக்குட்படுத்தப்படலாம். பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு படுத்தப்படலாம்.
ஆயுத முனையில் தோற்கடிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும், அவர்களுக்கான நீதிக்காகப் போராடும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் சிங்கள ஆட்சியாளர்களால் எழுப்பப்பட்டுள்ளது.
அதனை முறியடிக்கும் ஜனநாயக வெளி இப்போது ஈழத் தமிழர்களிடம் கிடையாது.
ஆனால், சிங்கள ஆட்சியாளர்களது இந்த அச்சுறுத்தல் எந்த வகையிலும் புலம்பெயர் தமிழர்களைக் கட்டுப்படுத்தப் போவதில்லை.
அதற்கு, புலம்பெயர் தமிழர்களும் கட்டுப்படப் போவதில்லை. ஏனென்றால், இது ஈழத் தமிழினத்தின் இருப்புக்கான போராட்டம்.
புலம்பெயர் தமிழர்கள் போராடத் தவறினால், தொடர் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியுள்ள ஈழத் தமிழர்கள் மீது தற்போது சிங்கள அரசு மேற்கொள்ள எத்தனிக்கும் ‘பயங்கரவாத’ குறியீடு, எஞ்சியுள்ள தமிழர்களையும் புலம்பெயர நிர்ப்பந்திக்கப் போகின்றது.
இது, ஒட்டு மொத்த தமிழினத்தையும் நாடற்ற இனமாக மாற்றப் போகின்றது.
எதிரியின் அச்சுறுத்தல்களுக்கு அடங்கிப் போவோமாக இருந்தால், அந்த அச்சுறுத்தல்கள் எல்லைகளற்று விரிந்தே செல்லும்.
83 ஜுலை வரை சிங்கள இனவாதம் நடாத்திய தமிழர்களுக்கெதிரான இன வன்முறை, பின்னர் நிகழ்த்தப்பட முடியாததற்கான காரணம், விடுதலைப் புலிகளது எதிர்த் தாக்குதல் மட்டுமே.
2009 மே 18 இன் முடிவே, எதிரி மீண்டும் எல்லை மீறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
அதனை மாற்ற அமைக்கும் கடமையும், உரிமையும் புலம்பெயர் தமிழர்களிடமே உள்ளது. அதனைக் களமாடி நிறைவேற்றத் தவறினால், இலங்கைத் தீவு முற்று முழுதாக பௌத்த சிங்கள சிறிலங்காவாக மாறிவிடும்.
அதன் பின்னர், எங்களது அடுத்த சந்ததி, எங்கள் கிராமத்தை சிங்களத்தில் உச்சரித்தே தேட வேண்டியதாகிவிடும்.
கார்த்திகை மாதம் போலவே, மே மாதமும் கண் பனித்துக் கரம் கூப்பும் காலம்.
கல்லறைகளுமற்றுக் களத்தில் வீழ்ந்த ஆயிரம், ஆயிரம் மாவீரர்களின் கனவுகளை எங்கள் மனங்களில் விதைக்கும் காலம்.
விடியும் என்ற நம்பிக்கையுடன், விடுதலைப் புலிகளது தடம் பற்றி நடந்த எங்கள் உறவுகளின் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் காலம்.
மே 18 … எத்திசை வாழும் தமிழர்களும், எம் தேசத்தை மீட்கும் உறுதியுடன் கரம் கோர்க்கும் நாள்.
எங்கள் தேசியத் தலைவனின் ஆணையுடன், எங்கள் தேச விடுதலைப் போரில் உறுதியுடன், இறுதிவரை தம்மை அர்ப்பணித்த மாவீரர்களையும், அந்த மண்ணுக்கான மக்களையும் நாம் வாழும் நாடுகளில் ஒன்றாய் இணைந்து அஞ்சலிக்கும் நாள்….
இந்தப் புனிதப் போர் நாளில், புதிதாய்ப் பிறப்பெடுப்போம், வாருங்கள்… வந்து கரம் சேருங்கள்… தகர்த்தெறிவோம், சிங்களத்தின் தடுப்புச் சுவரை!
‘இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது’ – தேசியத் தலைவர் வே. பிரபாகரன்
- கரிகாலன்
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlv3.html

Geen opmerkingen:

Een reactie posten