விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்தவர்கள் என்று கூறப்பட்டு, நெடுங்கேணி காட்டுப் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட மூவரினதும் மரணத்துடன், வடக்கில் தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடிகள் சற்றுத் தளரும் அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த மார்ச் 5ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவர்களைத் தேடும் நடவடிக்கைகளுக்குப் பின்னர், வடக்கிலும், கிழக்கிலும், கொழும்பிலும் வைத்துக் கைது செய்யப்பட்ட 67 பேரில், 23 பேர் இவர்களின் மரணத்திற்குப் பின்னர், விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவே, இந்தக் கெடுபிடிகள் சற்றுத் தளர்வதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது.
மூவரையும் பிடிக்கும் நடவடிக்கையைக் காரணம் காட்டி கைது செய்யப்பட்ட 23 பேர் எந்தக் குற்றச்சாட்டுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளதானது, அவர்களுக்கும் புலிகளுக்கும் மீள உயிர் கொடுப்பதாகக் கூறப்பட்ட நடவடிக்கைகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனாலும், அவர்கள் பல வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டு, துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
இவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தால், அரசாங்கம் நிச்சயமாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நசுக்க முயன்றிருக்கும்.
இவர்கள் அத்தகைய தொடர்புகள் ஏதுமற்றவர்கள் என்பது மூவரினதும் மரணத்திற்குப் பின்னர் எவ்வாறு உறுதியானது என்பதும் தெரியவில்லை.
ஒருவேளை கைது செய்யப்பட்ட 67 பேரில் மீதமுள்ளவர்களும் படிப்படியாக விடுதலையாகும் வாய்ப்புகள் உள்ளன.
கோபி, அப்பன், தேவிகன் ஆகியோர் புலிகள் இயக்கத்திற்கு மீள உயிர் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் அரசாங்கத்திற்கு வந்துவிட்டது என்பதை இப்போது உணர முடிகிறது.
புலிகளை வேட்டையாடும் நடவடிக்கையை நீண்ட காலத்துக்கு இழுத்துச் செல்வது அரசாங்கத்துக்கு ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால், வரையறுக்கட்ட காலத்திற்குள் அந்த விவகாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
புலிகளை வேட்டையாடும் இந்த நடவடிக்கையே உண்மையானது தானா என்ற கேள்வி எல்லாத் தரப்புகளிடமும் உள்ளன.
ஏனென்றால், வடக்கு, கிழக்கில் உள்ள படையினரின் உன்னிப்பான கண்காணிப்பு வலயம், புலனாய்வு வலையமைப்பு என்பனவற்றின் மத்தியில் இன்னொரு போராத் துவக்கும் துணிச்சல் எவருக்கும் வந்திருக்க முடியாது.
அவ்வாறு துணிச்சல் கொண்ட எவருமே, ஒரு குறுகிய காலத்திற்குள் தம்மை அழிவுக்குட்படுத்திக் கொள்ளும் வழிகளைத் தேடியிருக்க மாட்டார்கள்.
புலிகளுக்கு மீள உயிர் கொடுக்க முயன்ற விவகாரத்தில், அரசாங்கத் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள் அனைத்துமே சந்தேகங்கள், கேள்விகள் நிறைந்ததாகவே இருந்துள்ளன.
அதனால் தான், இது அரசதரப்பின் ஒரு நாடகம் என்று தமிழர் தரப்புகளில் மட்டுமன்றி, தெற்கிலுள்ள சில ஊடகங்களும் நம்புகின்றன.
புலனாய்வு நடவடிக்கைகளில் கைதேர்ந்த அரசாங்கம் ஒன்று, தம்மீது ஏற்படும் நெருக்கடிகளைத் குறைப்பதற்கு இதுபோன்ற கதைகளை வைத்து நாடகங்களை அரங்கேற்றுவது வரலாற்றில் புதியதல்ல.
அரசாங்கத்தின் நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அல்லது அதன் கொள்கையை நியாயப்படுத்திக் கொள்வதற்கு அல்லது வேறேதும் இலக்கை அடைவதற்கு இத்தகைய உத்திகள் கையாளப்படுவதுண்டு.
இலங்கைப் புலனாய்வு அமைப்புகள், புலிகளின் வலையமைப்புகளைத் தோற்கடிக்க, கடந்த ஒரு தசாப்த காலத்தில் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளன.
அத்தகைய நாடகங்கள் உள்நாட்டில் மட்டும் நடக்கவில்லை, வெளிநாடுகளிலும் நடந்தேறியுள்ளன.
இலங்கைப் பாதுகாப்புத் தரப்பு வலுவான புலனாய்வு வலையமைப்பைக் கொண்டுள்ள ஒன்று என்பதை எவரும் மறுக்க முடியாது.
இலங்கையின் இந்தப் புலனாய்வுப் போருக்கு முன்னால் நின்று பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமில்லை.
ஜெனிவாவில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொண்ட சூழலில் தான், புலிகளுக்கு மீள உயிர் கொடுக்க முயற்சிக்கப்படுவதான தேடுதல்கள் தொடக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக அது தொடர்ந்து இடம்பெற்றது.
நெடுங்கேணிக் காட்டில் கடந்த 11ம் திகதி இந்த மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்த முயற்சிகளை முற்றாகவே முறியடித்து விட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 14ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை மலேசியாவில் நடந்த “ஆசிய பாதுகாப்புச் சேவைகள் 2014“ கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் பயங்கரவாதம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்.
எனவே இந்த மூவரினது மரணத்துடன் இந்த விவகாரம் அல்லது இந்த நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கருதவேண்டியுள்ளது.
அதன் அறிகுறியாகவே 23 பேர் விடுவிக்கப்பட்டதைக குறிப்பிடலாம்.
எவ்வாறாயினும் புலிகளை வேட்டையாடும் இந்த நடவடிக்கையையோ அல்லது நாடகத்தையோ நீடித்துச் செல்ல இடமளிக்க முடியாத கட்டாயம் ஒன்று அரசாங்கத்திற்கு இருந்தது.
ஏற்கனவே மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கம், தொடர்ச்சியாக கைதுகள், கெடுபிடிகள் என்று நீடித்துச் செல்வது இன்னும் அதிக குற்றச்சாட்டுகளுக்கே வழிவகுக்கும்.
மீண்டும் புலி என்று கூறிக்கொண்டு கெடுபிடிகளை மேற்கொள்வதால், போருக்குப் பின்னர் அமைதியை ஏற்படுத்தி விட்டோம் என்று உலகில் ஏற்படுத்திய இமேஜை அரசாங்கமே உடைத்துக் கொள்வதாகி விடும்.
போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டதான குற்றச்சாட்டுகள் வலுவடைந்துள்ள சூழலில், அதனை உருவாக்குவதற்காக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், இனங்களுக்கிடையில் இடைவெளியை அதிகரித்துக் கொள்ள இடமளிக்க முடியாது.
எப்படியும், நல்லிணக்க முனைப்புகளுக்கு ஆதரவளித்தாக வேண்டிய நிலை உள்ளதால், சுமுகமான சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு உள்ளது.
எனவே, இந்த விவகாரத்துக்கு எப்படியும் குறுகிய காலத்திற்குள் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இதை இப்படியே நீடித்துச் செல்லவிட்டால், வளர்ந்து வரும் இலங்கையின் சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட பொருளாதார வாய்ப்புகள் அனைத்துமே பாதிக்கப்படும்.
எனவே தான் திட்டமிட்ட இலக்கை அடைந்தவுடன், அரசாங்கம் இந்த விவகாரத்தை முடித்து வைக்க முடிவு செய்து விட்டது.
சுமார் 5 வாரங்கள் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலமாக அரசாங்கம் பல அனுகூலங்களைச் சாதித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, வடக்கில் படையினர் நிலைகொண்டிருப்பது அவசியம் என்று ஜெனிவாவில் வலியுறுத்தியது நியாயமானதே என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது என்று கூறியிருந்தார்.
அதாவது வடக்கில் இனிப் படைக்குறைப்புக்கு இடமில்லை என்பதை அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது.
முன்னுக்குப் பின் முரணான புள்ளிவிபரங்களைக் காட்டி வடக்கில் படைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறச் சிரமப்பட்டு வந்த அரசாங்கத்துக்கு, இனி அத்தகைய புள்ளிவிபரக் கணக்குகள் ஏதும் குறிப்பிட்ட காலத்துக்குத் தேவைப்படாது.
புலிகளுக்கு மீள உயிர் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டை வைத்து, புலம்பெயர் அமைப்புகள், நபர்கள் மீத தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைத் தேர்தலிலும் இந்த விவகாரத்தை அரசாங்கம்ட பயன்படுத்திக் கொண்டது.
ஆக, அரசாங்கம் தனது நிலைப்பாடடையோ கொள்கையையோ வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்த 5 வார கால நடவடிக்கை பெரிதும் கைகொடுத்துள்ளது.
இனிமேலும் அது நீடித்தால் எதிர்மறையான விளைவுகளைக் கொண்டு வரும் என்றுணர்ந்த நிலையில் தான், அரசாங்கம் அதிலிருந்து பின்வாங்கத் தொடங்கியுள்ளது.
இந்த 5 வார கால நடவடிக்கை வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.
அதுகூட, இன்னொரு போராட்டத்தை உருவாக்கும் துணிச்சலை எவருக்கும் உருவாக்கி விடாது.
ஆனால் போர் முடிந்த பின்னர் ஒரு சிறு மோதல் கூட நடக்கவில்லை என்று கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கம் உருவாக்கிய ஒரு இமேஜ் மட்டும் இப்போது தகர்ந்து போய் விட்டது.
அது அரசாங்கம் எதிர்கொள்ளும் முக்கியமான, பாதகமான விளைவு என்பதில் சந்தேகமில்லை.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten