தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

மகிந்த அரசின் புலிக்கதையும் பொது வேட்பாளர் பற்றிய பீதியும்....!

இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்ற எண்ணத்தில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள புதுப் புதுத் திட்டங்களை அண்மைக்காலமாக ராஜபக்ச குடும்பத்தினர் வகுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கும் மகிந்தவிற்கு தற்போது கலக்கம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.
“யானைக்கும் அடி சறுக்கும்” என்பார்கள். அதனை நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில், வாக்கு வங்கியில் ஏற்பட்ட வீழ்ச்சியை ராஜபக்சவினர் நன்கு உணர ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கமும் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அனைத்து ஊடகங்களிலும் விளம்பரங்களை வெளியிடும். ஆனால், இப்போதுள்ள அரசாங்கமானது, தேர்தலில் ஆளும் கட்சி பெற்ற வெற்றி குறித்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்தி வருகின்றது.
இந்த விளம்பரங்கள் மூலம் தாம் வெற்றி பெற்றதாகவும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களினால் வெளியிடப்படும் விமர்சனங்கள் அடிப்படையற்றது என வாக்காளர்களுக்கு நினைவூட்ட அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகியுள்ளது.
இதனால் குழப்பத்தில் உள்ள மகிந்த அரசாங்கம் எதிர்காலத்தில் ஏற்படும் கட்டாயத் தோல்வியை மாற்றியமைப்பதற்காக பல திட்டங்களை தீட்டி வருகின்றது.
அந்த வகையில், நாட்டின் தேர்தல் வரைபடத்தை மீண்டும் வரைய ஆரம்பித்துள்ள அரசாங்கம், இந்தத்திட்டத்தில் அடிப்படையில் புலிக்கதையினை வைத்து சிங்கள மக்களிடம் இழந்த ஆதரவை மீண்டும் பெறும் நோக்கில் செயற்பட்டு வருகிறது.
அதுவே விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அறிவிப்பதற்கான காரணம்.
மேலும், கடந்த 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் அழிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தடை செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, சும்மா இருக்க முடியாத இல்ஙகை அரசாங்கம் வெளிநாடுகளில் வசிக்கும் 424 தனிநபர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களினால் போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை தடுத்து நிறுத்தும் நோக்கமும், புலம்பெயர் தமிழர்களைப் பழிவாங்கும் நோக்கத்தோடும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இதனால் கடந்த தேர்தலில் ஜெனிவா என்ற கதை விட்ட அரசாங்கம் 2016ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து புலிக்கதை விட்டு, சர்வதேசத்தை ஏமாற்றி அப்பாவி இளைஞர் யுவதிகளைக் கைது செய்யும் வேட்டையில் இறங்கியுள்ளது.
2005ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் வடக்குக் கிழக்கைத் தவிர எனைய பிரதேசங்களில், தமக்கு கிடைக்கும் வாக்கு வீதம் மற்றும் ஆதரவு குறையாது. அத்துடன் தமது வெற்றி சதா காலத்திற்குமானது என ராஜபக்ச குடும்பத்தினர் எண்ணிக் கொண்டனர்.
இந்த நிலையில், ராஜபக்சவினரின் எதிர்காலத்திட்டம் நடந்து முடிந்த தேர்தலை அடிப்படையாக் கொண்டு அமைக்கப்படவிருந்தது. வடமேல், மத்திய மாகாணங்களில் பெற்ற வெற்றி, மேல் மற்றும் தென் மாகாணங்களில் கிடைத்தால் அந்த வெற்றியோடு ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மேலும் ஆறு வருடங்களுக்கு அதிகாரத்தை உறுதிப்படுத்த ராஜபக்சவினர் திட்டமிட்டிருந்தனர்.
அதன் பின்னர், தமக்கு மிகவும் சாதகமான அணியொன்றை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பெறுவதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. அத்துடன், இதனூடாக நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் பயணத்திற்கான பாதையை அமைப்பதும் ராஜபக்சவினரின் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.
ஆனால் ராஜபக்சவினரின் இந்தக் கனவு பலிக்கவில்லை. வாக்கு வீதம் 10 வீதமாக குறைந்தது. அத்துடன் 17 உறுப்பினர்களையும் இழந்தது.  அத்துடன் கொழும்பில் எதிர்க்கட்சியிடம் தோற்றமையானது ராஜபக்சவினரின் வேலைத்திட்டத்தை பெரும் சவாலுக்குட்படுத்தியது.
கொழும்பு முடிவுகளும் வடக்கு கிழக்கு முடிவுகளையும் கவனத்தில் கொண்டதால் ஜனாதிபதிக்கு பொது வேட்பாளர் பற்றிய பீதி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தேர்தல் முடிந்த பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரைக் அழைத்து கூட்டம் நடத்திய மகிந்த அரசாங்கத்தின் வெற்றியை மக்களிடம் எடுத்துரைக்குமாறு கூறியுள்ளார்.
அண்ணளவாக கணக்கிட்டுப் பார்த்தால்,
ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியானது 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த வாக்கு வங்கியானது ரணில் கட்சியிலிருந்து விலகினாலும் நிலைத்து நிற்கக் கூடியதாக உள்ளது. 
அடுத்து, சரத் பொன்சேகா மற்றும் ஜேவிபினர் பெற்ற வாக்குகளையும் சேர்த்தால், பொது வேட்பாளருக்கு 42 வீத வாக்குகள் கிடைக்கலாம். வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் தமிழ் பேசும் மக்களின் 9 வீத வாக்கு வங்கியை கணக்கிலெடுத்துக் கொண்டால், ராஜபக்சவிற்கு எதிராக 51 வீத வாக்குகள் கிடைக்கும்.
இதனால். மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரின் வெற்றியானது உறுதிப்படுத்தப்படுவதைக் காணலாம்.
அதேவளை, அரசாங்கத்திற்குள் உட்பூசல்கள் காரணமாக முறுமுறுத்துக் கொண்டிருக்கும் எதிரான அணி, ஜனாதிபதித் தேர்தலின் போது கட்டாயமாக அரசாங்கத்திலிருந்து வெளியெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சர்வதேச ரீதியல் சீர்கெட்டுப் போயுள்ள அரசாங்கத்திலும், மோசடி மிகுந்த ராஜபக்ச குடும்பம் தோல்விடையும் என்பதை நிச்சயம். இதேவேளை, ஜனநாயக் கட்சியின் தலைவர் பொன்சேகா, பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.
ஜேவிபியின் ஆதரவு மாத்திரமே கிடைக்காமல் போகலாம்.  எவ்வாறாயினும் வாக்களிக்காத பல்லயிரக்கணக்கான வாக்களர்கள் மாற்றத்தை விரும்பி இந்த 51 வீத வாக்கு வங்கியுடன் இணைந்தால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம்.
இவ்வாறான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டுதான் 2016ம் ஆண்டு வரை ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் எண்ணமில்லையென மகிந்த சிந்தித்துள்ளார் போலும்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlx0.html

Geen opmerkingen:

Een reactie posten