இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நாள்தோறும் ஏதோவொரு வகையில் தங்கக் கடத்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சினிமாவில் கூட கண்டிராத முறையில், சூட்சுமமான முறையில் இந்தக் கடத்தல்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன.
ஆனால், சில கடத்தல்காரர்கள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் கண்களில் மாட்டிக் கொள்கின்றனர். எனினும், சுங்கத்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளைச் சரி செய்து தங்கம் கடத்துவது பாரிய அளவில் நடைபெற்று வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.
வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகளை கூறி தங்கக் கடத்தலில் சிலர் இறக்கி விடுகின்றனர். இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பலிகடாவாக்கப்படுகின்றனர்.
விமானங்களிலும், சட்டவிரோதமாக படகில் பயணிப்போரும் இக்கடத்தலில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும், சர்வதேச விமான நிலையங்களினூடாகவே தங்கக் கடத்தல் இடம்பெறுகின்றது.
கொழும்பிலிருந்தே இந்தியாவிற்கு பெருந்தொகையான தங்கம் கடத்திச் செல்லப்படுவதாகவும், இக்கடத்தலில் ஈடுபடுபவர்களில் அதிகமானோர் இலங்கைப் பிரஜைகள் எனவும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி கடந்த வருடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை மூலம் சுங்கத் திணைக்களத்திற்கு வருமானம் அதிகரித்துள்ளதாகவும், பல மில்லியன் ரூபாய் தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஒருவழியில் வருமானத்தை அளிக்கும் இக்கடத்தலின் பின்னணி என்ன?
இலங்கையிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதற்கான காரணங்கள் என்ன? இலங்கைக்குள் எவ்வாறு பெருந்தொகைத் தங்கம் வந்தது என்ற கேள்விகள் எழும்புகின்றன.
வன்னிப் பெரு நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், அவர்கள் பெருந்தொகை தங்கத்தினையும், பல மில்லியன் பெறுமதியான டொலர்களையும் வைத்திருந்ததாக போருக்குப் பின்னர் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்த பின்னர், பல காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு உள்நாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களையும் அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
வன்னியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும், அவற்றைத் தாம் தேடி வருவதாகவும் பாதுகாப்பு படையினர் அறிவித்து வந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதங்களைத் தேடினரோ இல்லையோ, தங்கத்தினையும் பணத்தனையும் பெறுமதியான பொருட்களையுமே தேடி களத்தில் இறங்கியிருந்தனர்.
வன்னி மக்களில் பெரும்பாலானோர் தாங்கள் சேமித்து வைத்த தங்கத்தைக் கொண்டு செல்வதற்கு பயந்து, குழிதோண்டி புதைத்து விட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தத் தகவலும் படையினருக்கு தெரிந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
போரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் வவுனியா முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலே இராணுவத்தினர் தேடுதல் நடத்தி விடுதலைப் புலிகளின் தங்கங்களையும் வெளிநாட்டு நாணயங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்கலன்களில் ஏற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.
புலிகளுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டது அரச உயர் தரப்புக்கும் பாதுகாப்பு படையினரில் உயர் அதிகாரியினருக்கும் மட்டுமே தெரிந்திருந்ததாக உயர்மட்டத்தில் பேசப்பட்டது.
புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களை மாத்திரம் ஊடகங்களில் வெளியிட்ட அரசாங்கம், வன்னியில் மீட்கப்பட்ட பெறுமதியான தங்கம் போன்ற குறித்த பொருட்களின் தகவல்களை இதுவரையில் வெளியிடவில்லை.
புலிகளுக்குச் சொந்தமான கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தை, படையினர் மீட்டதாகவும், அதனைப் பகிர்ந்து கொள்வதிலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனால், பொன்சேகாவிற்கும் அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், அவரை 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடுமளவிற்கு கொண்டு சென்றதாகவும், அப்போது பேசப்பட்டது.
எனினும், சரத் பொன்சேகாவிற்கும் அரசாங்கத்திற்குமிடையில் ஏற்பட்ட முரண்பாட்டிற்கும் உண்மையான காரணமென்ன என்பதைப் பற்றிய தகவல்கள் இதுவரை இரு தரப்பினராலும் வெளியிடப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் தங்கத்தினை பாகம் பிரிக்கும் தொடர்பிலே முரண்பாடு ஏற்பட்டதாக அரச தரப்பின் உட்தரப்பு தகவல்கள் நாசூக்காக தகவல்களை வெளியிட்டன.
அதேபோல், சரத் பொன்சேகாவும் விடுதலைப் புலிகளிடமிருந்து சுமார் 200 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.
இவ்வாறான சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் மக்களுக்குச் சொந்தமாக தங்கங்களே இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
தங்கத்தைக் கைப்பற்றிய அதிகாரத் தரப்பு அதனைப் பகுதி பகுதியாக, பிரித்து விற்பனை செய்து வருவதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
அதிகாரத் தரப்பிடமிருந்து தங்கத்தைக் கொள்வனவு செய்த வர்த்தகர்கள், அதனை சிலரைப் பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு கடத்தச் செல்லப்படும் தங்கங்களே ஒரு சில பகுதி மாத்திரமே கைப்பற்றப்படுகிறது. எனினும் பிடிபடாமல், பெருந்தொகைத் தங்கம் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் அவரது குடும்பத்தினர் எவரும், கோடீஸ்வர குபேரர்களாக இருக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தேரர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் தற்போது, மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் செல்வந்தர்களான மாறியிருப்பதாக அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
அவ்வாறெனினில், புலிகளிடம் இருந்த கைப்பற்றப்பட்ட தங்கம் உட்பட பணத்தினை அரசுடமையாக்காமல் மகிந்தவும், அவரது குடும்பமும் தம்முடைமையாக்கி கொண்டனரோ என்ற சந்தேகம் எழும்புகின்றது.
வெளிநாடுகளில் பெறும் கடன் உதவிகளில் பெருந்தொகைப் பணத்தினை மகிந்த ராஜபக்சவினர் தரகுப் பணமாகப் பெற்று செல்வந்தர்களாக மாறியிருப்பதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
ஆனால், புலிகளின் தங்கம் மற்றும் பணம், அவர்களுக்குரிய வெளிநாட்டு சொத்துக்கள், கப்பல்கள், அரசுடைமையாக்கப் போவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்த போதிலும் அது பற்றி தற்போது எதுவும் பேசுவதில்லை.
அரசுடைமையாக்கப் போவதாகக் கூறிய சொத்துக்களை, ராஜபக்சவினர் தமக்குள் பகிர்ந்து கொண்டனரா?
விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கேபி என்ற குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட போது, அவரைப் பயன்படுத்தி புலிகளுக்கு சொந்தமாக பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்றப் போவதாகக் கூறினாலும், அதற்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை.
சிங்கள மக்கள் இது பற்றியெல்லாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. ஏனெனில், சிங்களவர்களுக்கு மறதி குணம் உடன் பிறந்த ஒன்றாகும். அப்படியும், ஞாபகம் வைத்து எவராவது இவை பற்றிய கேள்வி எழுப்பினால் அவர்களை அரசாங்கம் விட்டு வைக்கப் போவதில்லை.
அவர்களுக்கு புலி முத்திரை குத்திவிடும் இந்த அரசாங்கம். இந்த நிலையில், எது எப்படி நடந்தால் நமக்கு என்ன என்று சிங்கள மக்கள் தம் போக்கில் இருந்து விடுவர் ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
தமிழர்கள் இவையெல்லாம் கேட்க வேண்டுமென்று எண்ணினாலும், வாழவேண்டுமென்ற ஆசையால் மௌனமாகவே இருந்து விடுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இலங்கையைவிட இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக மற்றுமொரு காரணமும் கூறப்படுகிறது.
எது எவ்வாறிருப்பினும், இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தங்கம் பற்றிய இரகசியத்தை வெளியிடப் போவதில்லை என்பது திண்ணம்.
Geen opmerkingen:
Een reactie posten