தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை உசுப்பேற்றிவிட்டு உணர்வாக கதைப்பவர்கள் மட்டுமே. அவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லையென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..
இங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த 30வருடகால யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள். எங்களை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டு எம்மை கட்டியெழுப்ப முடியாது.
இழப்புகளை எதிர்கொண்ட மக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளது. அதற்காக நாங்கள் பேரம்பேசும் சக்தியாக மாறும் போது தான் எமது பலத்தினை அதிகரிக்க முடியும்.
நாங்கள் தொடர்ந்து வீணான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு தேவையற்றவர்கள் பின்னால் சென்றால் எமது எதிர்கால சந்ததியினரின் இருப்பு கேள்விக்குறியானதாகவே மாற்றமடையும்.
இன்று நாங்கள் எங்களது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதனால் இரண்டு வழிகளே உள்ளன. கல்வியை வளப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தினை அதிகரிக்க வேண்டும். இவை இரண்டிலும் நாங்கள் வளமிக்கவர்களாக மாறும்போது எம்மை யாராலும் அசைக்க முடியாத நிலையே ஏற்படும்.
இன்று எமது சகோதர இனமான முஸ்லிம் மக்களை எமது மக்கள் உதாரணமாக கொள்ள வேண்டும்.காலத்துக்கு காலம் வரும் அரசாங்கத்தினை ஆதரித்து அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்கின்றார்கள்.
இன்று மட்டக்களப்பில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகின்றனர். ஆனால் நாங்கள் இன்னும் பின்னோக்கியே சென்றுகொண்டிருக்கின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மக்களை உசுப்பேற்றி உணர்வாக கதைப்பார்கள். அது மட்டுமே செய்யமுடியும். அவர்களினால் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் இல்லை.
எதிர்காலத்தில் நாங்கள் சிந்திக்கும் மக்களாக மாறவேண்டும். எமது குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும். எமது பகுதி அனைத்து துறைகளிலும் வளமடைய வேண்டும். எமது வளத்தினைக் கொண்டு நாங்கள் அபிவிருத்தியடைய வேண்டும். இதற்கு எமக்கு பலம் தேவை அவற்றினை பெறுவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten