இலங்கை அரசியல் அத்தியாயத்தில் 30 வருடகாலமாக இடம்பெற்றிருந்த தமிழீழ விடுலைப் புலிகளின் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக சர்வதேசத்தின் மத்தியில் மார்தட்டிக் கொள்ளும் இலங்கை அரசாங்கம் மீண்டும் ஏனோ… தமிழ் மக்களை கணக்கெடுத்து கைது செய்கின்றது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களில் மிச்சமாக எஞ்சி வாழுகின்ற தமிழர்களை கைது செய்கின்றமையானது ஒட்டுமொத்த சிங்கள சமூதாயமானது தமிழர்களை பார்த்து அச்சம் கொள்கின்றதா? அல்லது எஞ்சியுள்ளவர்களையும் நசுக்கி விட முனைகின்றதா?
சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எடுத்துக் கூறாது, இன்றிருக்கும் ரணகள சூழலில் அத்துமீறி நடக்கும் இனவெறித் தாக்குதல்களின் வரலாற்றுப் பிண்ணியை அறிவது இலங்கைத் தமிழருக்கு மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரதும் கடமையாகும்.
எனினும் இவற்றுக்காக ஓரிரு நாட்களுக்கு மாத்திரமே அனுதாபப்படுகின்ற நிலையில் இராது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்திரமான ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் முகமாக அனைவரும் செயற்பட வேண்டும் என்பதே நசுக்கப்படுகின்ற ஈழத் தமிழர்களின் ஏகோபித்த குரலாகும்.
பல்வேறு காரணங்களுக்கான கைதுகளாக இவைகள் பதியப்பட்டாலும். கறுப்பு யூலைக் கலவரத்தின் போது எவ்வாறு தமிழர்கள் சுக்குநூறாக நசுக்கப்பட்டார்களோ, அதே போன்று 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது எவ்வாறு தமிழ் மக்கள் அனாதரவாக்கப்பட்டார்களோ, அவைகள் உலகறிந்த உண்மை., அதேபோலவே தற்போதும் 2009க்குப் பின்னரான இந்த காலப்பகுதியில் தமிழர்கள் தொடர்ச்சியாக நசுக்கப்படுகின்றமை இந்த நாடறிந்த உண்மையே இவற்றை வெளிக்கொணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
1987 இல் 12.7 வீதமாக காணப்பட்ட இலங்கைத் தமிழரின் மொத்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இலங்கைத் தமிழர் தொகை 2,270,924 ஆக காணப்பட்டது.
இது நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 11.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் குறிப்பிட்ட வருடங்களில் 20.35 வீதமாக இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டில் இடம்பெற்று வருகின்ற கொடூர ஆக்கிரமிப்புக்கள் காரணமாக ஏராளமான இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதாலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு 20,000 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகளவிலான மக்கள் இந்த இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருந்ததுடன். மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய இனப்படுகொலைகள் இவையெனவும் பல பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவை மாத்திரமல்ல, இலங்கை அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் காரணமாக 1.3 மில்லியன் தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டதுடன். தமிழ் முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் , கிழக்கிழங்கைத் தமிழர் வடக்கிலங்கைத் தமிழருக்கும் இடையே விரிசல்களை ஏற்படுத்தி கிராமிய மட்டங்களிலும் பல்வேறு இனமுரண்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முக்கியமான பகுதிகளை பல ஆண்டுகள் வரை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இதன் கீழ் அவர்கள் நீதிமன்ற அமைப்பு, காவல் படை, ஏழை மக்களுக்கு சமூக உதவி, சுகாதாரம், கல்வி வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தனர். அவை மாத்திரமல்ல வங்கிச் சேவை, வானொலி நிலையம் ( புலிகளின் குரல்) ஒரு தொலைக்காட்சி நிலையம் ஆகியவற்றையும் நடத்தினர்.
சாதியமைப்பும், மிக முக்கியமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் அதிகாரபூர்வமாகத் தடை செய்தனர்.
எனினும் இன்று இலங்கை அரசியல் சட்டத்தின் கீழ் சிங்கள பேரினவாதிகளுக்கே அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்படுகின்ற அதேவேளை, நாட்டில் தமிழ் பெண்கள் வியாபாரப் பெண்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
வரலாறுகளில் ஈழத்துத் தமிழ்ப் பெண்கள் தொடர்பில் குவேனி காலத்தில் இருந்து பல நற்சான்றுகள் தொகுக்கப்பட்டுள்ள போதும் தற்போது 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் சீரழிக்கப்படுகின்றமையும், வடக்கு கிழக்கு பெண்களின் நற்பெயருக்கு உலகளவில் களங்கம் ஏற்படுத்தப்படுகின்றமையும் அனைவரும் அறிந்ததே. எனினும் இந்த கொடூரங்களுக்காக குரல் கொடுப்பார் யாருமில்லை.
சீரழிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் குறித்து சமூதாயம் மேலும் பலவதந்திகளை பரப்பி விடுகின்றதே தவிர அவர்களுக்கு கையாறு கொடுத்து உதவி செய்வார் யாருமில்லை. அடிப்டையில் எந்தவொரு பெண்ணும் தமது தனிப்பட்ட இலாப நோக்கிற்காக தமது தாய்மையை விற்றுவிட முனைவதில்லை, என்ற உண்மையை கூட மனிதாபிமானமற்ற முறையில் மறைக்கின்ற இந்த சமூகத்தின் மத்தியில் அவர்களின் எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே விளங்குகின்றமை வேதனைக்குரியதே.
ஒவ்வொரு இனமும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தன. எனினும் அவற்றில் எத்தனை வீதம் வெற்றி கண்டன என்பதல்ல, அதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் பலர் இன்னமும் வரலாற்று பதிவுகளில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயங்கரவாதிகள் என பல உலக நாடுகள் அடையாளப்படுத்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றென்றால். இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கின்ற இனவெறித் தாக்குதல்களுக்கு ஏன் எந்தவொரு சர்வதேச நாடுகளோ அல்லது அமைப்புக்களோ வன்மையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன.
தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு இன அழிப்பு நிகழ்த்துவது இப்போது அன்றாட நிகழ்வாகிவிட்டது. தமிழர்களின் பூர்வீக பூமிகளில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றத்தால் தடம்தெரியாமல் சிதைக்கப்படுகின்றன.
1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது.
“ஒடுக்குமுறையை அகற்றி விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில் போராளிகள் செய்யும் அரசியல் வன்முறையை விட விஞ்சியது நவீன அரசு பயங்கரவாதமும் அது பயன்படுத்தும் ஆயுத வன்முறையும்” எனவே ஒடுக்கப்பட்ட சமூதாயத்தின் பால் குரல் கொடுத்த ஒரு இயக்கத்தின் அத்திவாரம் தகர்க்கப்பட்டுள்ள போதிலும்,
எஞ்சியுள்ளவர்களின் பாதுகாப்பும் அவர்களின் சமூக அந்தஸ்து, சுயகொளரவம், போன்றவைகளையும் இந்த அரசாங்கம் பறித்துக் கொண்டுள்ளமையை வேடிக்கை பார்க்கும் சர்வதேசத்தின் குரல்கள் ஜெனிவா மாநாடுகளிலும், தமது நாட்டின் தேர்தல் காலங்களின் போதுமே செல்லுபடியாகும் என்றால், அப்பாவி மக்கள் புதைக்கப்பட்ட பகுதிகள் கூட விலங்குகள் சரணாலயமாக மாற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
எனினும் எமது நாட்டு அரசியலில் தமிழர் என்ற எமது இனத்திற்கான தனித்துவ ஆதாரங்களை முற்றாக அழிப்பதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றமை வேதனைக்குரியதே.
2009 ஆம் ஆண்டு தமது உயிர்களை காவு கொண்ட தமிழர்களை விடவும் தற்போது எஞ்சியுள்ளவர்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
விளம்பரம் போன்றதான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு குடும்பத்தில் எவராகிலும் ஒருவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தால் அல்லது அவர்களுக்கு சார்பாக செயற்பட்டிருந்தால். அவர்களின் உடன்பிறப்புக்களை, பெற்றோர்களை, பிள்ளைகளைக் ஏன் புலம்பெயர் சமூகத்தில் இருந்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களின் உறவினர்களைக் கூட கைதுசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்கவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை தாம் முன்னெடுத்து வருவதாக வெளிஉலகிற்கு உரத்துக் கூறினாலும். மீண்டும் அந்தப் பகுதிகளில் சிங்கள குடியிருப்புக்களை அரசாங்கம் அமைத்துவருகின்றது.
மரத்தால் விழுந்தவனை மாடு முட்டின கதையாக இருப்பிடம், வாழ்வாதாரப் பிரச்சினைகள், உரிய பாதுகாப்பின்மை போன்ற பல சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் வாழுகின்ற நிலையில் திடீரென இவ்வாறனதொரு கணக்கெடுப்புக்களும் , கைதுகளும் மேற்கொள்ளப்படுகின்றமையானது நாட்டில் எந்தளவுக்கு ஜனநாயகம் பேணப்படுகின்றது என்பதனை தெளிவாக விளக்குகின்றது.
இவற்றிலும் வசதி படைத்தவர்கள் தமது பக்க நியாயத்தை சட்ட வல்லுனர்கள் மூலம் முன்வைத்தாலும். ஏழை எளியவர்களின் கைதுகள் குறித்து எந்தவொரு அமைப்பும் குரல் கொடுக்கவில்லை என்பது ஈடுசெய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டுள்ளமைக்கு சான்று பகர்கின்றது.
படுகொலை செய்யப்பட்ட மக்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட மன்னாரில் குறித்த பகுதி மனிதப்புதைகுழி என்ற உண்மைத் தகவல் வெளிவருவதற்கு முன்னமே அவற்றை விலங்குகள் சரணாலயம் என அடையாளம் காட்டுகின்ற இந்த அரசாங்கம் இவ்வாறான கைதுகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான காரணத்தை முன்வைக்கின்றது.
இலங்கையில் வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழர்களின் உறவினர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள போதிலும் இன்னும் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் தான் தொழில் புரிந்து வருகின்றனர்.
எனவே இவர்களின் விசாக்காலம் முடிவடைய கட்டாயம் நாட்டிற்கு வரவேண்டியுள்ளது. இனியாகிலும் நாட்டில் பயங்கரவாதம் முடிவுற்றது, போராட்டங்கள், பயங்கள் இன்றி வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் தமது காலங்களை நகர்த்திச் செல்கின்ற தமிழ் இளம் சமூதாயத்தின் எதிர்காலம் தான் என்ன?
இலங்கை அரசியலில் கடந்த 30 வருட கால அத்தியாயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்பெற்றிருந்தாலும் அந்த இயக்கத்தில் இருந்த அனைவரும் தமது சுயவிருப்புடன் இவற்றில் இணையவில்லை என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஒடுக்கப்படுகின்ற ஒரு சமூதாயத்தின் குராலாக எதிரொலித்தமையினால். அரசாங்கத்தினாலும், சிங்கள பேரின சக்திகளினாலும் நசுக்கப்பட்ட அப்போதைய இளம் தலைமுறையினரே இந்த அமைப்புக்களின் பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள் என்றால் அதனை எவராலும் மறுக்க முடியாது.
வடக்கில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் தனி மனிதனால் முன்னெடுக்கப்பட்ட இந்த விடுதலைப் போராட்டம் சர்வதேச மட்டத்தில் பாரியதொரு சக்தியாக உருமாற முற்றிலும் வழிவகுத்தமை இலங்கை அரசின் பேரினவாதிகள் என்றால் அது மிகையில்லை.
அரச படையினர் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாது பலவிதமான பாலியல் துஸ்பிரயோகங்களை முன்னெடுத்தமையே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பல இளம் யுவதிகளும், வாலிபர்களும் இணைய காரணமாக இருந்தது.
உறவுகளின் பன்புகளும் பாசங்களும் எதுவென்று புரியாத சிங்கள இராணுவம் ஒவ்வொரு உறவுகளுக்கும் முன்பாகவே மற்றுமொரு உறவை மிகக் கொடூரமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கின என்றால் ,எம்மில் இன்னும் எத்தனை பேர் இந்த கொடூர செயல்களில் அனுபவப்பட்டவர்களாகவும் ஆதங்கத்தின் மத்தியில் இதனை எண்ணுகின்றோம்.?
உயிரிழந்த பிண்டம் கூட தமிழனாக இருந்து விட்டால் வேட்டையாடும் இந்த சிங்கள இராணுவத்தினரின் மத்தியில் பிள்ளைத்தாச்சி என்ன? பிள்ளை என்ன? அனைவரும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொம்மைகளே….
பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கங்கள் இன்னும் ஓய்வெடுக்க முன்னர் இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த பலமாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வழிசமைக்கின்றன என்றே கூற வேண்டும்.
இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழ் சமூதாயத்தில் பலர் புனர்வாழ்வு பெற்று தகுந்த வாழ்க்கையை ஏற்படுத்தித் கொடுத்துள்ளதாக விடுதலை செய்யப்பட்டவர்களும், இராணுவத்தில் இணைந்து பின்னர் வெளியேறிய இளம் யுவதிகளையும் கூட இந்த அரசாங்கம் விட்டுவைக்கவில்லை.
எவை எவ்வாறிருப்பினும் புலம் பெயர் சமூகமும் வேலை வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளில் சென்று தங்கியுள்ளோரும் மீண்டும் எமது தாய் நாட்டிற்கு வரவேண்டுமானால் www.documents.gov.lk இந்தஇணையத்தள முகவரியை பார்வையிடவும்.
காரணம் இதில் உங்கள் பெயர்ப்பட்டியல் காணப்பட்டால் நாட்டிற்கு வருகின்றமை குறித்து ஒரு தடவைக்கு ஆயிரம் தடவைகள் பரீசிலனை செய்யுங்கள் உங்கள் எதிர்காலம் இனி உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது.
பலிக்காக வளர்க்கப்பட்ட ஆடுகள் நாங்கள் பலியாகின்றோம். எனினும் தமிழ் உறவுகள் உங்களையும் பலி கொடுக்க எம் இதயங்களில் இன்னும் ஈரம் வற்றிப்போகவில்லை. அயல் நாடுகளில் நாடுகளற்ற நாதிகளாக நீங்கள் வாழுகின்ற போதிலும் மறுநாள் விடியலை காண்கின்றீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் ஒவ்வொரு கனங்களையும் கழிக்கின்றோம்.
ஈழத்தமிழர்கள் என்பவர்கள் இரண்டு நூற்றாண்டுகள் காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் குடியேறியவர்கள் அல்ல இந்தத் தீவின் பூர்வ குடியினர் என்ற உண்மையும் எமது சந்தியினருக்குப் புலனாக வேண்டியது காலத்தின் தேவையே.
எப்போது கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வருகின்றதோ மறுநாள் பொழுது விடிவதற்கு முன்னமே காணாமல்போய்விட்டார். என்ற சேதியும் பல இணையத்தளங்களில் உங்களால் வாசிக்க முடியும்.
பின்னர் நாம் புதைக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளும் விலங்குகள் சரணாலயமாக எமது சந்ததியினர் அறிவார்கள். எனவே அவ்வாறில்லாது இலங்கையில் நசுக்கப்பட்டு காணாமல் போன உங்கள் உறவுகள் பற்றி ஒன்றேனும் உங்கள் பிள்ளைகளுக்கு கூறுங்கள்.
வருங்கால சமுதாயங்களின் இதயங்களிலாவது நாம் உயிருடன் வாழுகின்றோம்.
ஜெ.சுவாதி
hennaemily87@gmail.com
hennaemily87@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyEQULYns5.html
Geen opmerkingen:
Een reactie posten