தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

பிரபாகரன், எப்படி கொல்லப்பட்டார்...! -ஒரு புலனாய்வு ரிப்போர்ட்....!



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரை 

புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பொட்டம்மானே படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கின்றார் என அரசியல் அவதானிகளில் ஒரு சாரார் சந்தேகிக்கின்றனர்.
 
 
அரசியல் அவதானிகளில் ஒருவரான சித்திரெஜினா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்ற கட்டுரை, இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டு இருக்கின்ற ஊகங்கள் இது போன்ற சந்தேகங்களை நியாயப்படுத்துவனவாகவும், வலுப்படுத்துவனவாகவும் உள்ளன.
 
 
கட்டுரையின் முதலாம் பாகத்தை உங்கள் வாசிப்புக்கு தருகின்றோம்.
 
 
“ சுமார் 38 வருடங்களுக்கு முன்.. பங்காளதேஷின் விடுதலை தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் அவரது 11 வயது பாலகன் ஷேக் றூசல் கொல்லப்பட்டது போலவே.. சுமார் 4 வருடங்களுக்கு முன்.. தமிழீழ விடுதலை தலைவர் பிரபாகரனுடன் அவரது 12 வயது பாலகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டிருக்கிறான்.. அன்றும் இன்றும் இந்த‌ படுகொலைகள் நடந்த போது ஒன்றுமறியாத இந்த பச்சைப் பாலகர்களும் ஈவிரமிக்கமில்லாமல் கொல்லப்பட்டது மனித நேயத்தின் அடிப்படையில் ஒரு பஞ்சமா பாதகச் செயல் என்பதை எவராலும் மறுக்க முடியாது..
 
 
ஆனால் தன் எதிரியை அழிக்கும்போது.. எதிர்காலத்தில் தனக்கு இந்த குடும்பத்தில் எஞ்சியிருக்கும் யாராவது ஒருவரால் ஆபத்து நேரிடும் என்பதற்காக அவர்களையும் அந்த‌ எதிரியுடன் சேர்ந்தே அழிப்பது.. இன்று நேற்றல்ல அன்றைய மன்னர் காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கொடூரமான‌ வழிமுறையாகும்.. தங்கள் எதிர்கால பாதுகாப்புக்காக‌ இப்படிப்பட்ட மனித நேயமற்ற படுகொலைகளை அன்றைய மன்னர்கள் தாராளமாகவே அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக‌ இலங்கை இந்திய மன்னர் வரலாறுகளில் பல சம்பவங்கள் பதியப்பட்டிருக்கின்றன..
 
 
பிரபாகரனின் படுகொலை விடயத்தில்.. அவரை கொலை செய்தது இலங்கை இராணுவம்தான் என்பதற்கு கண்கண்ட சாட்சிகளோ அல்லது வலுவான ஆதாரங்களோ ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது போல.. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனையும் இலங்கை இராணுவம்தான் கொலை செய்தது என்பதற்கும் கண்கண்ட சாட்சிகளோ அல்லது வலுவான ஆதாரங்களோ எதுவும் இல்லை..
 
 
ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை இலங்கை இராணுவம்தான் கொலை செய்தது என்பதை இலகுவில் நிரூபித்துவிட‌ முடியாது.. அதை நிரூபிப்பதற்கு மேலும் பல வலுவான‌ ஆதாரங்கள் தேவை.. சில வேளைகளில் இந்த படுகொலைகளை பிரபாகரனுடன் கூட இருந்த‌ புலிகள்கூட செய்திருக்கக் கூடிய வாய்ப்புகளும் இருந்திருக்கின்றன‌..
 
 
இப்படிப் பார்க்கும்போது அந்த படுகொலைகளை செய்தது யார்? புலிகளா அல்லது இலங்கை இராணுவமா? என்ற சர்ச்சை உருவாகி விடுகிறது.. இவைகள் பக்கச் சார்பற்று மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும்…
 
 
பிரபாகரன் உயிர் வாழ்ந்த காலத்தில்.. அவருக்கு இலங்கை இராணுவம் மட்டுமே எதிரியாக இருந்திருக்க‌வில்லை.. அவருக்கு அவர் தலைமை தாங்கியிருந்த விடுதலை புலிகள் இயக்கத்திற்குள்ளும் அவரை ஒழித்துக் கட்டி.. அந்த பதவியை பறித்துக் கொள்ள தாராளமாக‌ எதிரிகள் பலர் இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன‌.. ஆகவே அப்படிப்பட்ட‌ புலிகளுக்குள் இயங்கிக் கொண்டிருந்த இரகசிய புலிக் குழு ஒன்றே போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனையும் பாலச்சந்திரனையும் படுகொலைகளை செய்திருக்கக் கூடிய வாய்ப்புகளும் இருந்திருக்கின்றன….
 
 
பிரபாகரன் புலிகளால் கோரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு அவர் கொலை செய்யப்பட்டிருக்கும் பாணியை வைத்து ஊகிக்க முடியும்.. போரில் கொல்லப்பட்ட மற்றைய புலி உறுப்பினர்கள்போல்.. அவர் யுத்தத்தில் ஈடுபட்டு குண்டடி பட்டு இறந்திருக்கக் கூடிய எந்த தடயங்களும் அவரது இறந்த உடலில் காணப்படவில்லை..
 
 
 
ஆனால் தலையில் மட்டும் கோடரி ஒன்றினால் ஆழமாக கொத்தப்பட்ட ஒரு பெருங்காயம் மட்டுமே காணப்பட்டது.. அப்படியானால் அவரை யாரோ உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து.. இப்படி அவரது தலையில் கோடரி ஒன்றினால் கொடூரமாக‌ கொத்தி கொலை செய்திருக்கலாம் என்று கருத‌ இடமிருக்கிறது.. ..
 
 
இந்த கூற்றை நீரூபிக்க‌.. ஒரு பெண் போராளியாக புலிகளுடன் வாழ்ந்த ஒரு முன்நாள் பெண்புலி எழுதியிருந்த ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு சம்பவத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.. அதற்கு முன் இந்த புத்தகத்தை எழுதியவரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அவரைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டியது இங்கு அவசியமாக இருக்கிறது…
 
 
1987 ம் ஆண்டு தனது 17 வயதில் .. இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் காலூன்றி இருந்த காலப் பகுதியில்.. விடுதலை புலிகளின் பிரச்சாரத்தில் மயங்கி.. தனது குடும்பத்தை.. கான்வென்ட் படிப்பை துறந்து.. புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டார் அந்த இளம் பெண்.. அவர்களுடன் பல வருடங்கள் பெண் போராளியாக கடமையாற்றிய காலப் பகுதியில்.. அவர்கள் கொடுமைகள் பலவற்றை நேரில் கண்டு.. அவர்களது வன்முறை தமிழீழத்திற்கு வழிகாட்டாது என்பதை உணர்ந்து.. அதிலிருந்து விலகி இந்தியாவிற்கு சென்று.. பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலேயா சென்று.. அங்கு சட்டப்படிப்பு படித்து தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார்..
 
 
திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான இவர்.. புலிகளுடன் வாழ்ந்த காலங்களில் தான் நேரில் கண்ட பல காட்சிகளை.. அனுபவங்களை.. “நிரோமி டி சொய்சா” என்ற புனைபெயரில் ஒரு புத்தகமாக‌ வெளியிட்டிருக்கிறார்.. பெண் புலிகள் (Tamil Tigress) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த புத்தகத்தில் இடம்பெறும் ஒரு சம்பவம்தான் பிரபாகரனை புலிகள் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்க காரணமாயிருக்கிறது..
 
 
இவர் புலிகளை மட்டுமே விமர்சித்தவர் அல்ல.. இவர் இலங்கை அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்தவர்.. குறிப்பாக‌ வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கள் இழைத்த குற்றங்களையும் தைரியமாக சுட்டிக் காட்டியவர்…. இவரது இந்த புனை பெயரான “நிரோமி டி சொய்சா” கூட.. ஒரு தமிழ் தாய்க்கும் சிங்கள தந்தைக்கும் பிறந்தவரான‌ ஒரு முன்னணி ஊடகவியாலாளரும் மனித உரிமைசெயற்பாட்டாளரும்..
 
 
மகன்களை இழந்த தாயார் என்ற சங்கத்தை ஆரம்பித்து மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவரான ரிசார்ட் டி சொய்சா என்ற ஊடகவியலாளர் 18 பெப்ரவர் 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசாவின் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்து.. அவரது ஞாபகார்த்தமாகவே தனது பெயரையும் “நிரோமி டி சொய்சா” என்று வைத்துக் கொண்டார்..
 
 
ஆகவே இவர் எழுதியிருக்கும் பெண்புலிகள் என்ற அந்த ஆங்கில நாவல் பக்க சார்பற்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது…. எனவே இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் நம்பகத்தன்மை கொண்டவை.. இந்த புத்தகத்தில் இவர் குறிப்பிட்டிருக்கும் அந்த சர்ச்சைக்குரிய‌ சம்பவம் இதுதான்..
 
 
“ஒருநாள் பிற்பகல்.. யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நானும் எனது புலி நண்பர்களும்.. இருந்த சமயத்தில்..”நான் அதைச் செய்யவில்லை.. நான் அதைச் செய்யவில்லை” என்று அலறிக் கொண்டிருந்த‌ வெள்ளை எனப்படும் இளம் புலி உறுப்பினர் ஒருவரை.. சில ஆண் தோழர்கள் உதைத்து வதைத்து சித்திரவதை செய்து கொண்டிருந்ததைக் கண்டோம்..
 
 
வெள்ளையை இந்திய இராணுவத்தின் ஒற்றனாக குற்றம் சுமத்தி.. தோள்வரை மண்ணில் புதைத்து சைனைட்டை விழுங்கும்படி சில சிரேஸ்ட புலி உறுப்பினர்கள் பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்…. அது அவனை என்ன செய்யும் என்று பார்ப்பதற்காக.. நானும் சில பெண் புலி உறுப்பினர்களும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தோம்..
 
 
 
கடைசியாக “கொரில்லா ஜஸ்டின்” என்னும் ஒரு புலி போராளி.. வெள்ளையின் தலையில் கோடரியால் ஒரு போடுபோட்டார்.. அவ்வளவுதான் அங்கே கூடி நின்ற மற்றைய புலி போராளிகள் எல்லோரும் கொல்லென்று சிரிப்பொலி எழுப்பினார்கள்.. அவர்களைப் பொறுத்தளவில் வெள்ளையை கொல்வதற்கும் கரப்பான் பூச்சியைக் கொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது என்று அந்த‌ கொலையாளிகளைப் பற்றி நிரோமி குறிப்பிட்டிருக்கிறார்….
 
 
சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சித்திரவதை கொலையில் இருந்து‍.. புலிகள் அமைப்புக்குள் இப்படிப்பட்ட ஒரு கொலை வழிமுறை இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது.. ஆகவே போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் பலமிழந்து போயிருந்த நிலையில்.. புலிகளின் தலைமைப் பதவி மேல் குறி வைத்திருந்த ஒரு சிரேஸ்ட உறுப்பினர் குழுவொன்று.. அவரை இப்படி கோடரியால் தலையில் கொத்தி கொலை செய்யும் தங்கள் பழைய பழி வாங்கும் பாணியை கையாண்டு அவரின் கதையை முடித்திருக்கலாம்…
 
 
பிரபாகரன் இறந்த சமயத்தில்.. அவரது உடல் பல வடிவங்களில் புகைப் படங்களாக வெளி வந்திருந்தது.. அதில் எது முதலில் எடுக்கப்பட்டது என்பது எவருக்குமே ஊகிக்க முடியாதபடி இருக்கிறது.. இதில் ஒருபடத்தில் உடல் முழுவதும் சாம்பல் நிற மண் பூசியபடி வெறும் கோவணத்துடன் காட்சியளிக்கும் படமும் வெளியாகியிருந்தது.. சிலவேளைகளில் இதுவே பிரபாகரனின் உடலை முதன் முதலில் எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கலாம்..
 
 
ஏனெனில் நிரோமி டி சொய்சா விபரித்த சம்பவத்தில்.. வெள்ளை என்ற‌ அந்த வாலிபனை முதலில் மண்ணில் புதைத்து.. சயனைட்டை விழுங்க வைத்து இறுதியில்தான் தலையில் கோடரியால் கொத்தினார்கள் என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும்போது.. பிரபாகரனையும் அன்று வெள்ளையை கொலை செய்த அதே பாணியில் அவரை ஆடையில்லாமல் வெறும் கோவணத்துடன் மண்ணில் புதைத்து.. சயனைட்டை விழுங்க வைத்து.. இறுதியில் கோடரியால் தலையில் கொத்தி கொலை செய்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது…
 
 
மேலும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் வன்னியில் சதா குண்டுகள் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தால்.. அந்த பிரதேசம் முழுவதும் நெருப்பும்.. புகையும்.. கரியுமாகவே காட்சியளித்தது.. அப்படிப்பட்ட ஒரு மண்ணில் பிரபாகரனை புதைத்து இப்படி கொலை செய்திருந்தால்.. அவர் உடலில் நிட்சயமாக இப்படிப்பட்ட‌ கருமை பூத்த சேற்று மணல் ஒட்டிக் கொள்ளும் சாத்தியம் இருந்திருக்கிறது….
 
 
மேலும் பிரபாகரனை தாங்கள்தான் கொலை செய்தோம் என்று இலங்கை இராணுவம் உறுதி செய்ததில்லை.. சில போராளிகளுடன் அவர் தப்பொயோடும்போது குண்டொன்று வெடித்துச் சிதறியதால் மரணமடைந்தார் என்றும்.. பின்னர் அவரது உடல் நந்திக் கடல் ஓரமாக கண்டெடுக்கப்பட்டது என்றும்தான் கூறப்பட்டது..
 
 
மேலும் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதை உலகிற்கும் உறுதிப்படுத்தி அடையாளம் காட்டும் முகமாக.. முகச்சவரம்கூட செய்யப்படாத நிலையில் இருந்த பிரபாகரன் உடலுக்கு முகச் சவரம் செய்து புலிகளின் சீருடை தரித்து புகைப்படமும்.. வீடியோ காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கலாம்.. மேலும் வெள்ளை என்ற வாலிபனுக்கு முதலில் சயனட் கொடுத்ததுபோல் பிரபாகரனுக்கும் சயனைட் கொடுக்கப்பட்டிருக்கிறதா.. என்பதை உறுதிப்படுத்த அவர் உடலில் எந்த விதமான‌ பிரேத பரிசோதனைகளும்நடத்தப்படவில்லை.. சில வேளைகளில் அது மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டிருக்கலாம்..
 
 
மேலும் அந்த உடல் நந்திக் கடலில் கிடந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறுமிடத்தில்.. பிரபாகரன் அணிந்திருந்த அந்த யூனிபோர்மில் தண்ணீரில் ஊறிய எந்த அடையாளமும் காணப்படவில்லை‍‍.. அது கசங்காமல் மிகவும் நேர்த்தியாக இருந்தது இங்கே குறிப்பிடத் தக்கது..
 
 
பிரபாகரன் புலிகளால் கொல்லப்பட்ட விபரம் சிலவேளை இலங்கை அரசாங்கம் அறிந்திருந்தாலும் அதை வெளியில் சொல்வதற்கு தயக்கமே காட்டும்.. காரணம் பிரபாகரனை புலிகள்தான் கொன்றிருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால்.. அதனால் தங்கள் வெற்றியின் இமேஜ் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்திலும் அந்த விவகாரம் மறைக்கப்பட்டிருக்கலாம்…. அதனால்தான் பிரபாகரன் தப்பியோடும்போது குண்டு வெடித்து மரணமடைந்தார் என்று இலங்கை அரசாங்கம் கூறியிருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன..
 
 
நடந்து முடிந்த இந்த போரில் முக்கியமாக கவனிக்கப் வேண்டிய இன்னொரு விடயமும் இருக்கிறது.. .இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டமானின் பெயர் இடம் பெற்றிருந்தாலும்.. அவர் இறந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.. ஆகவே அவரேதான் பிரபாகரனின் அந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவரை கொன்றுவிட்டு தனது கூட்டத்தினருடன் தப்பிச் சென்றிருக்கலாம்..
 
 
 
பொட்டம்மான் உண்மையில் மிகுந்த திறமைசாலி.. கொழும்பில் காற்றுக்கூட புக முடியாத இடங்களில் அவர் நடத்திய பல படுகொலைகள் அவர் திறமைக்கு எடுத்துக் காட்டாக இருந்து வருகின்றன.. அப்படிப்பட்டவர் அந்த இறுக்கமான போர் சூழலிலும் தப்பிச் செல்வதற்கு ஏதோ ஒரு வழியை கண்டு பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது… ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர் தப்பிச் செல்வதற்கு முன் பிரபாகரனின் கதையை முடித்து.. அந்த தலைமை பதவியை கைப்பற்றி.. எதிர்காலத்தில் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய‌.. எஞ்சியிருக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கதையையும் முடித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம்.. அல்லது போர்க்களத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம்..
 
 
தலையில் கொத்திக் கொலை செய்யும் வழிமுறை சுமார் 25 வருடங்களுக்கு முன் புலிகளால் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது என்பதை நிரோமியின் புத்தகத்தில் இருந்து அறிய முடிகிறது.. ஆகவே அந்த நாட்களில் சித்திரவதைகளுக்கு பேர் போன பொட்டம்மான்.. அந்த வழியை கடைப் பிடித்து பிரபாகரனை தீர்த்துக் கட்டியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன..
 
 
மேலும் இன்று வரை வெளி நாட்டுப் புலிகளின் ஒரு பகுதியினர் இன்னும் பொட்டம்மான் உயிருடன் இருப்பதாகவும்.. அவர் வெகு விரைவில் புலிகளின் தலைமையை ஏற்று அடுத்த கட்ட போரை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறி வருவதில் இருந்து இந்த சந்தேகம் மேலும் வலுப் பெற வாய்ப்பிருக்கிறது…
 
 
 
மேலும் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அனரனி ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்ட நிலையில்.. கடைசியாக எஞ்சியிருக்கும் பிரபாகரனின் கடைசி மகனான பாலச்சந்திரன் எதிர்காலத்தில் தனக்கு எதிராக செயல்பட்டு தன்னை பழிக்குப் பழி வாங்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தில் அவருடைய கதையையும் பொட்டம்மானோ அல்லது அவரைப் போலவே திட்டமிட்டிருந்த‌ வேறு எவரோ கூட பாலச்சந்திரனின் கதையை முடித்திருக்கலாம்..
 
தாங்கள் செய்யும் படுகொலைகளை தந்திரமாக அரசாங்கத்தின் தலையில் சுமத்தி விடும் திறமையுள்ள‌ புலிகள்.. அவரை கொல்வதற்கு முன்.. ஒரு பதுங்கு குழிக்குள் அந்த இறுதி நேர புகைப்படத்தை எடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது… அப்படி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அது ஒரு இலங்கை இராணுவ சிப்பாய்தான் எடுத்தார் என்று கூறவும் முடியும்.. ஏனெனில் அந்த படத்தில் இலங்கை இராணுத்தில் ஒருவரோ அல்லது புலிகளை சேர்ந்தவர்கள் எவருமோ காணப்படாமல்.. பாலச்சந்திரன் மட்டுமே தனித்திருக்கும் ஆதாரமற்ற ஒரு புகைப்படமாகவே அது இருந்து வருகிறது…
 
 
அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறி வரும் அரசாங்க தரப்பின் கூற்றை ஆராய்ந்து பார்க்கும்போது.. சிலவேளைகளில் அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.. ஏனெனில்.. கடல் புலி தளபதி சூசையை சுட்டுக் கொன்ற இராணுவம் அவரது மனைவியையும் பிள்ளைகளையும் கொலை செய்யவில்லை.. இன்று வரை அவர்கள் அனைவரும் இராணுவத்தின் பாதுகாப்பில் நலமாகவே இருந்து வருகிறார்கள்.. மேலும் சூசையின் பிள்ளைகளுக்கு அவர்கள் கல்வியை மேற்கொண்டு தொடர்வதற்கு இலங்கை அரசாங்கம் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறது..
 
 
அது மட்டுமல்ல‌.. போர் வலயங்களில் கைது செய்யப்பட்ட புலிகளின் பதினைந்து பதினாறு வயது நிரம்பிய பல இளம் புலிப் போராளிகளை இலங்கை இராணுவம் கொலை செய்யாமல் அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து வருகிறது .. இப்படிப் பார்க்கும்போது இலங்கை இராணுவம் பிரபாகரனின் மகனை மட்டும் எதற்காக கொல்ல வேண்டும்? என்று கேட்கவும் இடமிருக்கிறது…
 
 
புலிகள் அமைப்பு அப்படியொன்றும் ஒரு கட்டுக் கோப்பான அமைப்பு அல்ல.. அவர்கள் இருந்த காலத்தில்.. அவர்களுக்குள்ளும் தலைமை போட்டிகள் தாராளமாகவே நடைபெற்றிருக்கின்றன.. அவர்களும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதிலும்.. போட்டுத் தள்ளுவதிலும் சளைத்தவர்கள் அல்ல‌ர் என்பதை பல சம்பவங்கள் மூலம் அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்….
 
 
பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்த மாத்தையா பிரபாகரனைப் போல் இரக்கமில்லாமல் பல படுகொலைகளை புரிந்தவர்தான்.. குறிப்பாக விதம் விதமாக சித்திரவதை செய்து கொலை செய்வதில் பொட்டமானுக்கு நிகரானவர்…. பிரபாகரனின் அடுத்த இடத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த கேணர் கிட்டுவுக்கு.. குண்டு வைத்து அவரை கொலை செய்ய எடுத்த முயற்சி.. கிட்டுவுக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போன கதையாக.. அவருடைய ஒரு காலை மட்டும் இழக்க வைத்து.. மற்ற அங்கங்களுடன் உயிர் பிழைக்க வைத்தது….
 
 
அடுத்த முயற்சியாக புலித் தலைமையை கைப்பற்ற மாத்தையா போட்ட சதித் திட்டமும் கண்டு பிடிக்கப்பட்டு.. அந்த சதியும் தவிடு பொடியாகி.. அவரும் அவருக்கு ஆதரவான 260 புலிப் போராளிகளும் பிரபாகரனால் கைது செய்யப்பட்டு பல சித்திரவதைகளின் பின்னர் வன்னிக் காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.. மாத்தையாவை பிரபாகரனே தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது..
 
அதே போல் கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் ஏற்பட்ட தலைமையை பிரித்துக் கொள்ளும் போட்டியில்.. கருணா பிரபாகரனால் குறி வைக்கப்பட்டார்.. ஆகவே தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அவர் அரசாங்கத்துடன் இணைந்து இன்று அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.. அதே போல‌ பிரபாகரனின் மறைவிற்கு பின் அந்த பதவியை குறி வைத்து தானே தமிழீழத் தலைவர் என்று அறிவித்த‌ கே‍.பியும் தனது உயிருக்கு இலங்கை அரசாங்கத்தால் ஆபத்து என்றதும் அரசாங்கத்துடன் சேர்ந்து வசதியாக வாழ பழகிக் கொண்டார்.. இப்படி பல உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும்..
 
 
 
2007 நவம்பர் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் இலங்கை கிபீர் விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.. இந்த தாக்குதல் அதிகாலை வேளையில்.. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான‌ கிளிநொச்சியில்.. மிகவும் இரகசியமான இடமொன்றில்.. கொன்கிறீட் சுவரினால் மிகுந்த‌ பாதுகாப்புடன் அமைக்கப்படிருந்த‌ ஒரு பதுங்கு குளியொன்றினுள் படுத்துறங்கிக் கொண்டிருந்த‌ தமிழ்ச் செல்வனை துல்லியமாக‌ குறிவைத்து இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்டிருந்தது..
 
 
அப்படியானால் அந்த அதிகாலை வேளையில் அந்த இடத்தில் தமிழ்ச்செல்வன் பதுங்கியிருக்கிறார் என்ற விபரத்தை இலங்கை விமானப்படையிருக்கு அறிவித்தவர் யார்?
 
 
முழுக்க முழுக்க புலிகளின் அமைப்புக்குள் இரகசியமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பினருக்கு மட்டுமே தமிழ்ச்செல்வனின் இரகசிய‌ நடவடிக்கைகள் அனைத்தையும் நன்கு அறியும் வாய்ப்பு இருந்திருக்கிறது.. மேலும் தனி ஒருவரால் இந்த காட்டிக் கொடுப்பை வெற்றிகரமாக நடத்தியிருக்க‌ முடியாது…. ஆகவே அது ஒரு குழுவினரின் கூட்டு முயற்சியின் மூலமே அன்று தமிழ்ச்செல்வன் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார் என்பது கண்கூடு..
 
 
இதிலிருந்து விடுதலை புலிகள் என்பது ஒரு கட்டுக் கோப்பான ஒற்றுமையுள்ள அமைப்பல்ல என்பதை உறுதிப்படுத்த முடியும்.. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர்கூட வெளிநாடுகளில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆளுக்காள் குழி பறிப்பதும்.. குத்து வெட்டு கொலைகள் புரிவதிலும்தான் தங்கள் தமிழீழ தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதுதான் அன்று தொட்டு இன்றுவரை இருந்து வரும் புலிகளின் வழிமுறையாகும்..
 
 
மொத்தத்தில் தமிழீம் என்பது புலிகளின் ஒரு இலட்சியமல்ல‌.. அது இலங்கை தமிழர்களை முட்டாள்களாக்கி அவர்கள் வாக்குகளை பெறுவதற்காக.. த‌மிழர் விடுதலை கூட்டணியினரால் அவர்கள் தலையின் மேல் சுமத்தப்பட்ட ஒரு சுமை.. பின்னர் அந்த விடுதலை கூட்டணியினரை கொன்றொழித்து விட்டு அந்த தமிழீழ சின்னத்தை பறித்துக் கொண்ட புலிகள் அதை வியாபாரமாக்கினார்கள்.. அதன் விளைவாக அவர்களுக்குள் நடைபெற்று வந்ததெல்லாம் அதன் தலைமைப் பதவிக்கான இழுபறியேயல்லாமல் வேறொன்றுமில்லை…
 
 
சர்வதேச ஸ்கொட்லாண்ட் பொலிசார் ஒரு சர்ச்சைக்குரிய படுகொலையை துப்புத் துலக்க முற்படும்போது.. முன்னர் இதுபோல நடந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட‌ இன்னொரு படுகொலையுடன் அதை ஒப்பிட்டு இந்த படுகொலைக்கான காரணத்தை கண்டு பிடிக்க முற்படுவது போல.. இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்தையும் அதனால் கொல்லப்பட்ட அதன் தலைவர்களையும் பற்றிய பல முடிச்சவிழ்க்க முடியாத சந்தேகங்களை.. கடந்த காலமொன்றில் அதேபோன்றதொரு சூழலில் நடத்தப்பட்ட இன்னொரு விடுதலை போராட்டத்துடன் ஒப்பிட்டு ஓரளவுக்கு அந்த சந்தேகங்களுக்கு நிவர்த்தி காண முடியும்..
 
 
இலங்கையில் நடந்த போராட்டம் போலவே எழுபதாம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு விடுதலை போராட்டம்தான் பங்காளதேஷ் விடுதலை போராட்டமும்.. அங்கும் இலங்கை தமிழர்கள் சிங்கள அரசாங்களிடன் அடிமைப்பட்டுக் கிடந்தது போலவே.. அவர்களும் மேற்கு பாகிஸ்தானிடம் அடிமைப்பட்டு கிடந்தார்கள்.. இங்கு போலவே அங்கும் மேற்கு பாகிஸ்தான் அன்றைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்காளதேஷில் தனது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தது..
 
 
இந்த கால கட்டத்தில்.. தற்போது உருத்திரகுமாரின் தலைமையில் அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழம் போலவே.. அன்றும் சில பங்காளதேசிகளால் இந்தியாவில் வைத்து நாடு கடந்த வங்காள தேசம் அறிவிக்கப்பட்டது.. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.. இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி தங்கத்துரை முதலியோர் கொல்லப்பட்டது போலவே.. முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த பின்.. பங்காளதேஷின் உப ஜனதிபதி.. பிரதம மந்திரி.. மற்றும் விடுதலைக்காக குரல் கொடுத்த பலர் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயும் படு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்..
 
 
 
பின்னர் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் தலையீட்டினால் அவர்களுக்கு விமோசனம் கிடைத்து.. சுதந்திர வங்காள தேசம் மலர்ந்தது….. ஆனால் இங்கே ராஜீவ் காந்தியின் தலையீட்டினால் கிடைக்க இருந்த தமிழர்களின் சுதந்திர தேசம்.. பிரபாகரனின் தலைக் கனத்தினால் பறி போனது.. இப்படியாக அங்கும் இங்கும் ஒரே மாதிரியான அரசியல் நிகழ்வுகளே அரங்கேறியிருக்கின்றன…
 
 
பங்காளதேஷில் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் நடந்த விடுதலை போரில்.. சுமார் ஒரு கோடி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.. சுமார் பத்து கோடி பங்காளதேசிகள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்கள்.. சுமார் ஐந்து இலட்ச‌ம் பெண்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர்.. இவர்களில் பெரும்பாலானோர் அந்த தேசத்தில் வாழ்ந்து வந்த‌ இந்து பெண்களாவார்….
 
 
பாகிஸ்தான் இராணுவம் இந்துமத பெண்களையே தேடித் தேடி கற்பளித்ததாக கூறப்படுகிறது.. வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.. பெரிய் நகரங்கள் தரை மட்டமாக்கப்பட்டன்.. பெரிய அங்காடிகள் முதல் சிறிய கடைகள் வரை பாகிஸ்தான் இராணுவத்தினரால் சூறையாடப்பட்டன.. இப்படியாக பாரிய அழிவை சந்தித்தது அந்த தேசம்..
 
இந்த நிலைமைகளை கண்டு கொதித்தெழுந்த இந்திரா காந்தி தனது இந்திய இராணுவத்தை அங்கே அனுப்பி.. பாகிஸ்தான் படையினரை புரட்டியெடுத்து விரட்டியடித்தார்.. பங்காளதேஸ் விடுதலையடைந்தது.. அதன் பின்னர் அந்த சுதந்திர பங்காளதேஷில் அமைதி நிலவியதா?.. இல்லை.. எவர்கள் அந்த நாட்டின் விடுதலைக்காக போரிட்டு அந்த நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுத்தார்களோ.. அவர்களே அந்த நாட்டின் தலைமை பதவிக்காக‌ ஒருவரை ஒருவர் கொன்றொழித்தார்கள்.. அதில் முதலாவதாக குறி வைக்கப்பட்டவர்தான் அதன் வெற்றிக்கு காரணமாக இருந்த முஜிபுர் ரஹ்மான்..
 
 
முஜிபுர் ரஹ்மானை அவரது வீட்டில் வைத்து கொலை செய்தபோது.. அவருடன் சேர்த்து அவரது மனைவி.. மூன்று மகன்கள்.. இரண்டு மருமகள்கள்மார் என்று மொத்தமாக ஏழு பேர் கொல்லப்பட்டார்கள்.. அத்துடன் அவரது சகோதரரும் அவர் குடும்பமும்.. அவரது சகோதரியும் அவரது குடும்பமும் என்று சுமார் 25 பேருக்கு மேற்பட்ட அவரது நெருங்கிய உறவினர்களும் அன்று கொல்லப்பட்டார்கள்.. இந்த கொலைகளை புரிந்தவர்கள் சாட்சாத் முஜிபுர் ரஹ்மானின் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள்தான்.. இவர்களுக்கு சுதந்திர பங்காளதேஷில் இராணுவ உயர் பதவிகளை வழங்கியிருந்தார் ரஹ்மான்.. இவர்களின் சதித் திட்டத்தினால்தான் அவர்களின் முழுக் குடும்பமும் அன்று கொலை செய்யப்பட்டார்கள்..
 
 
தங்கள் உயிருக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படக் கூடாதே என்றுதான் ரஹ்மானின் 11 வயது றூசலையும் அன்று கொலை செய்தார்கள்.. இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரது வயது 49 ஆக இருந்திருக்கும்.. அன்று அவரை கொலை செய்தவர்கள்.. அவரை உயிருடன் விட்டு வைத்திருந்தால்.. சில வேளை அவர் இவர்களை எதிர்காலத்தில் பழிக்குப் பழி வாங்கியிருப்பார் என்பதை மறுக்க முடியாது..
 
 
ஏனெனின் இந்த படுகொலை சம்பவத்தின்போது மேற்கு ஜேர்மனியில் கல்வி பயின்று கொண்டிருந்த ரஹ்மானின் இரண்டு மகள்களும் உயிர் தப்பியிருந்தார்கள்.. ஆட்சியை கைப்பற்றிய கொலையாளிகள் இவர்கள் இருவரும் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்தார்கள்.. இந்த கொலை நடந்த காலப் பகுதியான 1975 ஆம் ஆண்டு.. ஜேர்மனியில் இருந்த அவரது இரண்டு மகள்களில் மூத்தவரான ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) 26 வயதுதான் ஆகியிருந்தது..
 
 
அன்று அதிஸ்டவசமாக உயிர் தப்பிய‌ அந்த மகள்களில் ஒருவர் மூலம்தான் அந்த கொலைகாரர்களின் முடிவு 35 வருடங்களின் பின்னர் எழுதப்பட்டு.. தாங்கள் அனைவரும் தூக்கிக் தொங்கப் போகிறோம் என்பதை அறியாமல் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளி பங்காளதேஷ் ஆட்சியில் ஜனாதிபதியாக வருவதில் தங்கள் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள்…. .
 
 
ஆம் அன்று ரஹ்மானின் இந்த இரண்டு குமாரிகளும் ரஹ்மானுடன் சேர்த்து கொலை செய்யப்பட்டிருந்தால் இன்று வரை அந்த கொலைகாரர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.. ஆனால் பல வருடங்களின் பின்னர்.. ரஹ்மானின் குமாரியின் வடிவில்தான் காலன் அவர்களுக்கு குறி வைத்திருக்கிறான் என்பதை.. அவர்களில் எவருமே அன்று கனவிலும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்…….”

Geen opmerkingen:

Een reactie posten