சர்வதேச நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்களை உயிருடனோ பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபையின் உறுப்பினரும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான நெடியவன் என்பவருக்கு அடுத்த தலைவர் எனக் கூறப்படும் கபிலன் என்ற நந்தகோபன் என்பவர் இலங்கை இராணுவத்தின் புலனாய்வு நடவடிக்கை மூலம் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்தது போல் உலக நாடுகளில் இருக்குத் ஏனைய புலித் தலைவர்கள் உயிருடனோ அல்லது பிணமாகவோ இலங்கைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி புலிகளை தோற்கடித்து பெற்ற வெற்றியை அடுத்து கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி இதுவாகும்.
பிரபாகரன் கொலை செய்யப்பட்ட பின்னர், புலிகள் அமைப்புக்கு தலைவராகவிருந்த கே.பி. என்ற குமாரன் பத்மநாதன் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்.
அவரது கைதை தொடர்ந்து புலிகளின் சர்வதேச வலையமைப்பு சீர்குலைந்தது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்திருக்க வேண்டும்.
மேற்குலக நாடுகளின் உதவியோடு புலிகளின் சர்வதேச வலையமைப்பு மீண்டும் உயிர்பெற்றது. புலிகளின் சர்வதேச முன்னணி இதன் மூலம் பலம்பெற்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மூலம் சர்வதேச புலிகள் எம்மை மயிர்க்கூச்செறிய செய்தனர். அது ராஜதந்திர தாக்குதலாகும்.
மீதமுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களை தேடி நாம் நடவடிக்கைகளை தொடர்ந்திருக்க வேண்டும். நெடியவன், விநாயகம், ருத்திரகுமாரன், சுரேன் சுரேந்திரன், அருட் தந்தை இம்மானுவேல், அடேல் பாலசிங்கம், போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வரும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேணடும்.
ருத்திரகுமாரனின் தலையை கொண்டு வரும் நபருக்கு ஒரு கோடி ரூபா சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருக்கலாம்.
இவர்களை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கையின் ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருக்கலாம்.
விடுதலைப் புலிகள் செய்த போர் குற்றங்களை விசாரணை செய்த தனியான நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்தி சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கியிருக்கலாம்.
எமது கருணை, அன்பு மற்றும் மறதி போன்றவற்றை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். அத்துடன் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்.
தாமதித்தேனும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும் 16 அமைப்புகள் தடைசெய்யப்பட்டன.
அத்துடன் அனந்தி சசிதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் போன்ற தமிழ்ப் பிரிவினைவாதிகளை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.
அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உருவாகியுள்ள புலிகளின் செயற்பாட்டாளர்கள் அதன் தலைவர் கோபி ஆகியோருக்கு வலை விரிக்க வேண்டும்.
ஜனநாயகம், மனித உரிமை, நல்லிணக்கம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ பிரசன்னத்தை குறைக்கக் கூடாது.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 424 புலிகளின் உறுப்பினர்களை கைது செய்ய வலைவரிக்க வேண்டும்.
பயங்கரவாதத்தின் இருள் நிழல்கள் பயமுறுத்த ஆரம்பித்துள்ளதால், கட்சி என்ற வகையில் பயங்கரவாததிற்கு எதிராக மக்கள் நிலைப்பாடுகளை கட்டியெழுப்ப மீண்டும் வீதியில் இறங்க போகிறோம்.
விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவி வருவோரை கவனமாக இருக்குமாறு நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம். எமது பொறுமை எல்லை மீறிவிட்டது எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESVLXmp4.html
Geen opmerkingen:
Een reactie posten