தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

கோபி தொடர்புடையவர்களை கைது செய்யத் தயாராகும் CID! பீதியல் கதைத்தவர்கள்

நான் நேசிக்கும் இன் நாடு உலகில் தலை நிமிர்வது ஆசை – அனந்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதன் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களையும் தடை செய்து கைது செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி ஒன்றின் உறுப்பினர் தெரிவித்திருக்கும் கருத்துத் தொடர்பில் இன்று வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையிலேயே அனந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வெளியிட்டிருக்கும் முழுமையான அறிக்கை
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மேல் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட ஜாதிக ஹெல உறுமய அமைப்பினை சேர்ந்த உதயகம்பெல்லவ, தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தடைசெய்ய வேண்டும் எனவும், நான் உட்பட பாரளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் கருத்து வெளியிடடுள்ளார். இது, தனி நபர் ஒருவரின் கருத்தென்றோ, அல்லது இனவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமயவின் கருத்தென்றோ புறமொதுக்கி விடமுடியாது.
ஏனெனில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளாரல் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் தேசத் துரோகிகளாக கருதப்பட்டு, அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். நான், நடந்து முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் எண்பத்தெட்டு ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளால் மாகண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவள்.
இலங்கை ஒரு ஜனநாயகநாடு என்ற வகையில் எனக்கு வாக்களித்த அந்த மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் உரிமை பெற்றவள். எமது மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து இழைக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கக் கடமைப்பட்டவள். அப்படி நான் குரல் கொடுப்பது குற்றமாகக் கருதப்படுமானால், இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவதில் எந்த ஒரு அர்த்தமும் இருக்கமுடியாது. இலங்கையில் எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் பற்றி நான் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் தெரிவித்தமையே என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.
இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட முடியாத நிலையில்தான் நான் சர்வதேச அரங்கில் முறையிட நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்ற உண்மையை எவரும் மறந்துவிடமுடியாது. நான் எனது கணவரை எனது பிள்ளைகள் முன்னிலையில் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். இன்றுவரை ஐந்து ஆண்டுகள் ஆகின்ற போதிலும் அவர் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா என்பதை கூட என்னால் அறியமுடியவில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில், மற்றும் காணாமற் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் குழுவில் என அனைத்திடங்களிலும் நாம் முறையிட்டோம். எத்தனையோ வீதிப் போரட்டங்களை நடத்தினோம். ஆனால், எவ்வித பலனும் கிட்டவில்லை. இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதி அல்ல.
இந்த நாட்டில் வாழும் எத்தனையோ தமிழ் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை. இதற்கு, இந்த அரசாங்கத்தாலோ, எம் மேல் தேசத் துரோகிகள் எனக் குற்றம் சாட்டுபவர்களாலோ, என்னைக் கைது செய்யவேண்டுமெனக் குரல் கொடுப்பவர்களோலோ பதில் தரமுடியவில்லை. அவர்கள் பதில் தருமளவுக்கு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவுமில்லை.
இப்படியாக இந்த நாட்டின் எல்லைக்குள் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்பட முடியாத நிலையில், நாம் சர்வதேச அரங்கில் முறையிடுவதில் என்ன தவறு இருக்கமுடியும்..? ஆனால், அதிகார மமதையும் “ஆட்சியாளர்கள்” என்ற வலிமையும் எம்மை தேச விரோதிகளாக காட்ட முயல்கின்றன. ‘எமது தேசம் மனித உரிமைகளை மதிக்கவில்லை எனவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்கின்றது’ எனவும் சர்வதேசம் குற்றம் சாட்டும் வகையில் ஒரு ஆட்சியை நடத்தி எமது நாட்டை அவமானப்படுத்துவதற்கு உடந்தையானவர்களா, அல்லது ‘நீதியை நிலைநாட்டப்படுவதன் மூலம் எமது தேசம் பெருமைப்படுத்தப்பட வேண்டும்’ என எதிர்பார்ப்பவர்களா தேசத்துரோகிகள் என நான் கேள்வி எழுப்புகின்றேன்.
நாம் இந்த நாட்டை அவமானப்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்களோ, மனநோயாளர்களோ அல்ல. நாம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை தான் கேட்கின்றோம். சரணடைந்த மற்றும் காணாமற் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியத் துடிக்கின்றோம். எங்கள் கோரிக்கைகளுக்கு விடை தரவேண்டியது ஆட்சி அதிகாரத்திற்குள் உள்ளவர்களின் மறுக்கமுடியாத கடமை.
ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பொறுப்புக்கூறல் என்ற புனித கடமை புறந்தள்ளப்பட்டுள்ளது. முற்றாக எம் மீதான ஒடுக்குமுறைகள் பல்வேறு முறைகளில் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தேடுதல் வேட்டைகள். சுற்றிவளைப்புகள், கைதுகள் என எம்மக்கள் ஒவ்வொரு விநாடியையும் அச்சத்தில் கழிக்கவேண்டிய அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது. எம் மீது இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நியாயம வழங்க வேண்டியவர்களே மேலும் மேலும் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் போது நாம் சர்வதேச அரங்கில் முறையிட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.
எம்மை கைது செய்வதன் மூலம் எமது குரலை அடக்கிவிட முடியும் என எவராவது நினைத்தால் அது தவறான கணீப்பீடாகும். எம்மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளை கூட உலக அரங்கில் பாரிய எதிர்விளைவுகளை கொடுக்கும் நிலமையையே தேடும். சர்வதேச முனைப்பை மேலும் அதிகரிக்கவேண்டிய தேவையை உருவாக்கும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பெரும்பான்மையான தமிழ் மக்களால் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி. நானோ, சக பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களோ மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். எனவே. தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தடை செய்வதோ, எம்மை கைது செய்வதோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரும் உரிமையைக் கூட மறுக்கும் ஜனநாயக விரோத செயலாகும்.
இதை இன ஒடுக்குமுறையாளர்கள் புரிந்து கொள்ளத் தவறினால் அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டிய நிலையே ஏற்படும். நாம் நாட்டையும் எமது இனத்தையும் நேசிக்கின்றோம். இந்த நாடு சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமெனவிரும்புகின்றோம். இந்த நாடு ஜனநாயக விரோதப் பாதையில் செல்வதற்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுத்து கௌரவத்தைப் பாதுகாப்போம் என உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
http://www.jvpnews.com/srilanka/65722.html

கோபி தொடர்புடையவர்களை கைது செய்யத் தயாராகும் CID! பீதியல் கதைத்தவர்கள்

இவை தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியா கனடா அமெரிக்கா எரித்திரியா ஸ்பேயின் தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கதைத்துள்ளதாகவும் அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அடையாளப்படுத்தப்பட்ட கோபியின் தொலைபேசி விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது. அண்மையில் நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கோபி உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டனர். எனினும் கோபி தொடர்பான விசாரணைகள் இன்னமும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. கொல்லப்பட்ட ஏனைய இரண்டு முன்னாள் புலி உறுப்பினர்களினதும் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டதன் பின்னர் விசாரணைகள் நடத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கோபியுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் சில நேரங்களில் கைது செய்யப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், 41 பேர் தொடர்ந்தும் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65717.html

Geen opmerkingen:

Een reactie posten