தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 april 2014

மான் வேட்டையை, புலி வேட்டையாகக் காண்பிக்கின்றது சிங்கள அரசு!
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 01:49.31 AM GMT ]
இப்போது, இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக அழுவதா? அல்லது ஆத்திரம் கொள்வதா? என்ற அங்கலாய்ப்பு மட்டுமே ஒவ்வொரு தமிழனிடமும் எஞ்சி இருக்க முடியும்.
கடத்தல்கள், காணாமல் ஆக்குதல், ஆதாரமற்ற வகையிலான படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகளாக ஆக்கப்படும் தமிழ்ப் பெண்களது மரணங்கள், கலாச்சாரச் சீரழிவு ஊக்குவிப்பு, போதைப் பொருள் விநியோகம், அச்சுறுத்தல்கள், கட்டாய கருக்கலைப்புக்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், நிலப் பறிப்புக்கள் என அத்தனை கொடூரங்களும் ஈழத் தமிழர்கள் மீது நடாத்தப்படுகின்றன.
அதற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றவர்கள் மீது விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டுக்களும், கைதுகளும், துப்பாக்கிச் சூடுகளும், மரணங்களும் நடாத்தப்படுகின்றன.
ஆனாலும், உலகின் எந்தத் திசையிலிருந்தும் அதற்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுப்பப்படாமல், அத்தனையும் ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சிங்கள தேசம் அடக்கி வைத்துள்ளது.
விரிந்து செல்லப் போகும் தமிழின அழிப்புக்கு முன்னெச்சரிக்கையாக, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்மீதும், அதன் செயற்பாட்டாளர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய, சிங்கள அரச தரப்புச் செய்திகளின்படி, விடுதலைப் புலிகள் அமைபைச் சேர்ந்த மூவர் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் விடுதலைப் புலிகள்தானா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தமிழர்களது இன்றைய நிலையில் சாத்தியப்படாத விடயம்.
ஆனாலும், அவர்கள் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பதனால், அவர்கள் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏதோ வகையில் இடைஞ்சலாக இருந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
சிங்கள இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டுள்ள தமிழர் தாயக பிரதேசத்தில் ஒரு ஆயுதப் போராட்டமோ, விடுதலைப் புலிகளது மீள் எழுச்சியோ சாத்தியமானது அல்ல.
சிங்கள ஆட்சியாளர்களோ, அவர்களது படையினரோ தெரிவித்து வரும் கதைகளும், அதன் தொடர்ச்சியான சம்பவங்களும், படுகொலைகளும் இன்னொரு செய்தியை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்த முயல்கின்றது.
அதாவது, சிங்கள தேசத்தின்மீது நீதி விசாரணை என்ற கோரிக்கையூடாக அழுத்தங்கள் கொடுக்க முற்பட்டால், ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லைக் கவசமாக்கி, எஞ்சியுள்ள உணர்வுள்ள தமிழர்களையும் அழித்து விடுவோம் என்பதுதான் அந்தச் செய்தி.
காணாமல் போன தனது மகனைத் தேடி, போராட்டம் நடாத்திய ஒரு தாயின் போராட்டமும், ஒரு தங்கையின் கண்ணீரும் சர்வதேச கவனத்தை ஈர்த்த போது, விடுதலைப் புலிகள் மீண்டும் சிங்களப் படைகளால் களத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.
கோபி, அப்பன், தேவியன் என்ற பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஏராளமான தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகளது புதிய தலைவர் என்று இராணுவத்தால் அறிவிக்கப்பட்ட கோபி கைது செய்யப்பட்டதாக சிங்களப் படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டது.
பின்னர், அவர்கள் மூவரும் இராணுவத்தின் தேடுதல், சுற்றிவளைப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு தற்போது அறிவித்துள்ளது.
ஒரு குறுகிய பிரதேசத்தில், பல ஆயிரம் சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில், தப்பிச் செல்ல முற்பட்டதால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற சிங்கள அரசின் கூற்று நம்பும்படியாக அமையவில்லை.
சர்வதேச நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு, போர்க் குற்ற விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ள சிறிலங்கா அரசுக்கு விடுதலைப் புலிகளது மீள் எழுச்சி என்பது, அவர்களது நிலைக்கு ஆதரவான பலமான செய்தி.
அதற்குக் காரணமானவர்களில் ஒருவரையாவது உயிரோடு பிடித்திருந்தால், சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு இலகுவான ஆயுதமாகியிருக்கும். அதை விடுத்து, அவர்கள் அவசியமற்ற வகையில், போலிக் காரணங்களுடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதுவே, சிங்கள அரசின் மீதான சந்தேகத்தை மேலும் வலுவடைய வைத்துள்ளது.
தன்மீது ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பினால் மேற்கொள்ளப்படவுள்ள போர்க் குற்ற விசாரணையைக் குழப்பும் நோக்கத்துடனும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தடுக்கும் விதமான அச்சுறுத்தலுக்கும் இந்த ஓரங்க நாடகமும், கைதுகளும், தடுப்புக்களும், படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இதையும் மீறி, தமிழர்கள் ஐ.நா. நோக்கி வாய் திறக்க முற்பட்டால், இதையும் விடப் பூதாகரமான காட்சிகள் அரங்கேற்றப்படும்.
தெற்கே, சில குண்டு வெடிப்புக்களும், அதில் சில அப்பாவிப் பொதுமக்களின் உயிரிழப்புக்களும்கூட எதிர்பார்க்கப்படலாம்.
அதனைத் தொடர்ந்து பாரிய படை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படலாம்.
2009 மே மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் காலத்தில், தமிழீழ மண்ணில் ஒரு இன அழிப்புப் போர் நிகழத்தப்பட்டது.
ஐந்து வருடங்களின் பின்னரான, 2014 மே மாதத்தில் மீண்டும் ஒரு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாட்களில், ஈழத் தமிழர்கள் மீது இன்னொரு இனப் படுகொலை நிகழத்தப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
அதனை, ஜெனிவாவில் அமெரிக்காவின் தலைமையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய காங்கிரஸ் அரசு எதிர்த்த போதே நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
- கதிரவன்
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmtz.html
சிங்கள ஊடகங்களில் வெளிவந்துள்ள கோபி பற்றிய செய்திகள்
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 02:00.32 AM GMT ]
இன்றைய தினம் வெளியான அநேகமான சிங்கள பத்திரிகைகளில் கோபி தாக்குதல் சம்பவம் குறித்த செய்தியே பிரதான தலைப்புச் செய்தியாக அமைந்துள்ளது.
சிங்கள பத்திரிகைகளில் வெளியான தலைப்புக்களும், செய்தியின் சுருக்கங்களையும் பார்ப்போம்!
தினமின - எல்.ரீ.ரீ.ஈ யின் புதிய தலைவர் கோபி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி
பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவராகக் கருதப்படும் கோபி என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு படையினர் மேற்கொண்ட சோதனையின் போது கோபி மற்றும் அவரது சகாக்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் மேலும் இரண்டு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்.
புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ கோப்ரல் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
லங்காதீப - புலித் தலைவர் கோபி மரணம்
புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பெற்றுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீள செயற்பட வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்த கோபி என்ற புலி உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளார்.
நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மேலும் இரண்டு புலித் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அனுராதபுர விமான நிலையத் தாக்குதல், கொலன்னாவ எரிவாயு தாங்கி தாக்குதல் ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
திவயின - புலிகளுக்கு மீள உயிருட்ட முயற்சித்த கோபி உள்ளிட்டவர்கள் பலி
தமிழீழ விடுதலைப் புலிகளக்கு மீள உயிருட்ட முயற்சித்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் படையினர் நடத்திய தாக்குதலில் கோபி மற்றும் மேலும் இரண்டு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தில் கிளிநொச்சி, கொக்காவில் இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் செல்வராஜ் என்ற புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
சோதனை நடத்திய இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, கோபி உள்ளிட்டவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
எனினும், இந்த சந்தர்ப்பத்தில் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரிவிர -   கோபி உள்ளிட்ட மூன்று புலித் தலைவர்கள் இராணுவத் தாக்குதலில் பலி
வன்னிக் காட்டில் மறைந்து கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்த கோபி உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று தலைவர்களை படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொன்னையா செல்வநாயகம் எனப்படும் கோபி, புலிகளின் ராதா படையணியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கஜீபன் எனப்படும் தேவியன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நவரட்னம் நவனீதன் எனப்படும் அப்பன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESWLXmt0.html
கொல்லப்பட்ட கோபியின் உடல் பதவியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது !
12 April, 2014 by admin
வியாழக்கிழமை அதிகாலை வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியை இலங்கை இராணுவத்தினர் சுற்றிவளைத்தார்கள். அங்கே மறைந்து இருந்ததாகக் கூறப்படும் புலிகளின் முன் நாள் உறுப்பினர்களான கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரையும் தாம் சுற்றிவளைத்ததாகவும், பின்னர் நடந்த சமரில் அவர்கள் மூவரும் கொல்லப்பட்டதாகவும் தன்னிச்சையாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளார்கள். இச்சமரில் முதலில் 2 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 1 இராணுவச் சிப்பாய் தான் கொல்லப்பட்டார் என்றார்கள். ஆனால் தற்போது கொல்லப்பட்ட அந்த இராணுவ சிப்பாயும் பிறிதொரு இடத்தில் நடந்த விபத்தில் தான் இறந்தார்கள் என்கிறார்கள் இராணுவத்தினர். 

இது இவ்வாறு இருக்க, கொல்லப்பட்டதாக கூறப்படும் கோபி, அப்பன், தேவிகன் ஆகியோரது உடல்களை சிங்கள பகுதியான பதவியாவுக்கு இராணுவத்தினர் எடுத்துச் சென்றுள்ளார்கள். மேலும் இந்த மரண விசாரணையை அனுராத புரம் நீதவானே மேற்கொள்ளவேண்டும் என்றும் இராணுவத்தினர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். சம்பவம் நடந்த இடம் தமிழ் பகுதியாகும். அங்கு வைத்து மரணவிசாரணை நடத்தாமல் ஏன் , இதனை சிங்கள பகுதிகளுக்கு மாற்றவேண்டும். மேலும் உடல்களை பதவியாவுக்கு கொண்டுசெல்ல காரணம் என்ன ? இவை அனைத்தும் பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, இச்சம்பவத்தில் பெரும் குளறுபடிகள் மற்றும் ரகசியங்கள் உள்ளது. இவை அனைத்தும் சில நாட்களில் வெளியாகிவிடும் என்பதே உண்மையாகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6669

Geen opmerkingen:

Een reactie posten