தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 september 2011

எம்.கே.நாராயணனின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ்

[ ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2011, 06:41.52 AM GMT ]
அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களையடுத்து இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒருவர் எம்.கே. நாராயணன். இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அவர், இப்போது மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கிறார்.
இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜே.என்.டிக்சிற் 2005 ஜனவரியில் மரணமானதை அடுத்து அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்தான் எம்.கே. நாராயணன்.
கடந்த ஆண்டு ஜனவரி வரையிலான ஐந்து ஆண்டுகள் முழுமையாக இந்தப் பதவியில் இருந்தார்.
அவர் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்த ஐந்து ஆண்டுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, இந்தியா மற்றும் அதை அண்டிய தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற காலத்தில் தான் அவர் இந்தப் பதவியில் இருந்துள்ளார்.
கேரளாவின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட மாயங்கோட்டை கெலத் நாராயணன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி கற்றவர்.
1987 தொடக்கம் 1990 வரை இந்தியாவின் உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி. (Intelligence Bureau ) யின் தலைவராகப் பதவி வகித்த இவர், பின்னர் அனைத்துப் புலனாய்வு அமைப்புகளினதும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்யும் அதழிகாரம் படைத்த கூட்டுப் புலனாய்வுக் குழு (Joint Intelligence Committee)  வின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
மீண்டும் 1991 ல் ஐ.பி.யி.ன் தலைவரான எம்.கே.நாராயணன் 1992 ல் ஒய்வு பெற்றார்.
அதன் பின்னர், 2004 ல் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த இந்தியப் பிரதமருக்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.என்.டிக்சிற்றின் மரணத்தையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியைப் பிடித்துக் கொண்டார்.
“மைக்' என்று புலனாய்வு வட்டாரங்களில் அறியப்பட்ட எம்.கே.நாராயணன் இலங்கை விவகாரத்தில் தொடர்புபட்ட முக்கியமான ஒருவர். அவர் ஐ.பி.யி.ன் தலைவராக இருந்த போது தான் இந்திய இலங்கை உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
அதையடுத்து இந்தியப் படையினரின் வருகை, புலிகளுடனான மோதல் எல்லாம் நடந்து முடியும் வரை அவரே ஐ.பி.யி.ன் தலைவராக இருந்தார்.
அப்போது இந்தியப் புலானா#வு அமைப்புகள் எதுவுமே புலிகள் பற்றிய உண்மையான தகவல்களை இந்திய அரசுக்கு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது.
புலிகளை சரியாக கணக்குப் போடாமல், தேவையற்ற மோதலுக்குள் சிக்க வைத்ததான பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது.
இதற்கு எம்.கே.நாராயணனும் ஒருவகையில் பொறுப்பாளியாகவே இருந்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை நடந்தபோது கூட ஐ.பி.யின் தலைவராக இருந்தவர் நாராயணன்தான்.
ஆனால், அப்போது அவர் அந்தத் தவறுக்காக பதவி விலக முன்வரவில்லை என்றும் அவர் மீதும் குற்றச்சாட்டுகள் இருந்தன.
2008ஆம் ஆண்டில் இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது, மும்பைத் தாக்குதல் நடந்தது.
அதற்குப் பொறுப்பேற்று எம்.கே.நாராயணன் பதவியை விட்டு விலக முன்வந்தார்.
ஆனால், அதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை.
2005 தொடக்கம் 2010 வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்த போது எம்.கே.நாராயணன் இலங்கை விவகாரத்தில் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்துள்ளார்.
இந்தநிலையில்தான் இந்தியப் பிரதமரை தவறாக வழிநடத்தியது எம்.கே. நாராயணன்தான் என்று விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
புதுடெல்லியிலிருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் அனுப்பிய தகவலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
நேருவுக்கு கிருஸ்ணமேனன் தவறாக வழிகாட்டி இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை சீரழித்தது போலவே மன்மோகன் சிங்கை எம்.கே.நாராயணன் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரு விடயங்களை விக்கிலீக்ஸ் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முதலாவது தீவிரவாதிகள் விடயத்தில் எம்.கே.நாராயணன் மென்போக்கை கடைப்பிடித்தார் என்பது.
மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய ஹெட்லியை அமெரிக்கா விலிருந்து விசாரணைக்காக இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் இவருக்கு அக்கறை இருக்கவில்லை என்கிறது விக்கிலீக்ஸ்.
மும்பைத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியை இந்தியாவுக்குக் கொண்டுவர அக்கறை செலுத்தவில்லை என்ற தகவல் எம்.கே. நாராயணனை சர்ச்சைக்குரிய ஒருவராக மாற்றியுள்ளது.
அடுத்து இலங்கை விவகாரத்தில் அவரே தமிழர்களுக்கு விரோதமான நிலைப்பாடை எடுக்கக் காரணமானவர் என்கிறது மற்றொரு தகவல்.சீனாவைக் காரணம் காட்டி, இந்தியப் பிரதமரை இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வைத்தது இவர் தானாம்.
ஆனால், போரின் இறுதிக்கட்டத்தில் இந்திய - இலங்கை அரசுகள் இணைந்து உருவாக்கிய கூட்டுக் குழுவில் எம்.கே.நாராயணனும் ஒருவராக இருந்தார்.
போரின் அத்தனை இரகசியங்களையும் அறிந்து வைத்துள்ள இவர் இலங்கையைக் காப்பாற்றும் நகர்வுகளை மேற்கொண்டார் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம் செய்து விட்டதாக மத்திய அரசு மீது இந்திய எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகின்றன.
இத்தகைய நிலையில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மத்தியில் இத்தகைய தகவல் பரிமாறப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது.
இலங்கை விவகாரத்தில் சீன இந்திய செல்வாக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உறுதியாகவே தெரிகிறது.
தமிழர்கள் பக்கத்தின் நியாயங்கள் புரிந்து கொள்ளப்படாமல் போனது அல்லது எடுபடாமல் போனதற்கு இதுவே காரணமாகியுள்ளது.
எம்.கே. நாராயணன் எவ்வாறு வழி காட்டியிருந்தாலும், அதற்கு ஒரு உந்துதலான ஒரு விடயமாக சீனா இருந்துள்ளது.
தமிழர் பக்கம் இந்தியா நின்றால், இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாய்ந்து விடும், சீனா அங்கு காலூன்றி விடும் என்ற அச்சம் தான் இதற்குக் காரணம்.
இன்னொரு விக்கிலீக்ஸ தகவலில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த மேற்குலகின் அழுத்தங்களால்தான் சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்து விட்டதாக இந்தியா கருதுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர்களில் ஒருவராக இருந்த திருமூர்த்தி என்பவரே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இவரும் இலங்கை விவகாரத்தில் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, சீனாவின் ஆட்டத்துக்கேற்ப ஆடுகின்ற ஒரு பொம்மையாகவே இந்தியா மாறத் தொடங்கி விட்டது என்பதை விக்கிலீக்ஸ் தகவல்கள் அம்பலப்படுத்துகின்றன.
சீனாவை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா மற்றெல்லாக் காரணங்களையும் புறக்கணித்து விட்டு சீனாவை முறியடிக்கின்ற வியூகத்துக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
இது நிகழ்காலத்தில் நன்மைகளைத் தேடித் தருகிறதோ இல்லையோ, நீண்டகால நோக்கில் ஆபத்தானது.
ஏனென்றால், நிரந்தரமான நண்பர்களைக் கூட அற்பமான விடயங்களுக்காக பகைத்துக் கொள்ளும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளி விட்டுள்ளது சீனா.
தமிழர்கள் விடயத்திலும் இந்தியா அவ்வாறு தான் முடிவுகளை எடுத்துள்ளது.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten