பாடசாலைக்குச் சென்ற 16 வயது மாணவியை இடைமறித்த இருவர், மாணவியின் நெஞ்சுப் பகுதியில் கூரிய பிளேட்டினால் கீறி காயத்தை ஏற்படுத்தியதுடன் கையில் நகத்தினால் கீறியும் காயம் ஏற்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 7.30 மணியளவில் இருபாலை வி.எச்.லேனில் இடம்பெற்றுள்ளது.
இதில் கோப்பாய் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் அரசடி வீதி இருபாலையைச் சேர்ந்த மாணவியே இனந்தெரியாத இருவரின் தாக்குதலுக்கு இலக்கானவர் ஆவார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
குறித்த பாடசாலை மாணவி வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்வதற்காகப் வி.எச் வீதி வழியாக வந்துள்ளார். குறித்த வீதியில் வயல் வெளிக்கு அருகில் அமைந்திருந்த பாழடைந்த வீட்டின் முன்பாக இரண்டு சைக்கிள்களுடன் இரு இளைஞர்கள் நின்றுள்ளனர்.இருவரும் காற்சட்டை மற்றும் ரீசேட் அணிந்திருந்ததுடன் தலைக்கவசமும் அணிந்திருந்தனர்.
குறித்த மாணவியை மடக்கிய இளைஞர்களில் ஒருவர் மாணவியை கழுத்தைப் பிடித்துக் கொண்டு வாயையும் பொத்தியுள்ளார். மற்றைய இளைஞர் கையில் வைத்திருந்த கூரிய பிளேட்டினால் மாணவியின் நெஞ்சுப் பகுதியில் தாறுமாறாகக் கீறி வெட்டியுள்ளார். அத்துடன் அவரது கையில் நகத்தினால் கீறியும் உள்ளனர். குறித்த மாணவி திமிறிய போதும் அவர்களது பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை.இந்த நேரத்தில் அந்த வழியால் வந்த கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பிடித்து வைத்திருப்பதைக் கண்டு கலைக்கவே குறித்த இரு இளைஞர்களும் ஒரு சைக்கிளில் ஏறித் தப்பித்துச் சென்றுள்ளனர். நெஞ்சுப் பகுதியில் கடுமையாகக் காயமடைந்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஏற்கனவே பாடசாலைக்கு மாணவர் வரவுகள் மர்ம மனிதன் பீதியால் குறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Geen opmerkingen:
Een reactie posten