சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது' என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
"ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.
ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது.
உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம்; முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது.
தெற்கு சூடானுக்கு வரவேற்பு: நம்மிடைய புதிய உறுப்பினராக பங்கேற்கும் தெற்கு சூடானுக்கு இந்தியாவின் சார்பில் வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிச்சயமற்ற சூழல்: சர்வதேச அரங்கில் இப்போது பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. உலக மயமாக்கல், ஒன்றை மற்றொன்று சார்ந்திருத்தல் போன்ற தத்துவங்கள் காரணமாக எல்லா நாடுகளுக்கும் தானாகவே பலன் கிடைத்துவிடும் என்ற நிலைமை முன்னர் இருந்தது. இப்போதோ தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றை அமல்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறைப் பயன்களைச் சமாளித்தே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பொருளாதார நெருக்கடி: சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. 2008-ல் தோன்றிய நிதி நெருக்கடி நிலை இன்னமும் தீரவில்லை. பல துறைகளில் இந்த நெருக்கடி மேலும் தீவிரம் அடைந்திருக்கிறது.
உலகப் பொருளாதாரத்துக்கே உந்து சக்தியாக விளங்கும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இப்போது வெவ்வேறு காரணங்களால் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதனாலேயே சர்வதேச அளவில் மூலதனச் சந்தையிலும் பங்குச் சந்தைகளிலும் நிலையற்ற தன்மையே காணப்படுகிறது.
வளரும் நாடுகளுக்கு பாதிப்பு: இதனால் வளரும் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம். அவை சர்வதேசச் சந்தைகளில் காணப்படும் நிலைமைகளால் உற்பத்தி இழப்பு, வேலை இழப்பு, வருமானம் இழப்பு ஆகியவற்றைத் தாங்கியாக வேண்டும், அத்துடன் உள்நாட்டில் நிலவும் பணவீக்க விகித அதிகரிப்பால் உயர்ந்துவரும் விலைவாசியையும் சமாளித்தாக வேண்டும். தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்வாலும் உலக நாடுகள் அனைத்துமே பாதிப்படைந்து வருகின்றன. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இப்போது எல்லா நாடுகளிலுமே அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலை உயர்வாலும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், பழங்கள், காய்கறிகளின் விலை உயர்வாலும் எல்லா நாடுகளிலுமே அரசுகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
அரசியல் கலகங்கள்: மேற்காசியா, வளைகுடா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள நாடுகளில் மக்கள் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். தங்களுடைய வறுமை, வேலையில்லா திண்டாட்டத்துக்குக் காரணம் ஆட்சியாளர்களின் அக்கறை இன்மையே என்று கருதுகிறார்கள்.
பயங்கரவாத அச்சுறுத்தல்: இதனிடையே பயங்கரவாதம் வேறு உலகின் பல்வேறு நாடுகளில் தலைதூக்கி வருகிறது. ஏராளமான அப்பாவிகள் இந்த பயங்கரவாதத்துக்கு இரையாகி வருகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய கட்டாயம் சர்வதேச சமூகத்துக்குக் குறிப்பாக இந்த பொதுச் சபைக்கு இருக்கிறது.
வறுமை, வேலையில்லா திண்டாட்டம்: வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் பல்வேறு துணைப் பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றன. சமூகங்களுக்கு இடையே சமமற்ற வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பில் ஒரு சில பிரிவினருக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுதல், அடிப்படை மனித உரிமைகளுக்குக்கூட வழியில்லாதிருத்தல் போன்றவற்றால் இளைஞர்கள் புரட்சிப் பாதைக்குச் செல்கின்றனர். இது பல நாடுகளுக்குப் பெருத்த தொல்லையாக உருவெடுத்து வருகிறது.
புதிய ஆபத்துகள்: சர்வதேச அளவில் வணிபம் அதிகரிக்க வேண்டிய கட்டத்தில், சர்வதேச வணிகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக இந்துமகா சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது. இந்தச் சவால்களையெல்லாம் நாம் சந்தித்தே தீர வேண்டும்.
பாலஸ்தீனப் பிரச்னை: பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு இன்னமும் தீர்வு காணப்படாமலேயே இருக்கிறது. இதனால் மத்திய ஆசியாவில் வன்முறையும் அரசியல் நிலையற்றப்போக்கும் தொடருகின்றன. பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகும் நாளை இந்தியா ஆவலோடு எதிர்நோக்குகிறது' என்றார் மன்மோகன் சிங். |
Geen opmerkingen:
Een reactie posten