இப்புதிய விதிமுறைகளானது 'தேவைக்கேற்ற விதமாக' சிறிலங்கா அதிபரால் அல்லது அவரின் உடன்புறப்புக்களில் மிகக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளரால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதும் வேதனைக்குரியதே.
இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் The Economist ஊடகத்தின் இணையத்தளத்தில் வெளியாகிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
அதன் முழுவிபரமாவது,
ஓகஸ்ட் 25ம் நாளன்று அனைத்து சிறிலங்கா நாடாளுமன்ற அமைச்சர்களையும் நாடாளுமன்றில் ஒன்றுகூடுமாறு அறிவித்ததற்கான காரணத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களிடம் கூறவில்லை.
சிறிலங்காவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்படவுள்ளது என அறிவிப்பதற்காகவே மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையைக் கூட்டவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
சிறிலங்கா அதிபர் ஒரு தொகுதி ஆவணப் பத்திரங்களைச் சுமந்து கொண்டு நாடாளுமன்றிற்குள் நுழைந்தபோது அதிபருக்கு நெருக்கமான அமைச்சர்களுக்குக் கூட என்ன நடக்கப் போகின்றது அல்லது அந்தப் பத்திரங்களில் என்ன இருக்கின்றது என்பது தொடர்பாகத் தெரிந்திருக்கவில்லை.
சிறிலங்காவானது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கடந்த முப்பது ஆண்டுகாலங்களுக்கும் மேலாக இருந்துவந்துள்ளது. மிக அண்மையில் அதாவது ஓகஸ்ட் 2005ல் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த தமிழரான லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
சிறிலங்காவில் உள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களிற்கு சுதந்திரமான தனிநாடு வேண்டிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மே 2009ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருந்தது.
இவ்வவசரகாலச் சட்டத்தின் கீழ் சிறிலங்கா இராணுவத்தினருக்குப் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அதாவது மக்களை விசாரித்தல், சந்தேகத்திற்கிடமானவர்கள் என்ற போர்வையில் மக்களைத் தேடுதல், கைதுசெய்தல், தடுத்துவைத்தல் போன்ற பலதரப்பட்ட அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. பொதுப் பேரணிகள், கூட்டங்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரமும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இவ்வவசரகாலச் சட்டத்தின் கீழிருந்த சில சரத்துக்கள் நீக்கப்பட்டும், சில திருத்தம் செய்யப்பட்டன.
செப்ரெம்பர் 12ம் நாளிலிருந்து ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது சிறிலங்கா அரசாங்கம் தனக்கான ஆதரவுச் சக்திகளைச் சம்பாதிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதாலேயே இந்த வேளையில் அதாவது இறுதி நேரத்தில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை எனவும் இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் சிறிலங்கா அதிபர் அறிவித்திருந்தார்.
ஆனால் எப்போது இது நீக்கப்படும் என்பது தொடர்பான சரியான திகதியை அதிபர் அறிவிக்கவில்லை. இந்நிலையில், அரசாங்க அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு திகதிகளை அறிவித்திருந்தனர்.
2006ல் ஆரம்பமான மகிந்தவின் ஆட்சிக் காலத்தின் போது ஏற்பட்ட சில குழப்பகரமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
என்ன நடக்கப் போகின்றது என்பதை 'மிகச் சிலரே' நன்கறிந்துள்ளனர் என அரசாங்கம் மீது வெறுப்புக் கொண்டுள்ள சில அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 'மிகச் சிலர்' என்பதற்குள் அதிபரின் இளவயது மகன் மற்றும் மூத்த அரசியல்வாதிகளான அதிபரின் மூன்று சகோதரர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.
அவசரகாலச் சட்டத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது நடைமுறைப்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவும் தெளிவின்மை உள்ளது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
அத்துடன் சிறிலங்கா இராணுவத்தினரோ அல்லது காவற்துறையினரோ கேட்கும் போது சாதாரண மக்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எந்தவேளையிலும் தமது அடையாள அட்டைகளை தம்முடன் வைத்திருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் தெளிவின்றிக் காணப்படுகின்றது.
எதெவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசாங்கமானது தன்னால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பாக பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என ஆர்வலர்கள், அரசாங்கம் மீது அழுத்தங் கொடுத்து வருகின்றனர். ஆனால் இது ஒருபோதும் செயற்படுத்தப்படவில்லை.
புலிகள் மீதான தடை மற்றும் தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்கள் தொடர்பான புதிய விதிமுறைகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறப்பாகச் சேர்க்கப்படவுள்ளன என சிறிலங்காவின் சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.
ஆனால் இப்புதிய விதிமுறைகளானது 'தேவைக்கேற்ற விதமாக' சிறிலங்கா அதிபரால் அல்லது அவரின் உடன்புறப்புக்களில் மிகக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செயலாளரால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதும் வேதனைக்குரியதே.
ராஜபக்ச தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பமாட்டார் எனக் கருதப்படுகின்றது.
"பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது தற்போது தொடர்ந்தும் அமுலில் இருப்பதால் அவசரகாலச் சட்ட நீக்கம் என்பது ஒன்று நீக்கப்பட்டு பிறிதொன்றிற்குள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றது. அதாவது இது முன்பள்ளியில் கற்கின்ற Tweedledee � Tweedledum என்கின்ற பாடல் கூறும் கருத்திற்கு ஒப்பானதாகும். இந்நிலையில் சிறிலங்கா அதிபர் முன்கதவு வழியான சில அதிகாரங்களை நீக்கி அதனைப் பின்கதவின் மூலம் சரிப்படுத்திவிடுவார் என்பது கவலைக்குரிய விடயமாகும். மகிந்தவும் அவரது அரசாங்கமும் தம்மைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சிறிதளவாக ஏதோ செய்துள்ளனர் என்பதே உண்மையாகும்" என சட்ட ஆர்வலரான கிசாலி பின்ரோ � ஜெயவர்த்தனா தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
puthinappalakai.com |
Geen opmerkingen:
Een reactie posten