தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 september 2011

அண்மையில் கடத்தப்பட்ட முன்னாள் போராளி யாழ். வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 06:50.45 AM GMT ]
 
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் இனந் தெரியாத 6 பேரினால் இந்த மாதம் 8ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு மயங்கிய நிலையில் மறுநாள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் யாழ்பருத்தித்துறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
செட்டித்தெருவைச் சேர்ந்த கந்தப்பு கோமிதன் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இந்த மாதம் 8ஆம் திகதி குறித்த நபர் தமது வீட்டிலிருந்து பி.ப. 2 மணியளவில், யாழ். நகரிலுள்ள ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு புறப்பட்டுள்ளார். நாளை தான் வருவேன் என்று கூறிவிட்டு புறப்பட்ட அவர் பருத்தித்துறை பஸ் டிப்போ நோக்கி சென்றுள்ளார்.
பருத்தித்துறை, மருதடிக்கும் வெள்ளவாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த நபர் வானொன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் கிளிநொச்சி கண்டாவளை பாலத்தினுள் மறுநாள் 9ஆம் திகதி வீசப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதி இராணுவத்தினர் அன்றைய தினமே கிளிநொச்சி வைத்தியசாலையில் கோமிதன் என்ற அந்தக் குடும்பஸ்தரை அனுமதித்துள்ளனர்.
தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோமிதன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அளித்த வாக்கு மூலத்தில்; பருத்தித்துறை மருதடிக்கும் வெள்ளவாய்க்காலுக்கு மிடையில் என்னை வானொன்றில் பலவந்தமாக இழுத்து ஏற்றினர்.
வானில் 6 பேர் வரை இருந்தனர். அவர்கள் எனக்கு சோடா போன்ற ஒன்றை குடிக்குமாறு பலவந்தமாகத் தந்தனர்.
அதைக் குடித்தபொழுது கசக்கவே துப்பினேன். பின்னர் அவர்கள் வலுக்கட்டாயமாக எனக்குப் பருக்கினர்.அதனை விருப்பமின்றி அருந்தினேன்.
அதன் பின்னர் நடந்தது எனக்குத் தெரியாது. பின்பு சேற்றுப் பகுதியில் இருப்பதை போன்று நான் உணர்ந்தேன்.
பின்னர் மெல்லமெல்ல தவழ்ந்து வீதிக் கரையை அடைந்தேன். பின்பு என்னை இராணுவத்தினர் வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து சேர்ந்தனர் என்றார்.
கோமிதனின் சொந்த இடம் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி. கிளிநொச்சி வைத்தியசாலையினால் மட்டக்களப்பிலுள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் வரமராட்சியிலுள்ள உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நபர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சுவாச செயலிழப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த வருடம் மே மாதமே இவரைத் தடுப்பு முகாமிலிருந்து இலங்கை அரசாங்கம் விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten