தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 september 2011

யாழ்ப்பாண மக்கள் செய்த பாவம்தான் என்ன...?

யாழ்.குடாநாடு தமிழ் பேசும் மக்களின் கோட்டையாக இருந்து வருகின்றது. அந்த கோட்டையைத் தகர்த்தெறியும் நோக்கில் சில விசமிகள் அதீத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் இந்த விசமிகளுக்குப் பின்னர் சகல அதிகாரம் கொண்ட ஒரு படையணி இயங்கி வருகின்றது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

அந்தளவுக்கு இந்த விசமிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் தமிழ் மக்களின் நிம்மதியைக் குலைத்து அவர்களைக் குகைக்குள் அடைக்கும் ஒரு திட்டமிட்ட நயவஞ்சகச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட நாளுக்கு மர்ம மனிதன், கிறிஸ் பூதம் என சில விசமிகளால் வேண்டத்தகாத செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருந்தது.

பின்னர் அதற்கு ஓய்வு கொடுத்து விட்டு தமிழர் பகுதிகளில் களவுகள் என்ற போர்வையில் அவர்களின் வாழ்வியலைச் சிதைக்கும் ஒரு சதிவேலை நடந்தேறுகின்றது.

இக் கொடுமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தமது வாழ்க்கைக் கொண்டு செலுத்தும் மனோ நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சறுக்கி வருகின்றனர்.

என்ன செய்வது? சிறுபான்மையினம் என்ற ஒரு சொற்பதத்தைக் கொண்டு அவர்கள் மீது சொல்லொண்ணாத் துன்பங்களைக் கட்டவிழ்த்து விடுவதென்பது நாம் என்ன பாவம் செய்தோம் எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழ் மக்களைக் கொண்டு செல்கின்றது.

இத்துணை துன்பங்களுக்கும் காரணம், எமக்கென்று ஒரு தலைமைத்துவம் இல்லை என்பதுடன், நாம் எமது பிரதிநிதிகள் எனப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தமது சொந்தப் பிரச்சினைகளை முதன்மைப்படுத்திக் கொண்டிருப்பதுவுமே காரணம் எனலாம்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக நடந்தேறி வருகின்ற அட்டூழியங்களை எதிர்த்து எந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர் எனக் கேள்வி எழுப்பினால், கையை விரிப்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.

சில வேளைகளில் யாழ்ப்பாணம் எங்கு இருக்கின்றது என்று கேட்டால் அவர்கள் தமது கையை விரித்துத் தெரியாது என்று கூறும் அளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றது.

களவுகள், கொலைகள், மர்ம மனிதன் என எல்லாவிதமான துன்ப, துயரங்களைத் தமிழ் மக்கள் மீது சுமத்தி, அதில் சுகம் காணுகின்றது அரசு. அதற்குத் துணைபோகின்றனர் எம்மில் சிலர்.
23 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten