முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவின் போது பலியெடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட கோழிகள், ஆடுகள் அனைத்தும் மேர்வின் சில்வாவின் ஆலய அராஜகத்தால் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
ஆலயங்களில் மிருகபலி எடுப்பது தவறு, அதைத் தடுப்பது இந்து மாமன்றத்தின் பொறுப்பு. ஆனால் அந்தத் தார்மீகப் பொறுப்பை எமது இந்து மாமன்றம் செய்யாதிருப்பது ஒரு கசப்பான விடயம்.
ஆனால் ஒரு சிங்கள அமைச்சர் இந்து ஆலயத்திற்குள் புகுந்து அங்கு நேர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த கோழிகள் மற்றும் ஆடுகளைப் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்வது என்பது, தமிழ் மக்களால் தமது பிரதிநிதிகள் என அனுப்பி வைக்கப்பட்டவர்களின் பலவீனத்தை எடுத்துக் காட்டி நிற்கின்றது.
இதேபோன்று ஒரு புத்த கோவிலில் தமிழினப் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் உட்புகுந்து மேற்போன்ற ஒரு செயற்பாட்டைச் செய்வாராக இருந்தால், அதற்கு அந்த ஆலய நிர்வாகம் அனுமதியளிக்குமாக இருந்தால், இன்று மேர்வின் சில்வா செய்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் நிலைமை அவ்வாறு அமையாது என்பது உறுதி.
இதேவேளை ஆலயங்களில் மிருக பலியைத் தடுப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கும் போது, அதனை ஒரு சிங்கள இனத்தையும் புத்த மதத்தையும் சேர்ந்த அமைச்சர் ஒருவர் அதனைத் தடுத்து நிறுத்தும் போது, நாங்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என மார்பு தட்டிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை?
ஆக! தமிழ் மக்களை ஏமாற்றி, நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்று விட்டு வெளிநாடுகளில் வெள்ளைக்காரன் வாழ்க்கை வாழும் இவர்கள் இருக்கும் வரைக்கும் மூன்றாம் தரப்புத் தலையிடுவதைத் தடுக்க முடியாதல்லவா?
|
Geen opmerkingen:
Een reactie posten