தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 20 september 2011

பான் கீ மூனுக்கு எதிராக சிறிலங்கா மீண்டும் போர்க்கொடி


ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அடிப்படையான இராஜதந்திர வழிமுறைகளை பின்பற்றத் தவறி விட்டதாக குற்றம்சாட்டி, கண்டனக் கடிதம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்த விவகாரத்திலேயே மீண்டும் பான் கீ மூனுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் திரும்பியுள்ளது.

பான் கீ மூனின் நடவடிக்கையைக் கண்டித்து, காட்டமான- கடுமையான வார்த்தைகளினால் ஆன கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பி வைக்குமாறு நியுயோர்க்கில் உள்ள, ஐ.நாவுக்கான தனது வதிவிடப் பிரதிநிதிக்கு சிறிலங்கா அரசாங்கம் பணித்துள்ளது.

பான் கீ மூன் மரபுகளுக்கு மாறாக நடந்து கொண்டுள்ளதை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இந்தக் கடிதம் அமைய வேண்டும் என்றும் பாலித கொஹன்னவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பான் கீ மூன் இந்த அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளது சிறிலங்காவுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்துக்குத் தெரியாமலேயே இந்த விவகாரம் இருட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நிபுணர்குழு அறிக்கையை வெளியிட்ட பின்னர், அடுத்த கட்டம் குறித்து அனைத்துலக சமூகம் முடிவு செய்யட்டும் என்று கூறியிருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன், அதற்கு மாறாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி விமர்சித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐ.நா கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பான் கீ மூன் எடுத்துள்ள முடிவு தொடர்பாக சிறிலங்கா அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ள போதும், நிபுணர்குழுவின் அறிக்கை ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட பின்னரே சிறிலங்கா தூதரகத்துக்கு தகவல் சொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

அதற்கு முன்னதாக ஐ.நா முறைப்படி எந்தத் தகவலையும் தரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
18 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten