தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 september 2011

மகளை கூட்டிச்சென்று முதலில் யாழ்ப்பாணத்தைக் காட்டும்! சரவணபவன் எம்.பிக்கு மகிந்த அறிவுரை!

[ வெள்ளிக்கிழமை, 09 செப்ரெம்பர் 2011, 01:54.43 PM GMT ]
வடக்கிலும் கிழக்கிலும் கிறிஸ் மனிதரால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து மகிந்த ராஜபக்சவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று மாலை நடைபெற்றது. இச்சந்திப்பின் போதே யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். 
இச்சந்திப்பில் தமிழ்த் தரப்பில் வீ.ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன்,செல்வராஜா, சுமந்திரன், சரவணபவன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சுசில் பிறேம்ஜயந்த, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் பொலிஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வடக்கு கிழக்கில் கிறிஸ் மனிதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பு எம்பிக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு எடுத்துரைத்துள்ளனர்.
இச் சந்திப்பின் போது கிறிஸ் மனிதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் கைது செய்யப்பட்டு இதுவரை விடுதலை செய்யப்படாதவர்களை விடுதலை செய்யும்படி கேட்டிருந்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் மகிந்த கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிஸ் மனிதனின் அட்டகாசங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துக் கூறிய போது,
சடுதியாக குறிக்கிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சரவணபவன் எம்.பியைப் பார்த்து
கடந்த வாரம் நடந்த நிகழ்வொன்றில் உமது மகளைச் சந்தித்த போது யாழ்ப்பாணம் எப்படி உள்ளது? எல்லாம் நன்றாக இருக்கிறதா? எனக் கேட்டேன். அதற்கு உமது மகள் கூறினார், நான் இன்னும் யாழ்ப்பாணம் போகவே இல்லை என்று. தயவு செய்து உங்களின் மகளை யாழ்ப்பாணத்திற்கு கூட்டிக் கொண்டு போய் முதலில் யாழ்ப்பாணத்தைக் காட்டும்’ என்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
இவ்வாறு மகிந்த கூறிய போது கூட்டமைப்பின் எனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சற்று நேரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இது தொடர்பில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டு பூரணமாக விசாரணை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததைத் தொடர்ந்து, எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

Geen opmerkingen:

Een reactie posten